இப்பூவுலகில் ஸம்ஸாரமென்னும் கொடியதான பாலை நிலத்தில் கட்டுண்டு அவஸ்தைப் படும் சேதனர்களைத் தன் குளிர்ந்த கடாக்ஷத்தால் நனைத்து உஜ்ஜீவிக்க திருவுள்ளம் கொண்ட எம்பெருமான், பல க்ஷேத்ரங்களில் அர்ச்சாமூர்த்தியாய் எழுந்தருளி எல்லோருக்கும் பொதுவாய் நின்று, நாம் பற்றுவதற்கு ஹேதுவாய், ப்ரத்யமக்ஷமாய் இன்றளவும் ஸேவை ஸாதித்துக் கொண்டிருக்கிறான். எம்பெருமானின் இந்த அர்ச்சா திருமேனியில் ஈடுபட்டு அவனருளிய மயர்வற மதிநலம் கொண்டு “திருக்கண்டேன் பொன் மேனி கண்டேன்” போன்ற இன்கவிகள் பாடியருளி, அவன் திருமேனி அழகுக்கு மேலும் மெருகூட்டினர் பரமகவிகளான நம் ஆழ்வார்கள். அவர்களுள் பிரதானமானவரும் ப்ரபந்நஸந்தானஜனகூடஸ்தருமான ஸ்வாமி நம்மாழ்வார் தம் அருளிச்செயல்கள் மூலம் அர்ச்சாரூபனான எம்பெருமானின் திருமேனியழகு அநுபவம் என்னும் (இந்திரியங்களுக்கான) விருந்துடன் அவன் திருவடியில் சரணாகதி என்னும் ஒப்பற்ற ஒரு (ஆத்மவிகாஸத்திற்கான) மருந்தையும் கலந்து கொடுத்து நம்மை உஜ்ஜீவிக்கச் செய்தார். அதேபோல அவரிட்ட வழியில் சென்று, “தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே” என்று தெளிந்து, ஆழ்வார் அறிவித்த சரணாகதி மார்க்கமே எல்லாருக்கும் உகந்தது என்று தம் ஸ்ரீஸூக்திகள் மூலம் உபதேஸித்தருளி சேதனர்களை வழிப்படுத்தி வானேற்றுவதையே தன் திருவவதார வைபவத்தின் தலையாய கர்தவ்யமாகக் கொண்டார் நம் தூப்புல் வள்ளல்.
இப்படி நித்ய நிரவதிக, ஸௌந்தர்யாதி, கல்யாணகுணவிசிஷ்டனான எம்பெருமானின் திருமேனியழகில் ஆழ்ந்த ஆழ்வாரும் நம் தூப்புல் குலமணியும் முறையே வேங்கடத்தானிடத்திலும், வரதனிடத்திலும் ப்ரபத்தி பண்ணுவதை இங்கே அநுபவிப்போம்:
ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி
வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்
தெழி குரல் அருவித் திருவேங்கடத்து
எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே ||
திருவாய்மொழி 3-3-1
“ஆரவாரிக்கின்ற ஓசையையுடைய அனேகமான தீர்த்த பெருக்குகளையுடைய திருவேங்கட மலையிலே மிகுந்த அழகு கொண்ட, தேஜோமயமான திருமேனியையுடைய எமது அப்பனின் அப்பனது அப்பனான மூலஸ்வாமியான திருமாலுக்கு நித்ய சேஷபூதரான நாமெல்லோரும், முடிவு பெறாத, எல்லாக் காலங்களிலும், எங்கும் கூடியேயிருந்து எத்தசையிலும் பற்றுடன் குறைவில்லாத கைங்கர்யங்களை செய்வோமாக.” என்று திருவேங்கடமுடையானிடம் ஸர்வவித கைங்கர்யங்களையும் பண்ண தாஸ்யமுபாகதரான ஆழ்வார் வேண்டுகிறார்.
ஸ்வாமி தேசிகனோவென்னில் ஆழ்வார் செய்யப்பாரிக்கும் வழுவிலா அடிமையை வரதனிடத்தில் பிரார்திக்கிறார்:
தேவிபூஷணஹேத்யாதிஜுஷ்டஸ்ய பகவம்ஸ்தவ |
நித்யம் நிரபராதேஷு கைங்கர்யேஷு நியுங்க்ஷ்வ மாம் ||
ஸ்ரீ ந்யாஸ தசகம் 6
“ஹே வரதா! பெரிய பிராட்டி, பூமிப் பிராட்டி, நீளா தேவி முதலிய தேவியர் உன்னைப் பிரியாது நின்று அன்புடன் கலந்து பரிமாறுகின்றனர். கிரீடம்-குண்டலம்-ஹாரம் முதலிய திவ்யாபரணங்கள் உன் திருமேனியைச் சார்ந்து விளங்குகின்றன. திருவாழி-திருச்சங்கு முதலிய திருவாயுதங்கள் உனக்குத் தொண்டு புரிகின்றன. இத்தகைய பெருமைகளை உடைய உனக்குச் சிறிதும் அபசாரம் கலவாத கைங்கர்யங்களை எப்போதும் செய்ய அடியேன் ஆவலுடையேன். உன் திருவுள்ளத்திற்குப் பாங்கான கைங்கர்யங்களை நியமித்து அடியேனைக் கொண்டு செய்வித்தருள வேண்டும்” என்று விண்ணப்பஞ்செய்கிறார்.
பரமபதமே கைங்கர்யஸாம்ராஜ்யம். அங்கே ஜகத்காரணத்வம் மற்றும் மோக்ஷப்ரதத்வம் ஆகிய இவற்றை சத்ர-சாமரங்களாகக் கொண்ட அதிபதியாய், “ஸதா பச்யந்தி சூரய:” என்று நித்யர்களால் ஸர்வ காலங்களிலும் ஆராதிக்கப்படும் ஆதிப்பிரானாய் வீற்றிருக்கிறான் ச்ரிய:பதி. பரத்வமே பிரதானமாகத் தலைக்கட்டும் அவனிடத்தில் பிரபத்தி பண்ணுவதே ஜீவர்களாகிய நமக்குப் பாங்காகும். காவலனாய், காரணனாய், நீதிவானனாய் அவனிருக்க ப்ரக்ருதி ஸம்பந்தம் விரோதமே என்று அலற்றிய ஆழ்வாரும் நம் ஆசார்ய ஸார்வபௌமனும் அர்ச்சாரூபியாய் எழுந்தருளியிருக்கும் பெருமாளுக்கு அடிமை செய்யப் பாரிப்பது “ஏரார் முயல்விட்டு காக்கைப்பின் போவதே?” என்பதுபோல எவ்வாறு பொருந்தும்? என்னில் – “ஸத்யம் ஞானம் அனந்தம் ப்ரஹ்ம” என்றும் “சோ||ஷ்ணுதே ஸர்வாந் காமா||ந் ஸஹ” என்றும் ஸ்ருதி உத்கோஷிக்கிறது. பரமபதத்தில் நித்யஸூரி நாயகனாய், நித்ய விபூதி நிர்வாஹகனாய் தன் தேவிமார்களோடு பாம்பணையில் பள்ளி கொண்டிருக்கும் அப்ராக்ருத பாரதத்வமான பிரானிடத்தில் பரத்வ குணாநுபவமே பிரதானம். ஆனால் ஆழ்வாரோ “சுட்டுரைத்த நன்பொன் உன் திருமேனி ஒளியொவ்வாது” என்றும் “எத்திறம்! உரலினொடு இணைந்திருந்தேங்கிய எளிவே” என்றும் அவன் விபவ-அர்ச்சா நிலையை எண்ணியல்லவோ மோஹித்துக் கிடந்தார்! ஸ்ரீவைகுண்டத்தில் ஆதிமுதல்வனின் திருக்கல்யாண குணாநுபவம் என்பது பகலிலே இட்ட விளக்கு போல. ஜீவர்களாகிய நமக்கு அவை கை விளக்காய் நிறம்பெற்று நம்மை உஜ்ஜீவிக்கச் செய்வது அர்ச்சாவதாரத்தின் மூலமாகத்தானே. ஆக இந்த அர்ச்சாவதாரப் பெருமானிடம் சரணாகதி பண்ணுவதல்லவோ நமக்குப் பொருந்தும் என்பது ஆழ்வார் மற்றும் ஸ்வாமி தேசிகனின் திருவுள்ளம்.
இவ்விரு சரணாகதியும் வேறு வேறு திவ்யதேச எம்பெருமான்களிடம் செய்யப்பட்ட போதிலும் இவற்றிற்கு உள்ள ஒற்றுமையை சற்றே ஆராய்ந்து பார்ப்போம்.
திருமலையப்பன் மற்றும் தேவப்பெருமாள் இவ்விருவரும் குன்றின் மேலிட்ட விளக்காய் வீற்றிருக்கின்றனர். அகத்தில் இட்ட விளக்கு வீட்டின் இருளைப் போக்குவது போல, சப்தகிரி, ஹஸ்தகிரி என்ற குன்றுகளின் மேலிட்ட இவ்விரு விளக்குகளும் அநாதியான நம் கர்ம வினைகளை ஒழித்து நம்மை வானேற வைக்கின்றன. “வேங்கடங்கள் மெய்ம்மேல் வினை முற்றவும்” என்று ஆழ்வாரும் “அத்திகிரி பத்தர் வினை தொத்தற அறுக்கும்” என்று நம் கவிஸிம்ஹமும் ஸ்தாபிப்பது இங்கே அநுஸந்திக்கத்தக்கது.
மலையப்பனை “குன்றமேந்தி குளிர் மழை காத்தவன்” என்று ஆழ்வாரும் பேரருளாளனை “மத்துறு மிகுத்த தயிர் மொய்த்த வெணெய் வைத்தது உணும் அத்தன்” என்று ஸ்வாமி தேசிகனும் சொல்லி திவ்யமங்கள ஸ்வரூபத்தில் வேறுபட்டாலும் கண்ணனே இவ்விரு எம்பெருமான்களாக இப்பூவுலகில் எழுந்தருளியிருக்கிறான் என்று தலைகட்டுகின்றனர்.
அடுத்து ஒழிவில் காலமெல்லாம்- நித்யம் மற்றும் வழுவிலா அடிமை – நிரபரதேஷு கைங்கர்யேஷு என்ற ஷப்தங்களுக்கு உள்ள ஒற்றுமையை ஸேவிப்போம்:
இங்கே ஸ்வாமி தேசிகன் நித்யம் என்று காட்டுவது நாள், பக்ஷம், மாஸம், நாடி, வினாடி என்றில்லாமல், லீலா விபூதி, நித்ய விபூதி என்ற பேதமில்லாமல், பரத்வம், விபவம், அர்ச்சை என்று எம்பெருமானின் நிலை எதுவாக இருப்பினும் ஸர்வதேச, ஸர்வகால, ஸர்வாவஸ்தைகளிலும் அவனை க்ஷணக்காலமும் பிரியாமல் அவன் கூடவே இருந்து அடிமை செய்ய வேண்டுமென்பதை. ஆழ்வார் காலமெல்லாம் என்று கூறாமல் ஒழிவில் காலமெல்லாம் என்று கூறுவது இனிமேல்வரும் காலங்களில் மட்டுமல்லாமல் கீழ்க்கழிந்த காலங்களையும் சேர்த்து அநாதியான காலமெல்லாம், அதாவது இதற்கு மேல் முடிவு பெறாத காலமெல்லாம் அடிமை செய்வதென்பதே இதற்கு நேர்ப்பொருள். கழிந்து போன காலத்தை மீட்கமுடியாதாதலால் இந்த அர்த்தம் எப்படிப் பொருந்துமெனில் இப்பொழுது கிட்டிய பரமபாக்யத்தினால் கீழே வெகுகாலம் வீணாகப் கழிந்துவிட்டதே என்கிற துக்கம் இல்லாதபடி அதனைமறந்து ஆனந்தமயமாகக் கைங்கர்யம் பண்ணப் பாரிக்கிறாரென்பதுவேயாம்.
“வழுவிலா அடிமை” என்பதற்கு கேடில்லாத, அஹங்கார மமகாரங்கள் கலவாத ஸாத்விக த்யாகத்துடன் செய்யக்கூடியதான கைங்கர்யம் என்று பொருள். இதையே ஸ்வாமி தேசிகன் “நிரபராதேஷு கைங்கர்யேஷு” என்று தலைக்கட்டுகிறார்.
சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம்
நின்றால் மரவடியாம் நீள்கடலுள் – என்றும்
புணையா மணிவிளக்காம் பூம்பட்டாம் புல்கும்
அணையாம் திருமாற்கு அரவு
முதல்திருவந்தாதி – 53
என்றபடி பரமபதத்தில் எந்நேரமும் எம்பெருமானின் திருமேனியைத் தாங்கிக்கொண்டிருந்தாலும், அனந்தாழ்வானுக்கு “அஹம் ஸர்வம் கரிஷ்யாமி” என்று சக்ரவர்த்தித்திருமகனுக்கு அனைத்து கைங்கர்யங்களையும் தன் திருக்கைத் தொட்டு செய்ய வேண்டும் என்கிற பேரவா!
பரவாநஸ்மி காகுத்ஸ்த த்வயி வர்ஷசதம் ஸ்திதே |
ஸ்வயம் து ருசிரே தேசே க்ரியதாமிதி மாம் வத ||
ஆரண்யகாண்டம் 15-7
பவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா கிரிஸாநுஷு ரம்ஸ்யதே |
அஹம் ஸர்வம் கரிஷ்யாமி ஜாக்ரதஸ் ஸ்வபதஸ்சதே ||
அயோத்யாகாண்டம் 31-25
என்று தான் ஸ்வதந்த்ரன் அல்லன், ஸ்வதந்த்ரமாக செய்யும் கைங்கர்யம் எதுவும் நிறம் பெறாது என்று ஸ்தாபித்து பெருமாளிடத்தில் சேஷத்வத்தை வெளிப்படுத்தினார் திருவானந்தாழ்வான். இவ்வாறு ஒழிவில் காலமெல்லாம் எம்பெருமானுடனாய் மன்னி அவனுக்கு நிரபராதேஷு கைங்கர்யங்கள் செய்வதாலேயே சேஷர்களுக்கெல்லாம் சேஷன் ஆதிசேஷன் என்னும் பெரும் பேற்றைப் பெற்றார்.
போஜனபரனாய் இருப்பவனுக்கு எப்படி அனைத்து பதார்த்தங்களையும் சுவைக்க வேண்டும் என்கிற தீரா ஆசை ஏற்படுமோ அதுபோல கைங்கர்யபரர்களான சடகோபனுக்கும் ஸ்வாமி தேசிகனுக்கும் இளையாழ்வான் “தனக்கேயாக எனைக் கொள்ளும்” என்று காட்டிய நித்ய நிருபாதிக சேஷத்வத்தை அடியொற்றி எம்பெருமானுக்கு ஸர்வவித கைங்கர்யங்களையும் இங்கேயே பண்ண வேண்டும் என்பதிலே மிகுந்த உத்ஸாஹம்.
யான் அறியும் சுடராகி நின்றேன் மற்றும் யாதும் அலேன்
வான் அமரும் திருமால் அடியேன் மற்றோர் பற்றும் இலேன்
தான் அமுதாம் அவன் தன் சரணே சரண் என்றடைந்தேன்
மானம் இலா அடிமைப் பணி பூண்ட மனத்தினனே
அம்ருதரஞ்சனி 14
வேறொரு வஸ்துவிலும் உரிமைகொள்ளாமல், ஸ்ரீமந்நாராயணனுக்கே எப்போதும் அடியன் என்ற உறுதி கொண்டு பத்தர்களாக அர்ச்சாரூபனுக்கும் முத்தர்களாக பரமபதநாதனுக்கும் என்றென்றும் குற்றமற்ற, அவனுகந்த கைங்கர்யங்கள் செய்வதே ஜீவஸ்வரூபத்திற்கு லக்ஷணம் மற்றும் லக்ஷியம். அதன் மூலமாகவே சேஷக்ருத்யம் ஸித்திக்கும் என்று நிர்தாரணம் பண்ணுகிறார் ஸ்வாமி தேசிகன். சேதன லக்ஷணம் என்ன என்பதை மாறனும் நம் கவிஸிம்ஹமும் தங்கள் திருவவதார வைபவத்தின் மூலமாகவும் ஸ்ரீ ஸூக்திகள் மூலமாகவும் நமக்குக் காட்டுகின்றனர். அவர்கள் காட்டிய வழியில் சென்று நாமும் ப்ரபத்தி என்னும் உயர்ந்த புருஷார்த்தத்தை அநுஸந்தித்து இப்புவியில் இருக்கும் வரையில் எம்பெருமான் கைங்கர்யங்களிலேயே ஈடுபடுவோம்.
Leave a Reply