வேதங்களின் சிரோபாகமான உபநிடதங்களை (ச்ருதீநாமுத்தரம் பாகம்) ஆதாரமாகக் கொண்டு ஸ்ரீவ்யாஸபகவான் ப்ரஹ்மஸூத்ரத்தில் பக்தி-ப்ரபத்தி என்ற இரு உபாயங்களால் எம்பெருமானை அடையலாம் என்று காட்டினார். அவர் காட்டிய இவ்வழியே நல்வழி என்று பரமதபங்கத்தில் ஸ்வாமி தேசிகன் ஸ்தாபிக்கிறார்.
வையமெலாம் இருள் நீக்கு மணிவிளக்காய்
மன்னிய நான்மறைமௌலி மதியே கொண்டு
மெய்யலது விளம்பாத வியாசன் காட்டும்
விலக்கில்லா நல்வழியே விரைந்து செல்வீர் ||
(பரமதபங்கம் – 52)
என்றபடி வேதாந்தம் “ரத்னதீபமாய்” நின்று உலகிலுள்ள அஜ்ஞானமாகிய இருளைப் (பொய் நின்ற ஞானம்) போக்குகின்றது என்று ஸ்வாமி தேசிகன் மேலும் ஸ்தாபிக்கிறார்.
எம்பெருமானுடைய ஸ்வரூப-ரூப-குண விஷேஷனங்களை ஸர்வோத்தமமான மூன்று திருவந்தாதிகள் மூலம் மாலைகளாகத் தொடுத்து, அத்தீபத்தை முதன்முதலாக அநாதியான தமிழ் பாஷையில் பாசுரமிட்டுத் தெளியாத மறை நிலங்களைத் தெளியவைக்கும் ஓர் அதியத்புதமான திருவிளக்கை ஏற்றினர் முதல் மூன்று ஆழ்வார்களான பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார் மற்றும் பேயாழ்வார். அவர்களுக்குப் பின் திருவவதரித்த ஆழ்வார்கள் மற்றும் ஆசார்யர்கள், ஸ்ரீவ்யாஸபகவானும் முதல் ஆழ்வார்களும் காட்டிய வழியில் சென்று, அவ்விளக்கிற்கு மேன்மேலும் எம்பெருமானின் திவ்ய மங்கள அநுபவம் என்னும் நெய்யைச் சேர்த்ததால் இன்றுவரை அவ்விளக்கானது கொழுந்துவிட்டு எரிந்துகொண்டு நம்மிடத்திலுள்ள அஜ்ஞானமென்னும் இருளைப் போக்கிக் கொண்டிருக்கிறது.
ஆங்காங்கே கோயில்களில் அர்ச்சாவதார மூர்த்தியாய் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானைத் தர்சனம் செய்துகொண்டு வந்த இம்மூன்று ஆழ்வார்களையும் எம்பெருமான் ஒரே காலத்தில் ஓரிடத்தில் ஒன்று சேர்க்க திருவுள்ளம் பற்றி மூவரையும் திருக்கோவலூரில் வீற்றிருக்கும் திருவிக்ரமப்பெருமானின் திருப்பதியில் ஒன்றுசேர்த்து அவனநுபவத்தில் ஆழ்த்தினான். அன்றைய தினம் இரவில் பெருமழை பெய்ததால் பொய்கையாழ்வார் அங்கிருந்த ம்ருகண்டு மகரிஷியின் ஆச்ரமத்திலே இடைகழியில் ஸயனித்திருந்தார். சற்று நேரத்தில் அங்கு வந்து சேர்ந்த பூதத்தாழ்வார் தனக்கும் கொஞ்சம் இடமுண்டோ என்று வினவ அதற்குப் பொய்கையாழ்வார் “ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம்” என்று கூறி வரவேற்றார். பிறகு அவ்வாறே பேயாழ்வாரும் வினவ, “இருவர் உட்காருமிடம், மூவர் நிற்கப் பாங்காம்.” என்று பணிந்து வரவேற்றார்கள். இதற்காகவே காத்துக்கொண்டிருந்த எம்பெருமான் இவர்களுக்கு இடையில் நான்காவதாக வந்துப் புகுந்துகொண்டு, பொறுக்கவொண்ணாதபடி ஓர் நெருக்கத்தை ஏற்படுத்தினான். இப்படி நெருக்குவது இவர்களுடைய சேர்த்தியிலே உவந்த நெடுமால் தான் என்று நன்கறிந்த மூவரும், லோகக்ஷேமத்திற்க்காகப் ப்ரபந்தங்களை இவர்கள் மூலம் வெளியிட விரைந்த எம்பெருமானின் திருவுள்ளத்தை உணர்ந்தனர்.
ப்ரத்யக்ஷமாய் ஸேவை ஸாதிக்கும் பெருமானைக் கண்ணால் கண்டு ஸேவிக்க அகல் விளக்கே போதுமானது. ஆனால் “நடுவில் இவர் ஒருவரும் என்று அறியா வண்ணம்” ஸ்தூலரூபமாய் எழுந்தருளியிருக்கும் பெருமானை ஸேவிக்க இதுவரை யாரும் ஏற்றாத ஒரு ஆச்சர்யமான விளக்கை அல்லவா ஏற்ற வேண்டும்!
முதலில் பொய்கைப்பிரான் திருக்கோவலூர் எம்பெருமானான நெடுமாலைக் காணச் சாதாரணமான விளக்கு போதாதென்று திருவுள்ளம் எண்ணி, அவனுருவுக்குத் தகுமாறு ஸூர்யனை விளக்காக்கி, அதற்கேற்ப கடலையும் வையத்தையும் நெய்யாகவும் தகளியாகவும் ஆக்கி, எம்பெருமானைத் தவிர்ந்த பொருள்களனைத்தும் அவனுடைமைகள்; அவற்றிற்க்கெல்லாம் அவன் தலைவன் என்ற பரஜ்ஞானம் கொண்டு
வையம்தகளியா வார்கடலே நெய்யாக
வெய்யகதிரோன் விளக்காக செய்ய
சுடராழியானடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடராழி நீங்குகவே என்று ||
முதல் திருவந்தாதி – 1
என்றொரு ஆச்சர்யமான விளக்கை ஏற்றி நூறு பாசுரங்களைப் பாடியருளினார்.
ஸூர்யன் எவ்வாறு தன்னையும் காட்டி மற்ற வஸ்துக்களையும் காட்டுகின்றானோ அது போன்றதல்லவோ ஞானம் (யதா ஸூர்யஸ் ததா ஜ்ஞாநம்) என்பதனால் ஸூர்யனைக் கொண்டு எம்பெருமானை ஊஹிக்கலானார். ஸூர்யன் விளக்காகவேண்டுமானால் அதற்கு நெய்யும் தகளியும் வேண்டுமே என ஆலோசித்து “கதிரவன் கனைகடல் முளைத்தனனிவனோ” என்றபடியால் கடலை நெய்யாகப் பாவித்து, கடல் வையத்தைச் சூழ்ந்திருப்பதாலே இந்த வையத்தையே அகலாகக் கருதினார். ஒப்பற்ற அவ்விளக்கைக் கொண்டு கண்ணாற்கண்டதுபோல் எம்பெருமானை அனுமானத்தால் விசதமாயறிந்தார். ப்ரம்மம் சூன்யமானது என்று கூறும் நாஸ்திக மதங்களை மறுத்து அவன் அசாதாரணமான திருமேனியை உடையவனாயும், திருவாழி முதலிய திவ்ய ஆயுதங்களை ஏந்தினவனாயும் இருக்கின்றான் எனக் கருதினார். ஆழ்வாருக்கு எம்பெருமான் அருளிய மயர்வற மதிநலத்தால், அவனுக்குத் தாம் அடிமைப்பட்டவர் என்பது நன்கு புலப்பட்டு, அதற்க்கேற்ப முதலில் அவன் திருவடிகளைப் பற்றி நின்றார்.
ஸ்வாமி பொய்கையாழ்வார் வையம், வார்கடல், வெய்யகதிரோன் என்ற விஷயங்களைக் காட்டிப் படிப்படியாக எல்லா வஸ்துக்களிலுமுள்ள தோஷங்களைக் காட்டும் நோக்காலே சொல்மாலையைச் சூட்டினார். அருகிலிருந்து கேட்டுகந்த ஸ்வாமி பூதத்தாழ்வார் தோஷங்கள் அறியப் பெற்றதால் விஷயப்ராவண்யம் விலகி, பரமாத்மப்ராவண்யம் நிலைத்து, அவன் வைலக்ஷண்யத்தை உணர்ந்து, அவனிடத்தில் உண்டான அன்பின் வெளிப்பாடாக,
அன்பேதகளியா ஆர்வமேநெய்யாக
இன்புருகுசிந்தையிடுதிரியா நன்புருகி
ஞானச்சுடர்விளக்கேற்றினேன் நாரணற்கு
ஞானத்தமிழ்புரிந்தநான் ||
இரண்டாம் திருவந்தாதி – 1
என்று தொடங்கி நூறு பாசுரங்களைப் பாடியருளினார்.
“நல்லறிவை அளிக்கும் தமிழை விரும்பியுள்ள பூத்ததனாகிய நான் நாராயணனிடத்தில் ஸ்நேஹமே அகலாகவும், அவனை அநுபவிப்பதில் உள்ள ஈடுபாடே நெய்யாகவும், அவ்வநுபவ க்ரமத்தினால் உண்டாகும் களிப்பினால் கரைந்திருக்கும் மனம் திரியாகவும், ஞானஸ்வரூபமான ஆத்மா உருகப்பெற்று எம்பெருமானான நாராயணனுக்கு பரபக்தியான ஒளி நிறைந்த ப்ரதீபத்தை ஏற்றி வைத்தேன்” என்றருளினார்.
அன்பாவது ஸ்நேஹம். நாராயணனிடத்தில் அந்த ஸ்நேஹம் உண்டாகும்பொழுது அவனை மேலும் அநுபவிக்க வேண்டுமென்கிற ஆர்வம் எழும். அவ்வார்வமிருந்தால் யோகதசையில் மனத்தை அவனிடமே பதியவைப்பதென்ற சிந்தை கூடும். இவ்விரண்டும் திரிகளாகக் கொண்டு ஏற்றப்படும் விளக்கானது இன்பமாக மேன்மேலும் உருகா நிற்கும். இவ்வளவும் ஏற்பட்ட பிறகு பரபக்தி எனப்படும் ஞானம் உதித்து அதுவே நம் அகவிருளனைத்தையும் விலக்கும். இவ்வனைத்தும் நாராயணன் விஷயமானபோதுதான். வேறு தேவதையைப் பற்றிய அன்பு முதலியன உள்ளவர்க்கு உள்ளத்தில் அஜ்ஞானமே பரவா நிற்கும் என்று தலைக்கட்டினார்.
மநந பர்யந்தமான ஞானத்தை வையந்தகளியில் பொய்கையாரும், த்யானமென்னும் பக்தியை அன்பேதகளியில் பூதத்தாரும் அருளிச்செய்ய, அதன்மேல் பிறக்கும் பரஜ்ஞானமென்றப் பரிபூர்ண ஸாக்ஷத்காரத்தைத் தொடங்கிப் பேயாழ்வார் திருக்கண்டேன் நூற்றந்தாதி அருளிச்செய்கிறார்.
திருக்கண்டேன் பொன்மேனிகண்டேன் திகழும்
அருக்கனணிநிறமும்கண்டேன் செருக்கிளரும்
பொன்னாழிகண்டேன் புரிசங்கம்கைக்கண்டேன்
என்னாழிவண்ணன்பால் இன்று ||
மூன்றாம் திருவந்தாதி – 1
“அதுவரை ஸ்தூலகாரமாய் ஸேவையளித்திருந்த என்னப்பனை செவ்வனே கண்டு களிக்கப்பெற்றேன். புருஷகாரமாயுள்ள பெரிய பிராட்டியாரை அவனது திருமார்பில் ஸேவிக்கப்பெற்றேன். அவளது சேர்த்தியால் கடல்வண்ணனான அவனது திருமேனி பொன்னிறமாயிருப்பதைக் கண்டேன். ப்ரகாசிக்கின்ற ஸூர்யனுடையது போன்ற அழகிய நிறத்தையும் கண்டேன். போரில் எழா நின்ற அழகிய திருவாழியைக் கண்டேன், திருக்கையிலே வலம்புரி சங்கத்தைக் கண்டேன்” என்று எம்பெருமானின் திவ்யமங்கள ஸ்வரூபத்தின் மேன்மையை நேரில்கண்டு வியந்தருளுகிறார்.
இவ்வைபவத்தை ஸ்வாமி தேசிகன் தேஹளீச ஸ்துதியில் மிக ஆஸ்சர்யமாக மங்களாசாஸனம் செய்து அநுபவிக்கிறார்.
தீபேந கேநசிதசீதருசா நிசீதே,
ஸ்நேஹோபபந்நபரிசுத்தகுணார்பிதேந |
தஹ்ராவகாசநிபிடம் தத்ருசுர்பவந்தம்
ஸ்வாத்யாய யோக நயநா: சுசய: கவீந்திரா: ||
தேஹளீச ஸ்துதி-6
வேதத்தையும் த்யானத்தையும் கண்களாகக் கொண்டவர்களாய், மனத்தூய்மையுடையராய் சிறந்த கவிகளான முதலாழ்வார்கள் நள்ளிரவில் குளிர்ந்த ஒளியையுடைய சந்திரனல்லாததாய் விலக்ஷணமானதாய் பக்தியென்னும் நெய்யுடன் கூடியதாய் தூய்மையான ஸத்வகுணத் திரியால் ஏற்றப்பட்ட தீபத்தால் அதியற்பமான இடத்தில் நெருக்கிக் கொண்டிருக்கிற உன்னைக் கண்டார்கள் என்று திருக்கோவலூர் தேஹளீசப் பெருமாளை ஸேவித்தருளுகிறார்.
மேலும் முதலாழ்வார்களாலேயே திருக்கோவலூர் எம்பெருமானான த்ரிவிக்ரமனின் ஸௌசீல்யம் வெளிப்பட்டது என்பதனை
காஸாரபூர்வகவிமுக்யவிமர்த்தஜந்மா
பண்ணாதடேக்ஷூஸுபகஸ்ய ரஸோ பஹூஸ்தே |
த்வத்பாதபத்மமதுநி த்வதநந்யபோக்யே
நூநம் ஸமாச்ரயதி நூதநசர்க்கராத்வம் ||
தேஹளீச ஸ்துதி-7
என்கிற ஸ்லோகம் மூலமாக அழகிய கவிநயத்துடன் ஸாதிக்கிறார்.
ஆற்றின் கரையில் பயிராகிச் செழித்த கரும்பை ஆலையில் இட்டுப் பிழிந்து எடுக்கும் சாறானது மிக இனியதாயிருக்கும். அது தாமரையினின்று பெரும் உயர்ந்த தேனுடன் கலந்துவிட்டால் அதன் இனிமைக்கு எல்லையில்லை. பெண்ணையாற்றின் கரையில் செழிப்பாய் வளர்ந்த கரும்பு போலுள்ள திருக்கோவலூர் எம்பெருமானை முதலாழ்வார்கள் நெருக்கியபடியால் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற இடையீடின்றி கலத்தலாகிய ஸௌசீல்யம் கருப்பஞ்சாறாக வெளியாயிற்று. வேறு தெய்வத்தையும் உபாயத்தையும் நாடாத பாகவதர்கள் அவன் திருவடித்தாமரையின் தேனைப் பருகி அநுபவிக்கும்போது அந்த ஸௌசீல்யமென்னும் கருப்பஞ்சாறு புதிய சர்க்கரையாகின்றது. தேனில் சர்க்கரையை கலந்தது போல் உன் திருவடிகளை அநுபவிக்கும்போது ஸௌசீல்ய குணம் தோன்றிக் கலந்து அவ்வநுபவத்தை பரமபோக்கியமாக்குகின்றது என்கிறார்.
ஸ்வாமி திருவரங்கத்தமுதனார் இராமானுசநூற்றந்தாதியில்,
முதல் மூன்று ஆழ்வார்களிடத்தில் எம்பெருமானாருக்கு இருந்த ஈடுபாட்டை நிர்த்தாரணம் பண்ணுகையில் “வருத்தும்புறவிருள்மாற்ற எம்பொய்கைப்பிரான் மறையின் குருத்தின் பொருளையும் செந்தமிழ்தன்னையும் கூட்டி ஒன்றத்திரித்து அன்றெரித்த திருவிளக்கு” என்றும் “இறைவனைக்காணும் இதயத்திருள்கெட ஞானமென்னும் நிறைவிளக்கேற்றிய பூதத்திருவடிதாள்கள்” முதல் இரு ஆழ்வார்கள் ஏற்றிய விளக்கின் வைபவத்தையும் சேர்த்து மங்களாசாசனம் பண்ணுகிறார். மேலும் புறவிருள் மற்றும் அகவிருள் நீங்கி எம்பெருமானை ப்ரத்யக்ஷமாய் நேரில் கண்டு அநுபவித்த பேயாழ்வாரை “மன்னியபேரிருள்மாண்டபின் கோவலுள்மாமலராள் தன்னொடுமாயனைக் கண்டமைகாட்டும் தமிழ்த்தலைவன்” என்று மங்களாசாசனம் பண்ணுகிறார்.
பாட்டுக்குரிய பழையவர் மூவரைப் பண்டொருகால்
மாட்டுக்கருள் தருமாயன் மலிந்து வருத்துதலால்
நாட்டுக்கிருள்செக நான்மறை அந்தி நடைவிளங்க
வீட்டுக்கிடைகழிக்கே வெளிகாட்டும் இம்மெய்விளக்கே ||
அதிகாரஸங்க்ரகம்-50
இடைகழியில் ஏற்றிய விளக்கின் வெளிச்சமானது எப்படி வீட்டின் உள்ளும் புறமும் படர்ந்து வீட்டின் இருளைப் போக்குமோ அதுபோன்று திருக்கோவலூரின் ஓர் இடைகழியில் கண்ணனாகிய நெடுமால் இம்மூன்று ஆழ்வார்களை நெருக்க அம்மூவரிடமிருந்தும் திருவவதரித்த மூன்று திருவந்தாதிகளென்னும் தீபமானது உலகத்திலுள்ளவர்களின் அஜ்ஞானம் நீங்கவும், நான்கு வேதங்களின் அந்தத்தில் கூறிய மார்க்கம் ப்ரகாஸிக்கவும் செய்து இவ்வுலகை உஜ்ஜீவிக்கும் என்றருளி ஆதிபக்தர்களான முதலாழ்வார்களின் வைபவத்தைத் தலைக்கட்டுகிறார் ஸ்வாமி தேசிகன்.
Leave a Reply