ஸ்ரீ யதிராஜஸப்ததியின் 13ம் ஸ்லோகத்தில் ஸ்வாமி ராமாநுஜருக்கும் எம்பெருமான் கண்ணனுக்கும் உள்ள ஒற்றுமையை வெளிப்படுத்தி கண்ணனே ஸ்ரீபாஷ்யகாரராக திருவவதரித்தான் என்று நிர்தாரணம் பண்ணுகிறார் ஸ்வாமி தேசிகன்.
ஶமிதோத₃யஶங்கராதி₃க₃ர்வ꞉
ஸ்ரீ யதிராஜஸப்ததி -13
ஸ்வப₃லாது₃த்₃த்₄ருதயாத₃வப்ரகாஶ: |
அவரோபிதவாந் ஶ்ருதேரபார்தா₂ந்
நநு ராமாவரஜ꞉ ஸ ஏஷ பூ₄ய꞉ ||
“மைந்நம்பு வேல்கண் நல்லாள்முன்னம் பெற்ற வளைவண்ணம் நன்மாமேனி, தன்நம்பி நம்பி” என்றபடி கண்ணபிரான் பலராமனுக்கு தம்பியாதலின் ராமாநுஜன் என்ற திருநாமம் கொண்டான். ஜகதாசார்யரான ஸ்ரீ பாஷ்யகாரருக்கு ராமாநுஜர் என்ற திருநாமம் ப்ரஸித்தம்.
ஶமிதோத₃யஶங்கராதி₃க₃ர்வ꞉
கண்ணன், பாணாஸுர யுத்தத்தில் சங்கரனைத் தோல்வி அடையச்செய்தும், இந்திரன் மழையைப் பொழிந்தபோது, குன்றமேந்தி குளிர்மழை காத்தும், நான்முகன் பசுங்கன்றுகளை மறைத்தபோது, வேறு கன்றுகளை உண்டு பண்ணியும் அவர்களின் கர்வத்தை அடக்கினான். சங்கரர், பாஸ்கரர் ஆகியோரின் மதங்களைத் தம் வாதத்திறமையால் கண்டித்தார் ஸ்வாமி ராமாநுஜர். சங்கரர், “ப்ரஹ்மம் ஸத்யம், உலகம் மாயை, ஜீவனும் ப்ரஹ்மமும் ஒன்றேயன்றி வேறில்லை, ப்ரஹ்மம் நிர்குணம் (ப்ரஹ்மஸத்யம் ஜகந்மித்யா ஜீவோப்ரஹ்மணைவ ந அபர:)” என்று வேதத்தில் உள்ள அபேதச்ருதிகள் கொண்டு அத்வைத ஸித்தாந்தத்தை ஸ்தாபித்தார். ஸ்வாமி ராமாநுஜரோ, “ப்ரஹ்மமும் ஸத்யம்; உலகமும் ஸத்யம்; ஜீவனும் ஸத்யம். ஜீவனும் ப்ரஹ்மமும் ஒன்றல்ல; மாறாக ப்ரஹ்மத்தை, ஸகல ஜீவன்கள் மற்றும் அசேதனப் பொருள்களையும் தமக்குச் சரீரமாகக் கொண்டு அவற்றின் ஒவ்வொன்றிலும் அந்தர்யாமியாய் இருப்பவராக அறியவேண்டும். இதைத் தவிர அறிய வேண்டியது வேறில்லை. பரமபுருஷனை அநுபவிப்பவனாகவும், அநுபவிக்கப்படும் பொருளாகவும், ஏவுகிறவராகவும் இந்த மூன்று நிலைகளில் அறிந்து கொள்ளவேண்டும் (ஏதத் ஜ்ஞேயம் நித்யமேவாத்மஸம்ஸ்த்தம் நாத: பரம் வேதிதவ்யம் ஹி கிஞ்சித், போக்தா போக்யம் ப்ரேரித்தாஞ்ச மத்வா ஸர்வம் ப்ரோக்தம் த்ரிவிதம் ப்ரஹ்மமேதத்), ப்ரஹ்மம் எண்ண முடியாத திருக்கல்யாண குணங்களின் கடல் போன்றவன்.” என்பதனை உபநிஷத்துக்களைப் ப்ராமணமாகக் கொண்டும் ஆழ்வார் ஸ்ரீஸூக்திகளை அதற்குத் துணையாகக் கொண்டும் ஸ்தாபித்தார். அதேபோன்று பாஸ்கர மதத்தையும் கடகஸ்ருதி வாக்யங்களைப் ப்ரமாணமாகக் கொண்டு கண்டித்தார். ஆக, சங்கரமதம் பாஸ்கரமதம் முதலிய பிற மதங்களைக் கண்டித்து அவர்களின் செருக்கை அடக்கினார்.
ஸ்வப₃லாது₃த்₃த்₄ருதயாத₃வப்ரகாஶ:
யாதவ வம்ஸத்தாரைத் தொடர்ந்து துன்புறுத்தி வந்த கம்ஸனைத் தன் வலிமையால் கொன்று யாதவர்களை நன்னிலையில் நிறுத்தி அவர்களை ஸந்தோஷமாக வாழ வழிவகுத்தான் கண்ணன். யாதவப்ரகாசர் “கப்யாசம் புண்டரீகமேவ அக்ஷிணீ” என்ற உபநிஷத் வாக்யத்திற்கும் இன்னும் பிற வாக்யங்களிற்க்கும் வேதத்திற்கு முரண்பாடான அர்த்தங்களைக் கூறிவர, ஸ்ரீபாஷ்யகாரர் தம்முடைய கூர்மையான ஞானத்தினால் அதன் நேரிய பொருளைக் கூறித் தெளிவித்து, அவரை ஆட்கொண்டு, ஓர் ஸ்ரீவைஷ்ணவனாக்கி உஜ்ஜீவிக்கச் செய்தார்.
அவரோபிதவாந் ஶ்ருதேரபார்தா₂ந்
த்ரௌபதியை ஒரு மாபெரும் சபையில் அவமானப்படுத்திய துரியோதனாதிகளையும் அந்த அநீதியைத் தடுக்காத பீஷ்ம த்ரோணாதிகளையும் பாரதப் போரில், பார்த்தனுக்குத் துணையாக, ஓர் சாரதியாய் நின்று மடியச் செய்தான் பார்த்தசாரதியான கண்ணன். வேதாந்தத்திற்கு பிற மதத்தினர் வேதவ்ருத்தமாக கூறிய தவறான அர்த்தங்கள் அனைத்தும் அழிந்துபோம்படி தம் ஸ்ரீ ஸூக்திகளின் மூலம் கண்டித்து, அவ்வர்த்தங்களைச் சீர்படுத்தி வெளியிட்டருளினார் ஸ்ரீபாஷ்யகாரர்.
இவ்வொற்றுமைகளை ஆராய்ந்து பார்க்கையில் எம்பெருமான் கண்ணனே ஸ்ரீபாஷ்யகாரராக அவதரித்தானென்பது பொருந்தும் என்று தலைக்கட்டுகிறார் ஸ்வாமி தேசிகன்.
“இலைகள் நிறைந்த தாமரைப் பூவிலே வீற்றிருக்கும் அலர்மேல்மங்கையின் பதியான ஸ்ரீமந் நாராயணன் தன் திருக்கையில் தரித்திருக்கும் திருவாழியாழ்வானும், நந்தகமும், பகைவர்மேல் பாயும் கதையும், சார்ங்கமென்னும் வில்லும், பாஞ்சசன்னியமும் ஆகிய இவையைந்தும் இப்பூமண்டலத்தைக் காக்க இப்பரதகண்டத்தின் நடுவில் யதிராஜராக அவதரித்தன” என்று ஸ்வாமி திருவரங்கத்தமுதனார் இராமாநுஜ நூற்றந்தாதியில் ஜகதாசார்யனின் அவதாரவைபவத்தைக் கொண்டாடுவது இங்கு அநுஸந்திக்கத்தக்கது.
அடையார்கமலத்து அலர்மகள்கேள்வன் கையாழியென்னும்
படையொடு நாந்தகமும் படர்தண்டும் ஒண்சார்ங்கவில்லும்
புடையார்புரிசங்கமும் இந்தப்பூதலம்காப்பதற்கென்று
இடையே இராமானுசமுனியாயின இந்நிலத்தே.
இராமானுஜ நூற்றந்தாதி – 33
ஸ்ரீமதே ராமாநுஜாய நம: | ஸ்ரீமதே நிகமாந்த மஹாதேசிகாய நம:
Leave a Reply