எம்பெருமானுக்குக் கைங்கர்யம் பண்ணவேண்டுமென்கிற அவா அநேகமான சேதனர்களிடத்தில் இருப்பினும் அவனை ஆராதிக்கப் புகுமிடத்தில் எந்தவொரு குறையுமில்லாமல் அவனை ஆராதிக்க வேண்டுமே என்கிற அவர்களின் எண்ணமானது கைங்கர்யத்திற்குத் தடையாய் இருக்கிறது.
அவன் அவாப்தஸமஸ்தகாமன், நாமோ நீசர்கள்; நீசமான உபகரணங்களைக் கொண்டு அவனை எவ்வாறு ஆச்ரயித்துத் தலைகட்டுவது?அப்படியே செய்தாலும் பரமபதநாதனுக்கு அது பாங்காயிருக்குமோ என்று ஐயங்கொண்டு அவனை விட்டுப் பலர் விலகப் பார்ப்பதுண்டு.
ஸ்வாமி நம்மாழ்வார் ஸாதிக்கிறார்:
பரிவதில் ஈசனைப் பாடி விரிவது மேவல் உறுவீர்
பிரிவகையின்றி நன்னீர்தூய் புரிவதுவும் புகை பூவே
திருவாய்மொழி 1-6-1
எம்பெருமான் சீலன். அவன் நம்மிடத்தில் கொண்ட அபாரமான தயையினால், ஆராதனைக்கெளியனாகி நாம் இட்டதுகொண்டு த்ருப்தியடைகிறான். அவனது திருவாராதனத்திற்குத் தீர்த்தம் ஒன்றே போதுமானது. அந்த தீர்த்தமும் ஏலம் முதலான வாஸனாத்ருவ்யங்களோ, துளஸீ முதலான சுத்த வஸ்துக்களோ சேர்ந்ததாயிருக்க வேண்டுமென்பதுமில்லை; புஷ்பம் எதுவாகயிருப்பினும் குற்றமில்லை; ஸமர்ப்பிக்கும் முறை தவறாது ஸமர்ப்பிக்க வேண்டுமென்பதுமில்லை. இதற்கு மேலும் எதையாவது ஸமர்ப்பிக்க முடியுமென்னில் சாதாரண தூபம் ஸமர்ப்பியுங்கோள். எம்பெருமானுக்கு ஸமர்ப்பிக்கிறோம் என்கிற சுத்த பாவமும், அவனிடத்தில் பெருங்காதலும், பக்தியுமே ப்ரதானம். அவாப்தஸமஸ்தகாமன் திறத்திலே நாம் சில பொருள்களை ஸமர்பிப்பது நமது ஸ்வரூபம் நிறம்பெறுதற்கேயன்றி அவனை நிரப்புவதற்கன்று என்று அவனின் ஸ்வாராதத்வத்தை தலைக்கட்டுகிறார் ஸ்வாமி நம்மாழ்வார்.
Leave a Reply