இடம் : திருக்கோவலூர்
வைபவம்: இடைகழியில் முதலாழ்வார்கள் ஏற்றிவைத்த விளக்கு
ஸ்லோகம்: தேஹளீச ஸ்துதி
முதலாழ்வார்களின் திருக்கோவலூர் வைபவம் அனைவரும் அறிந்ததே. இவ்வைபவத்தை ஸ்வாமி தேசிகன் “ஸ்ரீ தேஹளீச ஸ்துதி”யில் கவி நயத்துடன் கொண்டாடுகிறார்.
அதில் ஒரு ஸ்லோகம்:
காஸாரபூர்வகவிமுக்யவிமர்த்தஜந்மா
பண்ணாதடேக்ஷூஸுபகஸ்ய ரஸோ பஹூஸ்தே |
த்வத்பாதபத்மமதுநி த்வதநந்யபோக்யே
நூநம் ஸமாச்ரயதி நூதநசர்க்கராத்வம் ||
ஸ்ரீ தேஹளீச ஸ்துதி – 7
“ஆற்றின் கரையில் பயிராகிச் செழித்த கரும்பை ஆலையில் இட்டுப் பிழிந்து எடுக்கும் சாறானது மிக இனியதாயிருக்கும். அது தாமரையிலிருந்து பெரும் உயர்ந்த தேனுடன் கலந்துவிட்டால் அதன் இனிமைக்கு எல்லையில்லை. பெண்ணையாற்றின் கரையில் செழிப்பாய் வளர்ந்த கரும்பு போல் வீற்றிருக்கிறான் திருக்கோவலூர் எம்பெருமான். அவனை இடைகழியில் முதலாழ்வார்கள் நெருக்கும்பொழுது அனைவரிடமும் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற வேறுபாடில்லாமல் கலக்கும் அவனுடைய ஸௌசீல்யம் இனிமையான கருப்பஞ்சாறு போல வெளியாயிற்று. எம்பெருமான் தேனே மலரும் திருப்பாதங்களை உடையவனன்றோ! இந்த திருவடித் தேனுடன் ஸௌசீல்யம் என்னும் கருப்பஞ்சாறு கலந்து, ஒரு புது விதமான சர்க்கரையாக மாறி, வேறு தெய்வத்தையும் உபாயத்தையும் நாடாத பாகவதர்களுக்கு அவன் அனுபவத்தைப் பரம போக்கியமாக்குகின்றது.” என்று ரஸோக்தியாக அருளிச் செய்கிறார் தூப்புல் வள்ளல்.

கரும்பை அப்படியே கொடுத்தால் அதனை அனுபவிப்பது சிரமம். சாறாக்கிக் கொடுத்தால் அப்பொழுது மட்டும் ருசிக்கலாம். அந்தச் சாற்றைக் கற்கண்டாகத் திரட்டிக் கொடுத்தால் எப்பொழுதும் அனுபவித்துக் கொண்டே இருக்கலாமன்றோ!
பெண்ணை ஆற்றங்கரையின் மிகவும் செழிப்பான கரும்பாக நிற்கிறான் திருக்கோவலூர் நெடுமால். அவனை மந்தர்களாகிய நம்மால் அப்படியே அனுபவிக்க முடியாது. எல்லையில்லா திருக்கல்யாண குணங்களை உடையவனாயினும் அவையனைத்தும் நிறம் பெறுவது ஸௌலப்ய-ஸௌசீல்யங்களினாலே தானே. ஆதலால் ஓர் இடைகழியில் முதல் ஆழ்வார்களை ஒன்று சேர்த்து அவர்கள் நடுவில் நின்று அவர்களால் நெருக்கப்பட்டு கருப்பஞ்சாறாக ஸௌசீல்யத்தை வெளிப்படுத்தி அவ்வாழ்வார்களை அவனனுபவத்தில் ஆழ்த்தினான்.
அவன் ஸௌசீல்யத்துடன்(ரஸோ பஹூஸ்தே) அநந்ய போக்யத்வம்(த்வதநந்யபோக்யே) என்னும் திருவடித் தேன் கலந்து ஆழ்வார்களுக்கு அவ்வனுபவம் மிகவும் இனியதான, ஒரு புதுவிதமான சர்க்கரையைச்(நூதநசர்க்கராத்வம்) சுவைப்பது போல பரமபோக்யமாய் அமைந்தது. அந்த நூதன சர்க்கரையை ஆழ்வார்கள் அநாதியான தமிழ் பாஷையில், சுவைக்கச் சுவைக்கத் தெவிட்டாதப் பாசுரங்களாகத் திரட்டி மூன்று திருவந்தாதிகள் என்னும் கற்கண்டுகளை நமக்கு அருளினர். எம்பெருமானின் அர்ச்சாவதார அனுபவத்தில் ஈடுபட்டு அவ்வனுபவத்தை மதுரமான பாசுரங்களினால் பாமாலைகளாக்கிப் பாடும் மார்க்கத்தைத் துவக்கி வைத்தனர்.
ஸ்வாமி தேசிகன் கவி நயத்துடன் இந்த வைபவத்தை ஸாதிப்பது அந்தக் கற்கண்டுகளுக்கு மேன்மேலும் சுவையைக் கூட்டுகிறது.
கரும்பை நெருக்கிச் சாறெடுத்து வெல்லப் பாகாக காய்ச்சினாலும், சர்க்கரையாக்கினாலும் அல்லது அந்தச் சர்க்கரையைக் கற்கண்டாக்கினாலும் அதன் ரூபம் மாறுமேயன்றி அதன் இனிமை குறைவதில்லை. அதேபோல எம்பெருமான் தன் அவதாரங்கள் மூலம் வேறு வேறு ஸ்வரூபங்களைத் தரித்துக் கொண்டாலும் அவன் திருக்கல்யாண குணங்கள் எள்ளளவும் குறைவதில்லை! தொண்டரடிப்பொடி ஆழ்வார் “அச்சுவை பெறினும் வேண்டேன்” என்று காட்டுவது போல தெவிட்டாத கற்கண்டாக எம்பெருமான் நமக்கு இருக்க வேறு சுவை ஒன்றுதான் தேவைப்படுமோ?