வால்மீகி இராமாயணம் கூறும் வாழ்க்கை தர்மங்கள் – 2

சென்ற பதிவில் பித்ரு பக்தியையும் ஆசார்ய பக்தியையும், இராமன் எப்படி வாழ்ந்துகாட்டினான் என்று பார்த்தோம். ஆசார்ய பக்தியன்றி வேறொன்றும் அறியேன் என்று வாழ்ந்த மதுரகவியாழ்வாரை நோக்கி  நினைவலை சென்றது. இவர் திருநக்ஷத்ரம் சித்திரை மாதம் சித்திரை நக்ஷத்ரம். இதே சித்திரை – சித்திரையில் பிறந்து ஆசார்யன் நியமித்த கைங்கர்யத்தைத் தனக்கு இட்ட வழக்காக அனந்தாழ்வான் என்கிற அனந்தான்பிள்ளை செவ்வனே செய்து வந்தார். இவர் திருமலையில், பாஷ்யகாரர் நியமனத்தின் படி, நந்தவனம் ஏற்படுத்தி, திருவேங்கடவனுக்குப் புஷ்ப கைங்கர்யம் செய்து வந்தார்.

ஆசார்ய பக்தி என்பது  சித்திரைக்கே உரிய பெருமையோ! ஏனெனில் இராமன் அவதரித்த மாதமும் சித்திரை தானே! இவர்கள் சரித்தரித்திலிருந்து நாம் தெரிந்துக்கொண்டு, செய்யவேண்டியது ஒன்று தான். நம் ஆழ்வார்கள், ஆசார்யர்கள் போட்ட தடத்தில் பயணித்தால் போதும்.

பாலகாண்டம் ஆணவம் (கர்வம், செருக்குகொள்ளக்கூடாது என்பதை உணர்த்தும் சம்பவங்கள்

தாடகா வனத்தில், தாடகை வதம் செய்த பிறகு இராமனும் லக்ஷ்மணனும் கௌசிகருடன் ஸித்தாஸ்ரமத்தில், மாரீசனையும் சுபாஹுவுயும் வதம் செய்து, யாக ஸம்ரக்ஷணம் செய்து, தன் ஆசார்யனுக்கு பரம சந்தோஷத்தை கொடுத்தார்கள்.

பிறகு கௌசிகரின் விருப்பப்படி, ஜனகர் நடத்தும் யாகத்தையும் அவருடைய முன்னோர்கள் ஒருவருக்குத் தேவர்களால் கொடுக்கப்பட்ட வில்லையும் பார்க்க மிதிலைக்குப் பயணித்தார்கள்.

இப்படி பிரயாணம் செய்துகொண்டிருக்கையில் ஒரு நதிக்கரையை அடைந்தனர். அந்த நதியின் ஜலம்  ஸ்படிகம் போல் சுத்தமாகவும், கர்மவினைகளைத் தீர்க்கும் பாபநாசினியாகவும் விளங்கிற்று. இந்த புண்ணிய நதியின் பெயர் “கங்கை” என்று இராமனுக்கு கௌசிகர் கூறினார். இராமன் கங்கை எப்படி உண்டாயிற்று என்று கௌசிகரை வினவ, அதன் சரித்தரத்தை இராமனுக்கு கௌசிகர் கூறினார்.

பர்வதராஜனான ஹிமவானுக்கும், மேருவின் புத்ரியான மனோரமைக்கும் பிறந்த மூத்த பெண் “கங்கை”.

கங்கையின் பெருமையை,  இந்த ஸ்லோகத்தின் மூலம் வால்மீகி எடுத்துரைக்கிறார்.

ஸைஷா ஸுரநதீ ரம்யா ஷைலேந்த்ரஸ்ய ஸுதா ததா.
ஸுரலோக் ஸமாரூடா விபாபா ஜலவாஹிநீ৷৷

வால்மீகி இராமாயணம், பாலகாண்டம் 1.35.24

ரம்யா – அழகு,

விபாபா – பாபத்தை போக்கவல்லவள்,

ஜலவாஹிநீ – ஜலப்ப்ரவாஹம் உடையவள்,

ஷைலேந்த்ரஸ்ய ஸுதா – ஹிமவானின் புத்ரி,

ஸுரநதீ – தேவ நதி,

ஸுரலோக் ஸமாரூடா – தேவலோகத்திற்கு சென்றாள்.

இப்படி பெருமை வாய்ந்த கங்கைக்கு “த்ரிபதகா” என்று அழகிய பெயர் உண்டு. இந்த பெயர்க்காரணம், தேவர்கள் ஹிமவானிடம் தங்களுடைய லோகத்திற்கு கங்கையை அழைத்துச் செல்ல விரும்பி வேண்டினார்கள். தேவலோகம், பூலோகம், பாதாளலோகம் என மூன்று (த்ரி)  லோகங்களில் சென்றமையால் “த்ரிபதகா” என்று அழைக்கப்பட்டாள்.

ஆணவம் கொள்ளுதல் சிறுமையான செயல் என்பதை திருவள்ளுவன், “பெருமை”  என்ற அதிகாரத்தில் கூறியுள்ளார்.

பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல்

திருக்குறள் 979

ஆணவமின்றி அடக்கமாக இருப்பது பெருமை எனப்படும். ஆணவத்தின் எல்லைக்கே சென்று விடுவது சிறுமை எனப்படும்.

இராமனுடைய முன்னோரான சகர வம்சத்தில் தோன்றிய பகீரதன், தன் கடுமையான தவத்தினால் புனிதமான கங்கையைப் பூமிக்கு கொண்டுவந்தான். மிகுந்த வேகத்துடன் பாய்ந்த கங்கையை, ருத்ரன் தன் தலையில் தாங்கிக்கொண்டான்.  “என்னுடைய ஓட்டத்தின் வேகத்தில் சங்கரனையும் இழுத்துக்கொண்டு பாதாளத்தில் புகுந்து விடுகிறேன்” என்று பெருமிதம் கொண்டு, எண்ணினாள் கங்கை.

ஸா கதஞ்சிந்மஹீம் கந்தும் நாஷக்நோத்யத்நமாஸ்திதா৷৷
நைவ நிர்கமந் லேபே ஜடாமண்டலமோஹிதா

வால்மீகி இராமாயணம், பாலகாண்டம் 1.43.8

யத்நம் ஆஸ்திதா – முயற்சி எடுத்தும்,

கதஞ்சித் – எல்லா வழிகளும்,

மஹீம் கந்தும் ந அஷக்நோத் – பூமியை அடைய போதவில்லை,

ஜடாமண்டலமோஹிதா – ஜடாமுடியில் சிக்கி,

நிர்கமநம் ந லேபே – வெளியே வரமுடியவில்லை

சங்கரின் ஜடாமுடியில் சிக்கி, அவளால் (கங்கா) வெளியே வர முடியவில்லை. அவளுடைய எல்லா முயற்சிகளும் தோற்றன, அவளால் பூமியை அடைய முடியவில்லை என்று வால்மீகி, கங்கையின் இயலாமையை கூறுகிறார்.

கங்கையின் கர்வத்தை அடக்க சங்கரன் தன் சடைமுடியில், பல வருடங்கள் கங்கையை வைத்துக்கொண்டான். வெளியே வரமுடியாமல் தவித்தாள். தான் செய்த தவற்றை உணர்ந்தாள்.

இப்படியாக ஆணவம் கொள்ளக்கூடாது. நம்முடைய அணைத்து ஆற்றலும் எம்பெருமான் இட்டப் பிச்சை, என்று கங்கையின் கதையின் மூலம், இக்கருத்து தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

மற்றொரு சம்பவம், பரசுராமனின் கர்வத்தை இராமன் அடக்கிய சம்பவம். சீதா பிராட்டியை மணமுடித்துத் தசரதன், இராமன் மற்றும் எல்லா பரிவார பரிஜனங்களும் சூழ அயோத்தியை நோக்கிப் பயணித்து வரும் பொழுது, பரசுராமன் வழி மறித்தார்.

விஷ்ணு தனுஸை நாணேற்று என்று இராமனை எதிர்கொண்டார். அண்டசராசரங்களுக்கெல்லாம் அதிபதியான மஹாவீரனுக்கு, இது ஒரு சாதாரணச் செயல் அல்லவோ! நாணேற்றின இராமன், தன்னிடம் தோல்வியுற்றப் பரசுராமனுக்கு,  இரு விருப்பங்கள் கொடுத்தான். மூவுலகங்களிலும் தங்குதடையில்லாமல் செல்லும் உங்கள் பாதங்களை கட்டிபோடவா அல்லது உங்கள் தவ வலிமையால் பெற்றுள்ள எல்லாப் புண்ணியங்களையும் அழித்துவிடவா. பரசுராமன் தன் தவற்றை உணர்ந்தார், இராமன் அந்த திருவைகுண்டநாயகனே என்பதை புரிந்து கொண்டார்.

இதை கம்பன்,

அழிந்து. அவன் போனபின்.

அமலன். ஐ-உணர்வு

ஒழிந்து. தன் உயிர் உலைந்து

உருகு தாதையை.

பொழிந்த பேர் அன்பினால்.

தொழுது. முன்பு புக்கு.

இழிந்த வான் துயர்க் கடல்

கரைநின்று ஏற்றினான்

கம்பராமாயணம், பாலகாண்டம் பாடல் 1303

அப்பரசுராமன்  (தன் செருக்கும் தவமும்) சிதைந்து போன பின்பு, குற்றம் அற்ற இராமபிரான், ஐம்புல உணர்வும் நீங்கி, தன் உயிர் நிலை குலைந்து (தன்னை) எண்ணி மனம் உருகும் தந்தையாகிய தசரதனைப்  பொங்கி வழிகின்ற அன்பினால் வணங்கி, அவன் கண் எதிரே சென்று அவன் இறங்கி அமிழ்ந்திருந்த பெரிய துயர்க் கடலிலிருந்து, கரை  ஏற்றினான் என்று எடுத்துரைக்கிறார்.

நாமும் என்றும் ஆணவம் அற்று, நம் பூர்வாசரியர்களான இராமாநுஜனும், தேசிகனும் வகுத்த பாதையை  பின்பற்றி எம்பெருமானின் அடியார்க்கு அடியார்களாக, தாஸர்களாக வாழ்வோம்.

ஸ்ரீமதே இராமாநுஜாய நம:

ஸ்ரீமதே நிகமாந்த மஹா தேசிகாய நம:

குறிப்புகள்:

  1. கம்பராமாயணம் – https://bit.ly/3ySsfXg
  2. வால்மீகி இராமாயண ஸ்லோகங்கள்: https://www.valmiki.iitk.ac.in/
  3. திருக்குறள் – https://thirukural-world.blogspot.com/

வால்மீகி இராமாயணம் கூறும் வாழ்க்கை தர்மங்கள் – 1

வேதம் அநாதியானது – ஆதி அந்தங்கள் இல்லாதது. அழிவில்லாதது, நித்யமானது.

எப்படி பரப்ரஹ்மம் அநாதியோ அதுபோல் வேதமும் அநாதி.

ப்ரளயகாலத்தில் கூட வேத சப்தங்களைத் திருமால் தன்னுள்ளே வைத்து ப்ரஹ்மாவின் மூலம் திரும்பத் தோன்றும்படி செய்விக்கிறான். இதிலிருந்து வேதங்கள் நித்யம் என்பது புலப்படுகின்றது.

வேதம் அபௌருஷேயமானது – மனிதனாலே இயற்றப்பட்டதோ, பாடப்பட்டதோ அல்ல.

நம்முடைய ஸநாதன தர்மத்திற்கு மூலப் ப்ரமாணமானது வேதம். வேதம், நாம் ஒவ்வொருவரும் எப்படி அவரவர் தர்மத்தைக் கடைபிடிக்கவேண்டும் என்று விளக்குகிறது.

ஆனால் எல்லோரும் வேதத்தை ஓத முடியாது. அதன் உள் அர்த்தங்களைப்  புரிந்து கொள்வதும் எளிதன்று. எனவே எம்பெருமான் தானே அவதரித்து, தர்ம மார்க்கத்தைப்  பின்பற்றி வாழ்ந்து காட்டி, எல்லோரும் தன்னைப் பின்தொடர்ந்து தர்ம வழியில் வாழவேண்டும் என்று முடிவெடுத்தான். இராமனாக அவதரித்தான்.

வேதவேத்யே பரே பும்ஸி ஜாதே தசரதாத்மஜே|

வேத:ப்ராசேதஸாதாஸீத் ஸாக்ஷாத் ராமாயணாத்மநா||

இராமாயண த்யான ஸ்லோகம்

வேத முதல்வன், புருஷோத்தமன், தசரதனின் புதல்வனாக அவதாரம் செய்தவுடன், அந்த வேதமும் வால்மீகியின் குழந்தையாக (படைப்பாக)  அவதாரம் செய்துவிட்டது என்று நாம் இராமயண த்யான ஸ்லோகத்தில் காண்கிறோம். ப்ரசேதஸின் புத்திரராதலால் வால்மீகிக்குப் “ப்ராசேதஸ்” என்றொரு பெயர்.

இப்படிப்பட்ட வேத செழும்பொருள்களை உள்ளடக்கிய இதிஹாசமான இராமாயணத்தில், பற்பல வாழ்க்கை தர்மங்கள் பொதிந்துள்ளன. இப்படி இராமாயணத்தின் உள்ளர்த்தங்களை இராமானுஜனுக்கு எடுத்துரைப்பதற்காக ஆளவந்தார் என்கிற மஹா ஆசார்யன், பெரிய திருமலை நம்பி என்று அழைக்கப்படும் “ஸ்ரீசைலபூர்ணருக்கு” கட்டளையிட்டார். இவர் இராமானுஜரின் மாதுலர் (மாமா) மற்றும் இராமானுஜரின் ஐந்து ஆசார்யர்களில் ஒருவர். திருமலை (திருவேங்கடம்) மலை அடிவாரத்தில்   ஒருவருட காலம், தினமும், பெரிய திருமலை நம்பிகள் இராமாயண உள்ளர்த்தங்களைக்  காலக்ஷேபமாக   இராமானுஜருக்கு உபதேசித்தார்.

பிதாமஹஸ்யாபி பிதாமஹாய ப்ராசேதஸாதேசபலப்ரதாய

ஸ்ரீபாஷ்யகாரோத்தம தேசிகாய ஸ்ரீசைலபூர்ணாய நமோ நம: ஸ்தாத்

பெரிய திருமலை நம்பிகளின் தனியன்

இராமாயண பாராயணம் செய்யும் முன், இந்த தனியனைச் சேவிப்பது என்பது ஸம்ப்ரதாயம். இங்கே நாமும் சேவித்து தொடங்குவோம்.

இந்தப் பதிவில், மேலே கூறியபடி இராமாயணம் காட்டும் வாழ்க்கை தர்மங்களை ஒவ்வொன்றாக அனுபவிப்போம்.

பாலகாண்டம் – பித்ருபக்தியும், ஆசார்ய பக்தியும் போதிக்கும் சம்பவங்கள்

தே சாபி மநுஜவ்யாக்ரா வைதிகாத்யயநே ரதா:
பிதரிஷுஷ்ரூஷணரதா தநுர்வேதே ச நிஷ்டிதா:৷৷

வால்மீகி இராமாயணம், பாலகாண்டம் 1.18.35

மனிதர்களுள் புலி போன்று சிறந்தவர்களாக அந்த நால்வர் – இராமன், இலக்ஷ்மணன், பரதன் மற்றும்  சத்ருக்ணன் கற்பதில் முனைப்போடு இருந்தார்கள்.

பிதரிஷுஷ்ரூஷணரதா – தந்தைக்கு பணிவிடை செய்வதில் ஆர்வம் காட்டினார்கள்

அதுமட்டுமன்றி வில்வித்தையிலும் முன்னிலையில் நின்றார்கள்

இராமனின் பித்ருபக்தியை நாம் இராமாயணத்தில் பல சம்பவங்கள் மூலம் அறியமுடியும். நாம்  ஒவ்வொருவரும் கல்வி கேள்வி பயில்வதுடன், நம் மாதா பிதாவிடத்தில்  எவ்வாறு அன்பு, பக்தியுடன் சிஷ்ருஷை  செய்வதில் முனைப்புடன் இருக்கவேண்டும் என்பது  இராமனின் வாழ்க்கை எடுத்துக்காட்டுகின்றது .

அடுத்து தடாகை வதம் செய்யும் படலத்தில் வரும் ஒரு சம்பவம். 

அநுஷிஷ்டோஸ்ம்யயோத்யாயாஂ குருமத்யே மஹாத்மநா.
பித்ரா தஷரதேநாஹஂ நாவஜ்ஞேயஂ ஹி தத்வச:৷৷

வால்மீகி இராமாயணம், பாலகாண்டம் 1.26.3

தன் அவதார நோக்கமே தர்மத்தை வாழ்ந்து காட்டி உணர்த்தவுதே என்று உணர்ந்த இராமன், தன் இரு கைகளையும் கூப்பிக்கொண்டு, “கௌசிக முனிவர் என்ன காரியம் செய்யச்  சொன்னாலும், அதில் சந்தேகம் கொண்டு தயக்கம் காட்டாமல் செய்ய வேண்டியக் கடமை என்று எண்ணிச் செய்வாய்” என்பது என் தந்தையின் ஆணை. அதை நான் கௌரவிக்க வேண்டும் என்று பித்ருபக்தியையும் ஆசார்யபக்தியையும் ஒருசேரக் காண்பிக்கிறார்.

அண்ணல் முனிவற்கு அது

கருத்துஎனினும். ‘ஆவி

உண்’ என. வடிக் கணை 

தொடுக்கிலன்; உயிர்க்கே

துண்ணெனும் வினைத்தொழில்

தொடங்கியுளளேனும் .

‘பெண்’ என மனத்திடை 

பெருந்தகை நினைந்தான்

கம்பராமாயணம், பாலகாண்டம் பாடல் 374

தாடகையுடனான  போர் இராமனின் கண்ணிப் போர் . பெருந்தன்மை உடைய இராமன் அவள் பெண் ஆயிற்றே என்று மனத்தில் எண்ணினான், என்று கம்பன் இராமனின் மனத்தை ப்ரதிபலிக்கிறான். ஆனால் கௌசிகர் இரக்கம் காட்டியது போதும் இராம! இவள் தீய நடத்தை கொண்டவள். வேள்விகளுக்கு இடையூறு செய்பவள் என்று கூறக்கேட்டு, ஓர் அம்பினால் துளைத்தான்.

இப்படியாக பித்ருபக்தியையும், ஆசார்ய பக்தியையும்  பாலகாண்டத்தில் பல சம்பவங்கள் எடுத்துரைக்கின்றன.

இராமாயணத்தில் இராமன் காட்டிய ஆசார்ய பக்தியைப் பற்றி ஆராயும்பொழுது, ஆசார்ய பக்தியை,  ப்ரபந்தமாகவே அருளிச்செய்த மதுரகவியாழ்வாரைப் பற்றிக் கூறாமல் இருக்கமுடியாது. இவருக்கு இராமனுடன் சம்பந்தம் எப்படி? அவர் “கண்ணி நுண்சிறுத்தாம்பு” என்ற ப்ரபந்தத்தைத்தானேப் பாடினார். ஆம். ஸ்வாமி தேசிகன் அடைக்கலப்பத்தில் – “முக்தி தரும் நகரேழில் முக்கியமாம் கச்சிதனில்”, என்கிறார். மற்ற முக்தி தரும் க்ஷேத்ரங்கள் வாரணாசி, அயோத்யா, மதுரா, த்வாரகை, உஜ்ஜயினி, ஹரித்வார் (என்கிற மாயா) என்பவை ஆகும். வேதோத்தமரான மதுரகவிகள் அயோத்யாவில் இராமனை திவ்யதரிசனம் செய்யும் பொழுது தான், தெற்குத் திசையில் ஒரு ஜோதியைக் கண்டார். அந்த ஜோதியைப் பின்தொடர்ந்துச் சென்றார். நம்மாழ்வார் என்கிற ஆசார்யனிடம் அழைத்துச் சென்றது, அந்த ஜோதி. அவரிடமே சரண் புகுந்தார். உலகிற்கே ஆசார்ய பக்தியை எடுத்துரைக்கும்  “கண்ணி நுண்சிறுத்தாம்பு” பிறந்தது. “தேவுமற்றறியேன் குருகூர் நம்பி” என்று பாடினார். தான் இராமாயணத்தின் மூலம் காட்டிய ஆசார்ய பக்தியை, ஒர் ஆழ்வார், ஆசார்யன் மூலம் நமக்கு எடுத்துக்கூறவேண்டும் என்பது அயோத்யா இராமனின் சித்தமாகத் தானே இருக்கவேண்டும்!

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமதே நிகமாந்த மஹா தேசிகாய நம:

குறிப்புகள்:

  1. கம்பராமாயணம் – https://bit.ly/3ySsfXg
  2. வால்மீகி இராமாயண ஸ்லோகங்கள்: https://www.valmiki.iitk.ac.in/

இளையபெருமாள் காட்டிய அநந்யார்ஹ சேஷத்வம்

பஞ்சவடியில் பர்ணசாலை அமைக்கும்பொழுது, எம்பெருமான் ஸ்ரீராமன் கட்டளையிடுகிறான்: 

How did Ahiravan kidnap Laxman (with Ram) if he didn't sleep during  Vanvaas? - Quora

ரமதே யத்ர வைதேஹீ த்வமஹம் சைவ லக்ஷ்மண |

தாத்ருசோ த்ருஷ்யதாம் தேச: ஸந்நிக்ருஷ்டஜலாசய: ||

ஆரண்யகாண்டம் 15-4

வநராமண்யகம் யத்ர ஜலராமண்யகம் ததா |

ஸந்நிக்ருஷ்டம் ச யத்ர ஸ்யாத்ஸமித்புஷ்பகுசோதகம் ||

ஆரண்யகாண்டம் 15-5

லக்ஷ்மணா! நீர்நிலை அருகில் இருக்கக் கூடியதும், எந்த இடத்தில் சீதை மகிழ்ச்சியாக இருப்பாளோ, அதேபோல் நீயும் நானும் உகப்புடன் இருப்போமோ, அப்படிப்பட்டதான ஓர் இடத்தைத் தேடிக் கண்டுபிடி. அந்த இடம் மரங்கள் அடர்ந்து அழகாக இருக்க வேண்டும் நீர்வளம் உள்ளதாக இருக்க வேண்டும். அருகிலேயே சமித்து, மலர்கள், தர்ப்பை, நல்ல தீர்த்தம் கிடைக்கும்படியாக இருக்க வேண்டும்.” என்றான்.

அதற்கு லக்ஷ்மணன் பதிலளிக்கிறான்:

பரவாநஸ்மி காகுத்ஸ்த த்வயி வர்ஷசதம் ஸ்திதே |

ஸ்வயம் து ருசிரே தேசே க்ரியதாமிதி மாம் வத ||

ஆரண்யகாண்டம் 15-7

இராமா! நான் காலமெல்லாம் தங்கள் அடிமையாக இருப்பவன். அதனால் உனக்குப் பிடித்தமான இடத்தைத் தேர்ந்த்தெடு என்று தாங்கள் கூறுவது முறையல்ல. எந்த இடத்தில் தங்கள் மனம் ஈடுபடுகின்றதோ அதைச் சுட்டிக்காட்டி, இங்கே பர்ணசாலையைக் கட்டு என்று எனக்கு ஆணையிடுங்கள்” என்று விண்ணப்பித்து தான் ஸ்வதந்த்ரன் அல்லன் என்றும் அவ்வாறு ஸ்வதந்த்ரமாக செய்யும் கைங்கர்யம் நிறம் பெறாது என்றும் ஸ்தாபித்து, மேலும்,

பவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா கிரிஸாநுஷு ரம்ஸ்யதே |

அஹம் ஸர்வம் கரிஷ்யாமி ஜாக்ரதஸ் ஸ்வபதஸ்சதே ||

அயோத்யாகாண்டம் 31-25

நீர் வைதேஹியுடன் கூட மலைத்தாழ்வரைகளில் விளையாடுவீர்; அடியேன் நீர் விழித்துக் கொண்டிருக்கும்போதும் தூங்கும்போதும் உமக்கு எல்லா அடிமைகளையும் செய்வேன்.” என்று தன் சேஷத்வத்தை திருக்கைத்தொட்டு வெளிப்படுத்தினார் இளையபெருமாள்.