வால்மீகி இராமாயணம் கூறும் வாழ்க்கை தர்மங்கள் – 2

சென்ற பதிவில் பித்ரு பக்தியையும் ஆசார்ய பக்தியையும், இராமன் எப்படி வாழ்ந்துகாட்டினான் என்று பார்த்தோம். ஆசார்ய பக்தியன்றி வேறொன்றும் அறியேன் என்று வாழ்ந்த மதுரகவியாழ்வாரை நோக்கி  நினைவலை சென்றது. இவர் திருநக்ஷத்ரம் சித்திரை மாதம் சித்திரை நக்ஷத்ரம். இதே சித்திரை – சித்திரையில் பிறந்து ஆசார்யன் நியமித்த கைங்கர்யத்தைத் தனக்கு இட்ட வழக்காக அனந்தாழ்வான் என்கிற அனந்தான்பிள்ளை செவ்வனே செய்து வந்தார். இவர் திருமலையில், பாஷ்யகாரர் நியமனத்தின் படி, நந்தவனம் ஏற்படுத்தி, திருவேங்கடவனுக்குப் புஷ்ப கைங்கர்யம் செய்து வந்தார்.

ஆசார்ய பக்தி என்பது  சித்திரைக்கே உரிய பெருமையோ! ஏனெனில் இராமன் அவதரித்த மாதமும் சித்திரை தானே! இவர்கள் சரித்தரித்திலிருந்து நாம் தெரிந்துக்கொண்டு, செய்யவேண்டியது ஒன்று தான். நம் ஆழ்வார்கள், ஆசார்யர்கள் போட்ட தடத்தில் பயணித்தால் போதும்.

பாலகாண்டம் ஆணவம் (கர்வம், செருக்குகொள்ளக்கூடாது என்பதை உணர்த்தும் சம்பவங்கள்

தாடகா வனத்தில், தாடகை வதம் செய்த பிறகு இராமனும் லக்ஷ்மணனும் கௌசிகருடன் ஸித்தாஸ்ரமத்தில், மாரீசனையும் சுபாஹுவுயும் வதம் செய்து, யாக ஸம்ரக்ஷணம் செய்து, தன் ஆசார்யனுக்கு பரம சந்தோஷத்தை கொடுத்தார்கள்.

பிறகு கௌசிகரின் விருப்பப்படி, ஜனகர் நடத்தும் யாகத்தையும் அவருடைய முன்னோர்கள் ஒருவருக்குத் தேவர்களால் கொடுக்கப்பட்ட வில்லையும் பார்க்க மிதிலைக்குப் பயணித்தார்கள்.

இப்படி பிரயாணம் செய்துகொண்டிருக்கையில் ஒரு நதிக்கரையை அடைந்தனர். அந்த நதியின் ஜலம்  ஸ்படிகம் போல் சுத்தமாகவும், கர்மவினைகளைத் தீர்க்கும் பாபநாசினியாகவும் விளங்கிற்று. இந்த புண்ணிய நதியின் பெயர் “கங்கை” என்று இராமனுக்கு கௌசிகர் கூறினார். இராமன் கங்கை எப்படி உண்டாயிற்று என்று கௌசிகரை வினவ, அதன் சரித்தரத்தை இராமனுக்கு கௌசிகர் கூறினார்.

பர்வதராஜனான ஹிமவானுக்கும், மேருவின் புத்ரியான மனோரமைக்கும் பிறந்த மூத்த பெண் “கங்கை”.

கங்கையின் பெருமையை,  இந்த ஸ்லோகத்தின் மூலம் வால்மீகி எடுத்துரைக்கிறார்.

ஸைஷா ஸுரநதீ ரம்யா ஷைலேந்த்ரஸ்ய ஸுதா ததா.
ஸுரலோக் ஸமாரூடா விபாபா ஜலவாஹிநீ৷৷

வால்மீகி இராமாயணம், பாலகாண்டம் 1.35.24

ரம்யா – அழகு,

விபாபா – பாபத்தை போக்கவல்லவள்,

ஜலவாஹிநீ – ஜலப்ப்ரவாஹம் உடையவள்,

ஷைலேந்த்ரஸ்ய ஸுதா – ஹிமவானின் புத்ரி,

ஸுரநதீ – தேவ நதி,

ஸுரலோக் ஸமாரூடா – தேவலோகத்திற்கு சென்றாள்.

இப்படி பெருமை வாய்ந்த கங்கைக்கு “த்ரிபதகா” என்று அழகிய பெயர் உண்டு. இந்த பெயர்க்காரணம், தேவர்கள் ஹிமவானிடம் தங்களுடைய லோகத்திற்கு கங்கையை அழைத்துச் செல்ல விரும்பி வேண்டினார்கள். தேவலோகம், பூலோகம், பாதாளலோகம் என மூன்று (த்ரி)  லோகங்களில் சென்றமையால் “த்ரிபதகா” என்று அழைக்கப்பட்டாள்.

ஆணவம் கொள்ளுதல் சிறுமையான செயல் என்பதை திருவள்ளுவன், “பெருமை”  என்ற அதிகாரத்தில் கூறியுள்ளார்.

பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல்

திருக்குறள் 979

ஆணவமின்றி அடக்கமாக இருப்பது பெருமை எனப்படும். ஆணவத்தின் எல்லைக்கே சென்று விடுவது சிறுமை எனப்படும்.

இராமனுடைய முன்னோரான சகர வம்சத்தில் தோன்றிய பகீரதன், தன் கடுமையான தவத்தினால் புனிதமான கங்கையைப் பூமிக்கு கொண்டுவந்தான். மிகுந்த வேகத்துடன் பாய்ந்த கங்கையை, ருத்ரன் தன் தலையில் தாங்கிக்கொண்டான்.  “என்னுடைய ஓட்டத்தின் வேகத்தில் சங்கரனையும் இழுத்துக்கொண்டு பாதாளத்தில் புகுந்து விடுகிறேன்” என்று பெருமிதம் கொண்டு, எண்ணினாள் கங்கை.

ஸா கதஞ்சிந்மஹீம் கந்தும் நாஷக்நோத்யத்நமாஸ்திதா৷৷
நைவ நிர்கமந் லேபே ஜடாமண்டலமோஹிதா

வால்மீகி இராமாயணம், பாலகாண்டம் 1.43.8

யத்நம் ஆஸ்திதா – முயற்சி எடுத்தும்,

கதஞ்சித் – எல்லா வழிகளும்,

மஹீம் கந்தும் ந அஷக்நோத் – பூமியை அடைய போதவில்லை,

ஜடாமண்டலமோஹிதா – ஜடாமுடியில் சிக்கி,

நிர்கமநம் ந லேபே – வெளியே வரமுடியவில்லை

சங்கரின் ஜடாமுடியில் சிக்கி, அவளால் (கங்கா) வெளியே வர முடியவில்லை. அவளுடைய எல்லா முயற்சிகளும் தோற்றன, அவளால் பூமியை அடைய முடியவில்லை என்று வால்மீகி, கங்கையின் இயலாமையை கூறுகிறார்.

கங்கையின் கர்வத்தை அடக்க சங்கரன் தன் சடைமுடியில், பல வருடங்கள் கங்கையை வைத்துக்கொண்டான். வெளியே வரமுடியாமல் தவித்தாள். தான் செய்த தவற்றை உணர்ந்தாள்.

இப்படியாக ஆணவம் கொள்ளக்கூடாது. நம்முடைய அணைத்து ஆற்றலும் எம்பெருமான் இட்டப் பிச்சை, என்று கங்கையின் கதையின் மூலம், இக்கருத்து தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

மற்றொரு சம்பவம், பரசுராமனின் கர்வத்தை இராமன் அடக்கிய சம்பவம். சீதா பிராட்டியை மணமுடித்துத் தசரதன், இராமன் மற்றும் எல்லா பரிவார பரிஜனங்களும் சூழ அயோத்தியை நோக்கிப் பயணித்து வரும் பொழுது, பரசுராமன் வழி மறித்தார்.

விஷ்ணு தனுஸை நாணேற்று என்று இராமனை எதிர்கொண்டார். அண்டசராசரங்களுக்கெல்லாம் அதிபதியான மஹாவீரனுக்கு, இது ஒரு சாதாரணச் செயல் அல்லவோ! நாணேற்றின இராமன், தன்னிடம் தோல்வியுற்றப் பரசுராமனுக்கு,  இரு விருப்பங்கள் கொடுத்தான். மூவுலகங்களிலும் தங்குதடையில்லாமல் செல்லும் உங்கள் பாதங்களை கட்டிபோடவா அல்லது உங்கள் தவ வலிமையால் பெற்றுள்ள எல்லாப் புண்ணியங்களையும் அழித்துவிடவா. பரசுராமன் தன் தவற்றை உணர்ந்தார், இராமன் அந்த திருவைகுண்டநாயகனே என்பதை புரிந்து கொண்டார்.

இதை கம்பன்,

அழிந்து. அவன் போனபின்.

அமலன். ஐ-உணர்வு

ஒழிந்து. தன் உயிர் உலைந்து

உருகு தாதையை.

பொழிந்த பேர் அன்பினால்.

தொழுது. முன்பு புக்கு.

இழிந்த வான் துயர்க் கடல்

கரைநின்று ஏற்றினான்

கம்பராமாயணம், பாலகாண்டம் பாடல் 1303

அப்பரசுராமன்  (தன் செருக்கும் தவமும்) சிதைந்து போன பின்பு, குற்றம் அற்ற இராமபிரான், ஐம்புல உணர்வும் நீங்கி, தன் உயிர் நிலை குலைந்து (தன்னை) எண்ணி மனம் உருகும் தந்தையாகிய தசரதனைப்  பொங்கி வழிகின்ற அன்பினால் வணங்கி, அவன் கண் எதிரே சென்று அவன் இறங்கி அமிழ்ந்திருந்த பெரிய துயர்க் கடலிலிருந்து, கரை  ஏற்றினான் என்று எடுத்துரைக்கிறார்.

நாமும் என்றும் ஆணவம் அற்று, நம் பூர்வாசரியர்களான இராமாநுஜனும், தேசிகனும் வகுத்த பாதையை  பின்பற்றி எம்பெருமானின் அடியார்க்கு அடியார்களாக, தாஸர்களாக வாழ்வோம்.

ஸ்ரீமதே இராமாநுஜாய நம:

ஸ்ரீமதே நிகமாந்த மஹா தேசிகாய நம:

குறிப்புகள்:

  1. கம்பராமாயணம் – https://bit.ly/3ySsfXg
  2. வால்மீகி இராமாயண ஸ்லோகங்கள்: https://www.valmiki.iitk.ac.in/
  3. திருக்குறள் – https://thirukural-world.blogspot.com/