Design a site like this with WordPress.com
Get started

வினை தீர்க்கும் திருவேங்கட மாமலை – 1

பரமபதத்திலே கைங்கர்யஸாம்ராஜ்யத்திற்கு  அதிபதியாய் இருப்பினும் தன் பரத்வ ஸ்வரூபத்தை மறைத்துக் கொண்டு தன்னைச் சரணடையும் சேதனர்களின் மேல் கொண்ட எல்லையில்லா பக்ஷபாதத்தினால் தயையே திருவுள்ளமாய், அவர்கள் பற்றுவதற்கு ஹேதுவாய் நித்ய விபூதியில் இருந்து இர(ற)ங்கி வந்து அர்ச்சாவதாரமாக மண்ணுலகில் நித்யவாஸம் பண்ண திருவுள்ளம் கொண்டான் எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணன். கலியுகத்தின் ப்ரத்யக்ஷ தெய்வமாய் அர்ச்சாரூபமாய் முதன் முதலாக திருமலையில் ஸ்ரீநிவாஸனாக எழுந்தருளினான்.

கங்கையும் அதனிற் புனிதமான காவிரிக் கரையும் மற்றும் பல புண்ய நதிக் கரைகளும், செழிப்பான வனங்களும், காஞ்சி, மதுரா போன்ற புண்ய க்ஷேத்ரங்கள் பல இருப்பினும் எம்பெருமான் ஒரு மலையைத் தன் உறைவிடமாகக் கொள்ளக் காரணம் என்ன?

உயரமான ஒரு மலையில் இருந்து பெருகும் சுனையானது மேடு பள்ளம் என்று பாராமல் தங்கு தடையின்றி ஓடி அம்மலையில் வாழும் தாவரங்களைச் செழிப்பாக்கி, அங்குள்ள ஜீவராசிகளின் தாகத்தைப் போக்கி உயிர் கொடுக்கும். பின் பல சுனைகள் ஒன்று சேர்ந்து ஒரு மஹாநதியாக உருவங்கொண்டு கீழே பாய்ந்தோடி நாட்டை வளமாக்கும். அதேபோல இப்பூவுலகில் ஸம்ஸாரமென்னும் கொடியதான பாலை நிலத்தில் கட்டுண்டு அவஸ்தைப் படும் சேதனர்களைத் தன் குளிர்ந்த கடாக்ஷத்தால் நனைத்து உஜ்ஜீவிக்கவே பெருமான் மிகவும் உயரமான திருமலையில் எழுந்தருளினான். தன் எல்லையில்லா தயையை ஓர் வற்றாத சுனையாகப் பெருக்கச் செய்து, அதனை தேவர், மனுஷ்யர்,  உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற ஏற்றத் தாழ்வு பாராமல் எல்லோரிடத்திலும் சமமாகப் பாயச்செய்து தன் அனுபவத்தில் நனைத்தான். தயை என்னும் சுனையுடன் ஸௌலப்ய-ஸௌசீல்ய-வாத்ஸல்யங்களைச் சேர்த்து “அநந்யோபாயத்வம்” என்னும் ஓர் ஒப்பற்ற ஸமுத்ரமாகப் பெருக்கி இன்றளவும் ஸம்ஸாரஸாகரத்திலிருந்து நம்மைக் ரக்ஷித்துக் கொண்டிருக்கிறான் அகிலாண்ட கோடி ப்ரஹ்மாண்ட நாயகனான ஸ்ரீநிவாஸன். 

ஒப்பற்ற இத்திருமலையை ஆழ்வார்களும் நம் ஆசார்ய ஸார்வபௌமனும் எவ்வாறு கொண்டாடுகிறார்கள் என்று அடுத்த பகுதிகளில் அனுபவிப்போம்.

ஸ்ரீமதே நிகமாந்த மஹா தேஶிகாய நம:

விண்ணவரும் மண்ணவரும் விரும்பும் வெற்பு

 பரமபதத்திலே கைங்கர்யஸாம்ராஜ்யத்துக்கு அதிபதியாய் இருப்பினும் தன் பரத்வ ஸ்வரூபத்தை மறைத்துக் கொண்டு தன்னைச் சரணடையும் சேதனர்களின் மேல் கொண்ட பக்ஷபாதத்தினால் தயையே திருவுள்ளமாய், அவர்கள் பற்றுவதற்கு ஹேதுவாய் “ஸ்ரீவைகுண்ட விரக்தாய ஸ்வாமி புஷ்கரணீ தடே” என்றபடி ஸ்ரீவைகுந்தத்தில் இருந்து இ(ற)ரங்கி வந்து, ஸ்ரீநிவாஸனாக திருமலையில் நித்யவாஸம் செய்கிறான். அப்பெருமானின் பிரிவைப் பொறுக்க மாட்டாது நித்யரும் கூட தேஸோசிதமான தேஹங்களைப் பரிக்ரஹித்துக்கொண்டு திருமலையிலே வந்து அவனுக்கு நித்யகைங்கர்யங்கள் பண்ணுகின்றனர்.

கண்ணாவான் என்றும், மண்ணோர்விண்ணோர்க்கு,

தண்ணார் வேங்கட, விண்ணோர் வெற்பனே

திருவாய்மொழி 1-8-3

திருமலையானது மண்ணவர்க்கும் விண்ணவர்க்கும் பொதுவான தலமாகவும் அம்மலையிலே வீற்றிருக்கும் திருவேங்கடவன் இருதலையார்க்கும் பொதுவாய் நிற்கிறான் என்று ஸ்வாமி நம்மாழ்வார் அவனின் பரத்வத்தையும்  ஸௌலப்யத்தையும் மங்களாசாஸனம் பண்ணுகிறார். திருவேங்கடவன் எண்ணற்ற திருக்கல்யாண குணங்களை உடையவனாயிருப்பினும் அவனுடைய மற்ற குணங்களனைத்தும் தரம் பெறுவது அவன் தயையாலேயே என்பதனை “தயா சதகம்” என்னும் ஸ்தோத்ரத்தின் மூலம் ஸ்வாமி தேஶிகன் நிர்தாரணம் பண்ணுகிறார். மந்திபாய் வடவேங்கடமாமலை வானவர்கள் சந்தி செய்ய நின்றான்” என்று திருப்பாணாழ்வாரும் விண்ணவரும் மண்ணவரும் விரும்பும் வெற்பு என்று ஸ்வாமி தேஶிகனும் பாசுரமிட்டது இங்கு அனுசந்திக்கத்தக்கது.