Design a site like this with WordPress.com
Get started

வினை தீர்க்கும் திருவேங்கட மாமலை – 3

திருவேங்கடவன் எண்ணற்ற திருக்கல்யாண குணங்களை உடையவனாயிருப்பினும் அவனுடைய மற்ற குணங்களனைத்தும் தரம் பெறுவது அவன் தயையாலேயே என்பதனை “தயா சதகம்” என்னும் ஸ்தோத்ரத்தின் மூலம் ஸ்வாமி தேஶிகன் நிர்தாரணம் பண்ணுகிறார். அப்பேற்பட்ட தயையே ஒரு மலை வடிவம் கொண்டுள்ளது என்று இவ்வாறு ரஸோக்தியாக அருளிச் செய்கிறார் நம் ஆசார்ய வள்ளல்:

ப்ரபத்‌யே தம்‌ கிரிம்‌ ப்ராய: ஸ்ரீநிவாஸாநுகம்பயா |

இக்ஷுஸாரஸ்ரவந்த்யேவ யந்மூர்த்யா ஷர்கராயிதம்‌ ||

ஸ்ரீ தயாசதகம் – 1  

அடியார்களிடத்தில் தங்கு தடையின்றி வெள்ளமிட்டு ஓடும் திருவேங்கடமுடையானின் தயையானது ஒரு கரும்பின் சாறு போன்றுள்ளது. அது அனுபவிக்க பரம போக்கியமாய் இருக்கின்றது. ஸ்ரீநிவாஸனது கருணை வெள்ளமான கரும்பின் சாறு தானே ஒரு ஆறாய்ப் பெருகி, கனமாகி சர்க்கரையாகி உறைந்து கற்கண்டாக கனமாகி இன்னும் அனைவரும் அனுபவிக்க ஏற்றதாய் உள்ளது. இந்தக் கருணைதான் திருமலை வடிவம். ஸ்ரீநிவாஸனது தயை ஆற்று வெள்ளம்போல் தடையற்று அடியார்களின் மீது பெருகி அவர்கள் பாபங்களைப் போக்கி உய்விக்கிறது. இத்தகைய பெருமைகளை உடைய மலையப்பனின் தயை அசைக்க முடியாத ஒரு மாமலையாக நிற்கின்றது. இத்தகைய கருணையே வடிவான திருமலையைச் சரணமடைகின்றேன். என்று ஆழ்வார் அடியொட்டி ஸ்வாமி தேசிகன் மலையப்பனைப் பற்றாமல் மலையைப் பற்றுவது நன்கு சுவைக்கத்தக்கது. 

மேலும் ஸ்வாமி தேசிகன் ஸாதிக்கிறார் : 

கண்ணன் அடியிணை எமக்குக் காட்டும் வெற்பு

கடுவினையர் இருவினையும் கடியும் வெற்பு

திண்ணம் இது வீடென்னத் திகழும் வெற்பு

தெளிந்த பெருந்தீர்த்தங்கள் செறிந்த வெற்பு

புண்ணியத்தின் புகல் இதெனப் புகழும் வெற்பு

பொன்னுலகில் போகம் எல்லாம் புணர்க்கும் வெற்பு

விண்ணவரும் மண்ணவரும் விரும்பும் வெற்பு

வேங்கடவெற்பு என விளங்கும் வேத வெற்பே.

அதிகாரஸங்கிரஹம் – 43

எம்பெருமானுடைய திருவடிகள் இரண்டையும் நமக்குக் காட்டித் தரும் மலை; எத்தைகைய கொடிய பாபத்தையுடையவர்களின் இரண்டு கர்மங்களையும் ஒழிக்கவல்ல மலை; இதுவே பரமபதமென்று சொல்லும்படியான பெருமையைப் பெற்ற மலை; பல புண்ய தீர்த்தங்கள் நிறைந்த மலை; புண்ணியத்தின் புகலிடமாகத் திகழும் மலை; ஸ்ரீவைகுண்டத்தில் அடையக்கூடிய பகவதநுபவம் அனைத்தையும் அளிக்கக்கூடிய மலை; நித்யஸூரிகளுக்கும் பூலோகத்தில் உள்ள பாகவதர்களுக்கும் பொதுவாய் நிற்கும் மலை; இப்பெருமைகள் அனைத்தும் உடைய மலை ஸ்ரீநிவாஸன் நித்யவாஸம் செய்யும், திருவேங்கடமென்று ப்ரகாசிக்கின்ற, வேதத்தில் போற்றப்பெற்ற திருமலையேயாகும் என்று திருவேங்கடமலையைப் போற்றுகிறார். இப்பாசுரத்தில் ஸ்வாமி தேசிகன் ஆழ்வார்களின் ஈரச்சொற்களையொட்டி திருமலையை மங்களாசாசனம் பண்ணுவதை சில வரிகளின் மூலமாக சற்றே அனுபவிப்போம்.

கடுவினையர் இருவினையும் கடியும் வெற்பு

பாபங்களானவை பூர்வாகங்களென்றும் உத்தராகங்களென்னும் இருவகைப்படும். எம்பெருமானைப் பற்றுதற்கு முன்பு புத்திபூர்வமாகப் பண்ணும் பாபங்கள் பூர்வாங்களாம். பிறகு ப்ரகிருதி பாரவச்யத்தாலே ப்ராமாதிகமாக நேரும் பாபங்கள் உத்தராகங்களாம். இருவினை என்று ஸ்வாமி தேசிகன் இங்கு காட்டுவது ஆழ்வாரின் திருவாய்மொழிப் பாசுரத்தை(3-3-6) அடியொற்றிய இரண்டு வினைகளையே.

கண்ணன் அடியிணை எமக்குக் காட்டும் வெற்பு

“ஆறெனக்கு! நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்” என்று எம்பெருமானின் திருப்பாதங்களே நமக்கு உபாயம் என்று காட்டினார் ஆழ்வார். ஸ்வாமி தேசிகனோவென்னில் அத்திருத்தாள்களை  நமக்குக் காட்டித்தரும் மலையே திருமலை என்று தலைக்கட்டி அம்மலையே அடியார்களுக்கு  உபாய-உபேயங்களாய் நிற்பதாக ஸ்தாபிக்கிறார்.   

விண்ணவரும் மண்ணவரும் விரும்பும் வெற்பு

திருமலையானது மண்ணவர்க்கும் விண்ணவர்க்கும் பொதுவான தலமாகவும் அம்மலையிலே வீற்றிருக்கும் திருவேங்கடவன் இருதலையார்க்கும் பொதுவாய் நிற்கிறான் என்றும்  அவன் பரத்வ-ஸௌலப்யங்களை ஒன்றுசேர மங்களாசாஸனம் பண்ணுகிறார் நம் ஸ்வாமி. “மந்திபாய் வடவேங்கடமாமலை வானவர்கள் சந்தி செய்ய நின்றான்” என்று ஸ்வாமி திருப்பாணாழ்வாரும் “கண்ணாவானென்றும், மண்ணோர்விண்ணோர்க்கு” என்று ஸ்வாமி நம்மாழ்வாரும் பாசுரமிட்டது இங்கு அனுசந்திக்கத்தக்கது.

திருமலையின் பெருமையையும் திருவேங்கடத்தானின் தயையையும் பேசித் தலைக்கட்ட முடியாது. அப்பெருமைகளை உடையவனின் திருமார்பிலே நித்யவாஸம் பண்ணுகிற  பெரியபிராட்டியானவள்  “ஒரு கணப்பொழுதும் பிரிந்திருக்கமாட்டேன்” என்று சொல்லிக்கொண்டே இருக்கிறாள். ஆழ்வார்களும் நம் தூப்புல் குலமணியும் காட்டியது போல எம்பெருமானைத் தவிர வேறொரு புகலில்லாத நாம் அவன் உகந்து நிற்கும் திருமலை சென்று சேர்ந்து அவன் திருவடிவாரத்திலே ஏதேனுமாக அந்வயிப்போம்!

ஸ்வாமி தேசிகன் திருவடிகளே சரணம்.

வினை தீர்க்கும் திருவேங்கட மாமலை – 2

எம்பெருமான் திருமலையில் ஏன் எழுந்தருளினான் என்று முதற் பகுதியில் பார்த்தோம்.

இவ்வாறு அவனுகந்த, அவனுக்குப் பரமப்ராப்யமான திருமலைதான் நமக்கும் பரம ப்ராப்யம்; ஆதலால் அனைவரும் திருவேங்கட மாமலையைச் சென்றடைந்து அம்மலையையே உபாயமாகப் பற்றுங்கோள் என்று ஸாதிக்கிறார் நம் குருகூர்ச் சடகோபன்.    

குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்

அன்று ஞாலம் அளந்த பிரான் பரன்

சென்றுசேர் திருவேங்கட மாமலை

ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே.

திருவாய்மொழி 3-3-8

கிருஷ்ணாவதாரத்தில் கோவர்த்தன மலையைக் குடையாகத் தாங்கி நின்று குளிர்ந்த பெருமழையை தடுத்தான் கண்ணன். அவனே முன்பொரு காலத்தில் திருவிக்ரமனாய் மூவுலகையும் அளந்து பெற்றான். மூவுலகினை அளந்தும் கானகமெல்லாம் அலைந்தும் வாடிய அத்திருவடிகள் சென்று, சேர்ந்து, நின்றவிடமான திருமலையொன்றை மாத்திரமே ஆச்ரயித்தால் நமது வினைகள் யாவும் தொலைந்திடும். வேண்டிய வரங்களைத் தந்திட திருவேங்கடவன் நின்றிருக்க திருமலையாழ்வாரே போதும் என்றருளிகிறார் ஆழ்வார். இவ்வாழ்வாரே:

வேங்கடங்கள் மெய் மேல்வினை முற்றவும்
தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார்
வேங்கடத்து உறைவார்க்கு நமவென்னலாம் கடமை
அது சுமந்தார்க்கட்கே.

திருவாய்மொழி 3-3-6

என்று திருமலையப்பனுக்கு நித்ய கைங்கர்யங்கள் செய்யும் பரம பாகவதர்களை ஏற்றிப் பேசி திருவேங்கடவனின் அபராதஸஹத்வத்தைத் தலைக்கட்டுகிறார்.

இவ்விரு பாசுரங்களிலும் ஆழ்வார் திருமலையானது அடியார்களின் வினைகளைத் தீர்க்கவல்லது என்று காட்டுகிறார். வினைகள் என்று இங்கு எதனைக் கூறிற்று? சாஸ்த்ரங்கள் பாபங்களை பூர்வாகங்களென்றும் உத்தராகங்களென்றும் இருவகைப்படுத்தி, எம்பெருமானைப் பற்றுதற்கு முன்பு புத்திபூர்வமாகப் பண்ணும் பாபங்கள் பூர்வாங்கள்; பிறகு ப்ரகிருதி ஸம்பந்தத்தாலே நேரும் பாபங்கள் உத்தராகங்கள் என்றும் அறிவிக்கின்றன.

அங்கண் இரண்டும் கொண்டெங்கள் மேல் நோக்குதியேல் எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம் பாவாய்” என்றபடி எம்பெருமானின் செந்தாமரைக் கண்கள் அடியார்களை வசீகரம் செய்வது மட்டுமன்றி அவன் திருக்கண் நோக்கு ஒன்றே போதுமானது; அது சேதனர்களின் அநாதியான பாபங்களை ஒழிக்கவல்லது என்றாள் கோதா தேவி. ஸூர்யனை ஒத்த அவனின் ஒரு திருக்கண்ணானது தன் உஷ்ணத்தாலே சேதனர்கள் பாபத்தை அழிக்கும். சந்திரனை ஒத்த அவன் மற்றுமொரு திருக்கண்ணானது அச்சேதனர்களுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும். அதனாலே “கண்ணா! அங்கண் இரண்டும் கொண்டு எங்களை நோக்கி எங்களின் சாபத்தைப் போக்கி ஹிதத்தை அளிப்பாயாக” என்று நம்மை முன்னிட்டுக்கொண்டு அவ்வாயர்குலக்கொழுந்திடம் விண்ணப்பஞ்செய்கிறாள்.

திருவேங்கடமுடையானின் திவ்ய மங்கள ஸ்வரூபத்திலிருந்து பெருகும் ஒளியானது பரத்வத்தைத் திரியாகவும் வாத்ஸல்யத்தை நெய்யாகவும் கொண்டு ஏற்றிய தீபத்திலிருந்து பெருகும் கிரணங்கள் போன்றவை. ஸூர்ய கிரணங்களைக் காட்டிலும் உஷ்ணம் கொண்ட அவை சேதனர்களின் இருவினைகளையும் ஒழித்து விடும். அதே நேரத்தில் பசுமையான சோலைகள்சூழ் தண்திருவேங்கட மாமலையானது, சென்று சேரும் அடியார்களுக்கு ஹிதத்தை அளிக்க வல்லது.

மலையப்பன் மீது மட்டற்ற பக்தி கொண்ட மஹாவிவேகியான ஸ்வாமி குலசேகராழ்வார் திருவேங்கடமலையில் உள்ள ஒரு காட்டில் குருகு மீன் முதலிய ஜங்கமப் பொருளாகவாவது அல்லது  ஆறு மரம் முதலிய தாவரப் பொருளாகவாவது பிறவியைப் பெற விரும்பினார். அப்பிறவியை பிரமன் மற்றும் இந்திரன் முதலியவர்களின் செல்வங்களைப் பெறுவதைக் காட்டிலும் மேம்பட்டதாக உணர்ந்தார்.  மீனாகவும் குருகாகவும் பொற்குடமாகவும் செண்பகமாகவும் ஒவ்வொரு பிறவியைப் பெற விரும்பி பாசுரமிட்ட ஆழ்வாருக்கு ஒவ்வொரு பிறப்பிலும் ஒவ்வொரு அநுபபத்தி தோன்றிக் கொண்டேயிருந்தது.  கடைசியாக ஒரு பிறவியையும் தாமாக வேண்டிக் கொள்ள விரும்பாதவராய் திருமலைமேல் “ஏதேனுமாவேனே” என்று அம்மலையைக் கொண்டாடுகிறார்.

உம்பர் உலகாண்டு ஒரு குடைக்கீழ் உருப்பசி தன்

அம் பொற் கலை அல்குல் பெற்றாலும்  ஆதரியேன்

செம் பவள வாயான் திருவேங்கடமென்னும்

எம்பெருமான் பொன்மலைமேல் ஏதேனும் ஆவேனே.

பெருமாள் திருமொழி 4-10

“மேலுலகங்களையெல்லாம் ஒரு கொற்றக் குடையின் நிழலிலே அரசாண்டு ஊர்வசியினுடைய அழகிய பீதாம்பரம்  அணிந்த அல்குலை அடையப் பெறினும் அதனை விரும்பமாட்டேன். சிவந்த பவழம் போன்ற திருவாயையுடையனான எனது அப்பனுடைய திருவேங்கடம்  என்ற பெயரையுடைய அழகிய திருமலையின் மேல் ஏதேனுமொரு பதார்த்தமாகப் பிறக்கக் கடவேன்.” என்கிறார். திருமலையில் ஏதாவது ஒரு பொருளாகப் பிறந்தால் ஸ்ரீநிவாஸனது கடாக்ஷமானது எப்பொழுதாயினும் க்ஷணப்பொழுதேனும் தம்மீது விழப்பெறலாம் என்பது ஆழ்வாரின் திருவுள்ளம்.

திருமலையாழ்வாரை ஸ்வாமி தேசிகன் எவ்வாறு கொண்டாடுகிறார் என்று அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

வினை தீர்க்கும் திருவேங்கட மாமலை – 1

பரமபதத்திலே கைங்கர்யஸாம்ராஜ்யத்திற்கு  அதிபதியாய் இருப்பினும் தன் பரத்வ ஸ்வரூபத்தை மறைத்துக் கொண்டு தன்னைச் சரணடையும் சேதனர்களின் மேல் கொண்ட எல்லையில்லா பக்ஷபாதத்தினால் தயையே திருவுள்ளமாய், அவர்கள் பற்றுவதற்கு ஹேதுவாய் நித்ய விபூதியில் இருந்து இர(ற)ங்கி வந்து அர்ச்சாவதாரமாக மண்ணுலகில் நித்யவாஸம் பண்ண திருவுள்ளம் கொண்டான் எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணன். கலியுகத்தின் ப்ரத்யக்ஷ தெய்வமாய் அர்ச்சாரூபமாய் முதன் முதலாக திருமலையில் ஸ்ரீநிவாஸனாக எழுந்தருளினான்.

கங்கையும் அதனிற் புனிதமான காவிரிக் கரையும் மற்றும் பல புண்ய நதிக் கரைகளும், செழிப்பான வனங்களும், காஞ்சி, மதுரா போன்ற புண்ய க்ஷேத்ரங்கள் பல இருப்பினும் எம்பெருமான் ஒரு மலையைத் தன் உறைவிடமாகக் கொள்ளக் காரணம் என்ன?

உயரமான ஒரு மலையில் இருந்து பெருகும் சுனையானது மேடு பள்ளம் என்று பாராமல் தங்கு தடையின்றி ஓடி அம்மலையில் வாழும் தாவரங்களைச் செழிப்பாக்கி, அங்குள்ள ஜீவராசிகளின் தாகத்தைப் போக்கி உயிர் கொடுக்கும். பின் பல சுனைகள் ஒன்று சேர்ந்து ஒரு மஹாநதியாக உருவங்கொண்டு கீழே பாய்ந்தோடி நாட்டை வளமாக்கும். அதேபோல இப்பூவுலகில் ஸம்ஸாரமென்னும் கொடியதான பாலை நிலத்தில் கட்டுண்டு அவஸ்தைப் படும் சேதனர்களைத் தன் குளிர்ந்த கடாக்ஷத்தால் நனைத்து உஜ்ஜீவிக்கவே பெருமான் மிகவும் உயரமான திருமலையில் எழுந்தருளினான். தன் எல்லையில்லா தயையை ஓர் வற்றாத சுனையாகப் பெருக்கச் செய்து, அதனை தேவர், மனுஷ்யர்,  உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற ஏற்றத் தாழ்வு பாராமல் எல்லோரிடத்திலும் சமமாகப் பாயச்செய்து தன் அனுபவத்தில் நனைத்தான். தயை என்னும் சுனையுடன் ஸௌலப்ய-ஸௌசீல்ய-வாத்ஸல்யங்களைச் சேர்த்து “அநந்யோபாயத்வம்” என்னும் ஓர் ஒப்பற்ற ஸமுத்ரமாகப் பெருக்கி இன்றளவும் ஸம்ஸாரஸாகரத்திலிருந்து நம்மைக் ரக்ஷித்துக் கொண்டிருக்கிறான் அகிலாண்ட கோடி ப்ரஹ்மாண்ட நாயகனான ஸ்ரீநிவாஸன். 

ஒப்பற்ற இத்திருமலையை ஆழ்வார்களும் நம் ஆசார்ய ஸார்வபௌமனும் எவ்வாறு கொண்டாடுகிறார்கள் என்று அடுத்த பகுதிகளில் அனுபவிப்போம்.

ஸ்ரீமதே நிகமாந்த மஹா தேஶிகாய நம: