Design a site like this with WordPress.com
Get started

இதயத்திருள்கெட இடைகழியில் ஏற்றிய விளக்கு

வேதங்களின் சிரோபாகமான உபநிடதங்களை (ச்ருதீநாமுத்தரம் பாகம்) ஆதாரமாகக் கொண்டு ஸ்ரீவ்யாஸபகவான் ப்ரஹ்மஸூத்ரத்தில் பக்தி-ப்ரபத்தி என்ற இரு உபாயங்களால் எம்பெருமானை அடையலாம் என்று காட்டினார். அவர் காட்டிய இவ்வழியே நல்வழி என்று பரமதபங்கத்தில் ஸ்வாமி தேசிகன் ஸ்தாபிக்கிறார்.

வையமெலாம் இருள் நீக்கு மணிவிளக்காய்

மன்னிய நான்மறைமௌலி மதியே கொண்டு

மெய்யலது விளம்பாத வியாசன் காட்டும்

விலக்கில்லா நல்வழியே விரைந்து செல்வீர் ||

(பரமதபங்கம் – 52)  

என்றபடி வேதாந்தம் “ரத்னதீபமாய்” நின்று உலகிலுள்ள அஜ்ஞானமாகிய இருளைப் (பொய் நின்ற ஞானம்) போக்குகின்றது என்று ஸ்வாமி தேசிகன் மேலும் ஸ்தாபிக்கிறார். 

எம்பெருமானுடைய ஸ்வரூப-ரூப-குண விஷேஷனங்களை ஸர்வோத்தமமான மூன்று திருவந்தாதிகள் மூலம் மாலைகளாகத் தொடுத்து, அத்தீபத்தை முதன்முதலாக அநாதியான தமிழ் பாஷையில் பாசுரமிட்டுத் தெளியாத மறை நிலங்களைத் தெளியவைக்கும் ஓர் அதியத்புதமான திருவிளக்கை ஏற்றினர் முதல் மூன்று ஆழ்வார்களான பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார் மற்றும் பேயாழ்வார். அவர்களுக்குப் பின் திருவவதரித்த ஆழ்வார்கள் மற்றும் ஆசார்யர்கள், ஸ்ரீவ்யாஸபகவானும் முதல் ஆழ்வார்களும் காட்டிய வழியில் சென்று, அவ்விளக்கிற்கு மேன்மேலும் எம்பெருமானின் திவ்ய மங்கள அநுபவம் என்னும் நெய்யைச் சேர்த்ததால் இன்றுவரை அவ்விளக்கானது கொழுந்துவிட்டு எரிந்துகொண்டு  நம்மிடத்திலுள்ள அஜ்ஞானமென்னும் இருளைப் போக்கிக் கொண்டிருக்கிறது.  

ஆங்காங்கே கோயில்களில் அர்ச்சாவதார மூர்த்தியாய் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானைத் தர்சனம் செய்துகொண்டு வந்த இம்மூன்று ஆழ்வார்களையும் எம்பெருமான் ஒரே காலத்தில் ஓரிடத்தில் ஒன்று சேர்க்க திருவுள்ளம் பற்றி மூவரையும் திருக்கோவலூரில் வீற்றிருக்கும் திருவிக்ரமப்பெருமானின் திருப்பதியில் ஒன்றுசேர்த்து அவனநுபவத்தில் ஆழ்த்தினான். அன்றைய தினம் இரவில் பெருமழை பெய்ததால் பொய்கையாழ்வார் அங்கிருந்த ம்ருகண்டு மகரிஷியின் ஆச்ரமத்திலே இடைகழியில் ஸயனித்திருந்தார். சற்று நேரத்தில் அங்கு வந்து சேர்ந்த பூதத்தாழ்வார் தனக்கும் கொஞ்சம் இடமுண்டோ என்று வினவ அதற்குப்  பொய்கையாழ்வார் “ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம்” என்று கூறி வரவேற்றார். பிறகு அவ்வாறே பேயாழ்வாரும் வினவ, “இருவர் உட்காருமிடம், மூவர் நிற்கப் பாங்காம்.” என்று பணிந்து வரவேற்றார்கள். இதற்காகவே காத்துக்கொண்டிருந்த எம்பெருமான் இவர்களுக்கு இடையில் நான்காவதாக வந்துப் புகுந்துகொண்டு, பொறுக்கவொண்ணாதபடி ஓர்  நெருக்கத்தை ஏற்படுத்தினான்.  இப்படி நெருக்குவது இவர்களுடைய சேர்த்தியிலே  உவந்த நெடுமால் தான் என்று நன்கறிந்த மூவரும், லோகக்ஷேமத்திற்க்காகப் ப்ரபந்தங்களை இவர்கள் மூலம் வெளியிட விரைந்த எம்பெருமானின் திருவுள்ளத்தை உணர்ந்தனர். 

ப்ரத்யக்ஷமாய் ஸேவை ஸாதிக்கும் பெருமானைக் கண்ணால் கண்டு ஸேவிக்க அகல் விளக்கே போதுமானது. ஆனால் “நடுவில் இவர் ஒருவரும் என்று அறியா வண்ணம்” ஸ்தூலரூபமாய் எழுந்தருளியிருக்கும் பெருமானை ஸேவிக்க இதுவரை யாரும் ஏற்றாத ஒரு ஆச்சர்யமான விளக்கை அல்லவா ஏற்ற வேண்டும்! 

முதலில் பொய்கைப்பிரான் திருக்கோவலூர் எம்பெருமானான நெடுமாலைக் காணச் சாதாரணமான விளக்கு போதாதென்று திருவுள்ளம் எண்ணி, அவனுருவுக்குத் தகுமாறு ஸூர்யனை விளக்காக்கி, அதற்கேற்ப கடலையும் வையத்தையும் நெய்யாகவும் தகளியாகவும் ஆக்கி, எம்பெருமானைத் தவிர்ந்த பொருள்களனைத்தும் அவனுடைமைகள்; அவற்றிற்க்கெல்லாம் அவன் தலைவன் என்ற பரஜ்ஞானம் கொண்டு   

வையம்தகளியா வார்கடலே நெய்யாக

வெய்யகதிரோன் விளக்காக செய்ய

சுடராழியானடிக்கே சூட்டினேன் சொல்மாலை 

இடராழி நீங்குகவே என்று ||

முதல் திருவந்தாதி – 1

என்றொரு ஆச்சர்யமான விளக்கை ஏற்றி நூறு பாசுரங்களைப் பாடியருளினார்.

ஸூர்யன் எவ்வாறு தன்னையும் காட்டி மற்ற வஸ்துக்களையும் காட்டுகின்றானோ அது போன்றதல்லவோ ஞானம் (யதா ஸூர்யஸ் ததா ஜ்ஞாநம்) என்பதனால் ஸூர்யனைக் கொண்டு எம்பெருமானை ஊஹிக்கலானார். ஸூர்யன் விளக்காகவேண்டுமானால் அதற்கு நெய்யும் தகளியும் வேண்டுமே என ஆலோசித்து “கதிரவன் கனைகடல் முளைத்தனனிவனோ” என்றபடியால் கடலை நெய்யாகப் பாவித்து, கடல் வையத்தைச் சூழ்ந்திருப்பதாலே இந்த வையத்தையே அகலாகக் கருதினார். ஒப்பற்ற அவ்விளக்கைக் கொண்டு கண்ணாற்கண்டதுபோல் எம்பெருமானை அனுமானத்தால் விசதமாயறிந்தார். ப்ரம்மம் சூன்யமானது என்று கூறும் நாஸ்திக மதங்களை மறுத்து அவன் அசாதாரணமான திருமேனியை உடையவனாயும், திருவாழி முதலிய திவ்ய ஆயுதங்களை ஏந்தினவனாயும் இருக்கின்றான் எனக் கருதினார். ஆழ்வாருக்கு எம்பெருமான் அருளிய மயர்வற மதிநலத்தால், அவனுக்குத் தாம் அடிமைப்பட்டவர் என்பது நன்கு புலப்பட்டு, அதற்க்கேற்ப முதலில் அவன் திருவடிகளைப் பற்றி நின்றார். 

ஸ்வாமி பொய்கையாழ்வார் வையம், வார்கடல், வெய்யகதிரோன் என்ற விஷயங்களைக் காட்டிப் படிப்படியாக எல்லா வஸ்துக்களிலுமுள்ள தோஷங்களைக் காட்டும் நோக்காலே சொல்மாலையைச் சூட்டினார். அருகிலிருந்து கேட்டுகந்த ஸ்வாமி பூதத்தாழ்வார் தோஷங்கள் அறியப் பெற்றதால் விஷயப்ராவண்யம் விலகி, பரமாத்மப்ராவண்யம் நிலைத்து, அவன் வைலக்ஷண்யத்தை உணர்ந்து, அவனிடத்தில் உண்டான அன்பின் வெளிப்பாடாக,

அன்பேதகளியா ஆர்வமேநெய்யாக

இன்புருகுசிந்தையிடுதிரியா நன்புருகி

ஞானச்சுடர்விளக்கேற்றினேன் நாரணற்கு

ஞானத்தமிழ்புரிந்தநான் ||

இரண்டாம் திருவந்தாதி – 1

என்று தொடங்கி நூறு பாசுரங்களைப் பாடியருளினார்.

“நல்லறிவை அளிக்கும் தமிழை விரும்பியுள்ள பூத்ததனாகிய நான் நாராயணனிடத்தில் ஸ்நேஹமே அகலாகவும், அவனை அநுபவிப்பதில் உள்ள ஈடுபாடே நெய்யாகவும், அவ்வநுபவ க்ரமத்தினால் உண்டாகும் களிப்பினால் கரைந்திருக்கும் மனம் திரியாகவும், ஞானஸ்வரூபமான ஆத்மா உருகப்பெற்று எம்பெருமானான நாராயணனுக்கு பரபக்தியான ஒளி நிறைந்த ப்ரதீபத்தை ஏற்றி வைத்தேன்” என்றருளினார்.

அன்பாவது ஸ்நேஹம். நாராயணனிடத்தில் அந்த ஸ்நேஹம் உண்டாகும்பொழுது அவனை மேலும் அநுபவிக்க வேண்டுமென்கிற ஆர்வம் எழும். அவ்வார்வமிருந்தால் யோகதசையில் மனத்தை அவனிடமே பதியவைப்பதென்ற சிந்தை கூடும். இவ்விரண்டும் திரிகளாகக் கொண்டு ஏற்றப்படும் விளக்கானது இன்பமாக மேன்மேலும் உருகா நிற்கும். இவ்வளவும் ஏற்பட்ட பிறகு பரபக்தி எனப்படும் ஞானம் உதித்து அதுவே நம் அகவிருளனைத்தையும் விலக்கும். இவ்வனைத்தும் நாராயணன் விஷயமானபோதுதான். வேறு தேவதையைப் பற்றிய அன்பு முதலியன உள்ளவர்க்கு உள்ளத்தில் அஜ்ஞானமே பரவா நிற்கும் என்று தலைக்கட்டினார்.

மநந பர்யந்தமான ஞானத்தை வையந்தகளியில் பொய்கையாரும், த்யானமென்னும் பக்தியை அன்பேதகளியில் பூதத்தாரும் அருளிச்செய்ய, அதன்மேல் பிறக்கும் பரஜ்ஞானமென்றப் பரிபூர்ண ஸாக்ஷத்காரத்தைத் தொடங்கிப் பேயாழ்வார் திருக்கண்டேன் நூற்றந்தாதி அருளிச்செய்கிறார்.

திருக்கண்டேன் பொன்மேனிகண்டேன் திகழும் 

அருக்கனணிநிறமும்கண்டேன் செருக்கிளரும்

பொன்னாழிகண்டேன் புரிசங்கம்கைக்கண்டேன்

என்னாழிவண்ணன்பால் இன்று ||

மூன்றாம் திருவந்தாதி – 1

“அதுவரை ஸ்தூலகாரமாய் ஸேவையளித்திருந்த என்னப்பனை செவ்வனே கண்டு களிக்கப்பெற்றேன். புருஷகாரமாயுள்ள பெரிய பிராட்டியாரை அவனது திருமார்பில் ஸேவிக்கப்பெற்றேன். அவளது சேர்த்தியால் கடல்வண்ணனான அவனது திருமேனி பொன்னிறமாயிருப்பதைக் கண்டேன். ப்ரகாசிக்கின்ற ஸூர்யனுடையது போன்ற அழகிய நிறத்தையும் கண்டேன். போரில் எழா நின்ற அழகிய திருவாழியைக் கண்டேன், திருக்கையிலே வலம்புரி சங்கத்தைக் கண்டேன்” என்று எம்பெருமானின் திவ்யமங்கள ஸ்வரூபத்தின் மேன்மையை நேரில்கண்டு வியந்தருளுகிறார்.

இவ்வைபவத்தை ஸ்வாமி தேசிகன் தேஹளீச ஸ்துதியில் மிக ஆஸ்சர்யமாக மங்களாசாஸனம் செய்து அநுபவிக்கிறார். 

தீபேந கேநசிதசீதருசா நிசீதே,

ஸ்நேஹோபபந்நபரிசுத்‌தகுணார்பிதேந |

தஹ்ராவகாசநிபிடம்‌ தத்‌ருசுர்பவந்தம்‌

ஸ்வாத்யாய யோக நயநா: சுசய: கவீந்திரா: ||

தேஹளீச ஸ்துதி-6

வேதத்தையும் த்யானத்தையும் கண்களாகக் கொண்டவர்களாய், மனத்தூய்மையுடையராய் சிறந்த கவிகளான முதலாழ்வார்கள் நள்ளிரவில் குளிர்ந்த ஒளியையுடைய சந்திரனல்லாததாய் விலக்ஷணமானதாய் பக்தியென்னும் நெய்யுடன் கூடியதாய் தூய்மையான ஸத்வகுணத் திரியால் ஏற்றப்பட்ட தீபத்தால் அதியற்பமான இடத்தில் நெருக்கிக் கொண்டிருக்கிற உன்னைக் கண்டார்கள் என்று திருக்கோவலூர் தேஹளீசப் பெருமாளை ஸேவித்தருளுகிறார்.

மேலும் முதலாழ்வார்களாலேயே திருக்கோவலூர் எம்பெருமானான த்ரிவிக்ரமனின் ஸௌசீல்யம் வெளிப்பட்டது என்பதனை 

காஸாரபூர்வகவிமுக்யவிமர்த்தஜந்மா

பண்ணாதடேக்ஷூஸுபகஸ்ய ரஸோ பஹூஸ்தே |

த்வத்பாதபத்மமதுநி த்வதநந்யபோக்யே

நூநம்‌ ஸமாச்ரயதி நூதநசர்க்கராத்வம்‌ ||

தேஹளீச ஸ்துதி-7

என்கிற ஸ்லோகம் மூலமாக அழகிய கவிநயத்துடன் ஸாதிக்கிறார்.

ஆற்றின் கரையில் பயிராகிச் செழித்த கரும்பை ஆலையில் இட்டுப் பிழிந்து எடுக்கும் சாறானது மிக இனியதாயிருக்கும். அது தாமரையினின்று பெரும் உயர்ந்த தேனுடன் கலந்துவிட்டால் அதன் இனிமைக்கு எல்லையில்லை. பெண்ணையாற்றின் கரையில் செழிப்பாய் வளர்ந்த கரும்பு போலுள்ள திருக்கோவலூர் எம்பெருமானை முதலாழ்வார்கள் நெருக்கியபடியால் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற இடையீடின்றி கலத்தலாகிய ஸௌசீல்யம் கருப்பஞ்சாறாக வெளியாயிற்று. வேறு தெய்வத்தையும் உபாயத்தையும் நாடாத பாகவதர்கள் அவன் திருவடித்தாமரையின் தேனைப் பருகி அநுபவிக்கும்போது அந்த ஸௌசீல்யமென்னும் கருப்பஞ்சாறு புதிய சர்க்கரையாகின்றது. தேனில் சர்க்கரையை கலந்தது போல் உன் திருவடிகளை அநுபவிக்கும்போது ஸௌசீல்ய குணம் தோன்றிக் கலந்து அவ்வநுபவத்தை பரமபோக்கியமாக்குகின்றது என்கிறார். 

ஸ்வாமி திருவரங்கத்தமுதனார் இராமானுசநூற்றந்தாதியில், 

முதல் மூன்று ஆழ்வார்களிடத்தில் எம்பெருமானாருக்கு இருந்த ஈடுபாட்டை நிர்த்தாரணம் பண்ணுகையில் “வருத்தும்புறவிருள்மாற்ற எம்பொய்கைப்பிரான் மறையின் குருத்தின் பொருளையும் செந்தமிழ்தன்னையும் கூட்டி ஒன்றத்திரித்து அன்றெரித்த திருவிளக்கு” என்றும் “இறைவனைக்காணும் இதயத்திருள்கெட ஞானமென்னும் நிறைவிளக்கேற்றிய பூதத்திருவடிதாள்கள்” முதல் இரு ஆழ்வார்கள் ஏற்றிய விளக்கின் வைபவத்தையும் சேர்த்து மங்களாசாசனம் பண்ணுகிறார். மேலும் புறவிருள் மற்றும் அகவிருள் நீங்கி எம்பெருமானை ப்ரத்யக்ஷமாய் நேரில் கண்டு அநுபவித்த பேயாழ்வாரை “மன்னியபேரிருள்மாண்டபின் கோவலுள்மாமலராள் தன்னொடுமாயனைக் கண்டமைகாட்டும்  தமிழ்த்தலைவன்” என்று மங்களாசாசனம் பண்ணுகிறார்.

பாட்டுக்குரிய பழையவர் மூவரைப் பண்டொருகால்

மாட்டுக்கருள் தருமாயன் மலிந்து வருத்துதலால்

நாட்டுக்கிருள்செக நான்மறை அந்தி நடைவிளங்க

வீட்டுக்கிடைகழிக்கே வெளிகாட்டும் இம்மெய்விளக்கே ||

அதிகாரஸங்க்ரகம்-50

இடைகழியில் ஏற்றிய விளக்கின் வெளிச்சமானது எப்படி வீட்டின் உள்ளும் புறமும் படர்ந்து வீட்டின் இருளைப் போக்குமோ அதுபோன்று திருக்கோவலூரின் ஓர் இடைகழியில் கண்ணனாகிய நெடுமால் இம்மூன்று ஆழ்வார்களை நெருக்க அம்மூவரிடமிருந்தும் திருவவதரித்த மூன்று திருவந்தாதிகளென்னும் தீபமானது உலகத்திலுள்ளவர்களின் அஜ்ஞானம் நீங்கவும், நான்கு வேதங்களின் அந்தத்தில் கூறிய மார்க்கம் ப்ரகாஸிக்கவும் செய்து இவ்வுலகை உஜ்ஜீவிக்கும் என்றருளி ஆதிபக்தர்களான முதலாழ்வார்களின் வைபவத்தைத் தலைக்கட்டுகிறார் ஸ்வாமி தேசிகன்.

காசினியோர்தாம் வாழக் கலியுகத்தே வந்துதித்த வள்ளல்

ஸம்ஸார பந்தத்தில் கட்டுண்டு ஜீவன்கள் படும் அவஸ்த்தையானது கண்டு இமையோர் தலைவனுக்குப் பொறுக்கமுடியவில்லை. அவர்களைத் துன்பத்திலிருந்து உய்விக்க இராமனாகவும் கண்ணனாகவும் அவர்கள் மத்தியிலேயே அவதரித்து, அவர்களைத் திருத்திப் பணிகொள்ளப் பார்த்தான். இருப்பினும் அவர்கள் திருந்தவில்லை. பின்பு விஷ்வக்ஸேநரிடம், “நான் லீலாவிபூதியிலுள்ள உயிர்களை உஜ்ஜீவிப்பதற்காகப் பல வகையான யோனிகளில் அவதரித்து அவர்களுடன் கலந்து பரிமாறி, அவர்களை நல்வழிப் படுத்த முயன்றும் அவர்களுடைய அஜ்ஞானம் நீங்க வழியில்லை. கர்ம வாஸனையால் ஸம்ஸாரமென்னும் இருளில் இருந்துகொண்டு என்னை நினைக்காமலும் மோக்ஷத்திற்க்காக என்னை அணுகாமலும் இருக்கின்றனர். ஆகவே நீர் பூவுலகில் அவதரித்து, ஸ்ரீஸூக்திகளை அருளிச்செய்து, மெய்நின்ற ஞானத்தை ஊட்டி, அவர்களின் அழுக்குடம்புகளைத் தொலைக்கும்படி செய்து எமக்கு ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்யும்படி மாற்றியருளும்!” என்று நியமித்தருளினான். அதன்படி எம்பெருமானால் மயர்வற மதிநலம் அருளப்பெற்று, விஷ்வக்ஸேநர், ஆழ்வார்களுள் ப்ரதானமானவராகவும், ப்ரபந்நஜன கூடஸ்தருமாய், ஓர் வைகாசி விசாகத்தில் ஸ்வாமி நம்மாழ்வாராக இப்புவியில் அவதரித்து நான்கு வேதங்களின் ஸாரமாக நான்கு திவ்ய ப்ரபந்தங்களைத் தந்தருளினார். தம் ஸ்ரீஸூக்திகள் மூலம் தீர்ந்த அடியவர்களைத் திருத்தி எம்பெருமானிடத்தில் பணிகொள்ள வைப்பதையே ஆழ்வார் தன் திருவவதார வைபவத்தின் தலையாய கர்தவ்யமாகக் கொண்டார். 

ஆழ்வார் மூலமாக எம்பெருமான் நமக்கு செய்யும் இப்பேருபகாரத்தை ஸ்வாமி தேசிகன் “அம்ருதாஸ்வாதினி”ல் கொண்டாடுகிறார்:

அந்தமிலாப் பேரின்பம் அருந்த ஏற்கும் 

அடியோமை அறிவுடனே என்றும் காத்து

முந்தை வினை நிரை வழியில் ஒழுகாது எம்மை 

முன்னிலையாம் தேசிகர் தம் முன்னே சேர்த்து

மந்திரமும் மந்திரத்தின் வழியும் காட்டி 

வழிப் படுத்தி வானேற்றி அடிமை கொள்ளத்

தந்தையென நின்ற தனித் திருமால் தாளில் 

தலை வைத்தோம் சடகோபன் அருளினாலே

அம்ருதாஸ்வாதினி – 28

“எல்லையில்லா ஆனந்தத்தை அளிக்கும் மோக்ஷமென்னும் ஸாதனத்திற்குத் தகுதியாயுள்ள நம்மைக் காத்து, ஸ்திரமான தர்ம பூத ஞானத்தைக் கொடுத்து எம்பெருமான் நம்மை ரஷித்தருளுகிறான். மேலும் அநாதியான கர்ம ஸம்பந்தத்தில் நம்மை அழுத்தாமல் நம்மைக் கரை சேர்ப்பதற்குப் ப்ரதானமான ஸ்தானத்தில் நிற்கின்ற ஆசார்யர்களிடம் ஒரு ஸம்பந்தத்தை உண்டு பண்ணி, திருமந்திரம் முதலிய மந்திரத்தையும் அந்த மந்திரத்தில் சொல்லப்படும் ப்ரபத்தி என்னும் உபாயத்தையும் அவ்வாசார்யன் மூலமாக நமக்கு உபதேஸித்தருளி அவ்வுபாயத்தை அனுஷ்டிக்கும்படி ஓர் தெளிவை ஏற்படுத்தி, நம்மை பரம பதத்தில் கொண்டு சேர்க்கிறான். பின்பு அங்கே நாம் செய்யும் கைங்கர்யங்களை ஏற்றுக் கொள்கிறான். இப்படி பலவிதமான மஹா உபகாரங்கள் செய்ய முற்படும் நிகரற்ற எம்பெருமான் நமக்குத் தந்தை என்னும் ஸ்தானத்தில் நிற்கின்றான். அப்பெருமானின் திருவடிகளில் நம்மாழ்வாருடைய அனுகிரஹத்தாலே தலை வணங்கப் பெற்றோம்.” என்று ஸாதிக்கிறார்.

ஸம்ஸார பந்தத்தில் கட்டுண்டு ஜீவன்கள் படும் அவஸ்த்தையானது ஆழ்வார் திருவுள்ளத்திற்க்கு எவ்வளவு அஸஹ்யமாய் இருக்கிறதென்பதை தம் முதல் ப்ரபந்தமான திருவிருத்தத்தின் முதல் பாசுரத்தின் மூலம் தமது ஞானக் கண்ணுக்கு இலக்கான எம்பெருமானிடம் “தேவரீரை அநுபவிக்கைக்கு விரோதியான தேஹஸம்பந்தத்தைப் போக்கியருள வேணும்” என்று எல்லா ஜீவன்களின் மீதும் தாம் கொண்ட மிகுந்த அனுதாபத்தினால் அவர்கள் சார்பாக இமையோர் தலைவனான காஞ்சி தேவப்பெருமாளிடம் விண்ணப்பஞ்செய்கிறார். 

பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்குடம்பும்

இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை – உயிர் அளிப்பான்

எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய் இமையோர் தலைவா

மெய்நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே 

திருவிருத்தம் 1

“எல்லாப் பிராணிகளையும் ரக்ஷித்தருள்வதற்காக பலவகைப்பட்ட பிறப்புகளையுடையனாய் திருவவதரித்தவனே! தேவாதி தேவனே! பலபல ஊழிகளாய் ஸம்ஸார பந்தத்தில் கட்டுண்டமையால் உண்டாகும் மோக்ஷத்திற்கு விரோதமான ஞானமும் (அத்யந்த அல்பஸாரங்கள்), அதடியாக அஹங்கார மமகாரங்கள் கொண்டு செய்யப்படும் தீய நடத்தையும், ரஜஸ் மற்றும் தாமஸ குணங்கள் நிறைந்த, ஸத்வ குணம் சிறிதேனும் இல்லாத அசுத்தங்களோடு கூடின சரீரமும் (ஆகிய இவற்றோடு கூடி) இதுபோன்ற ப்ரகாரத்தை இனிமேல் நாங்கள் அடையாதபடி அடியனாகிய நான் சொல்லும் உண்மையான விஜ்ஞாபகத்தை நின்று தேவரீர் கேட்டருள வேணும்.” என்று விண்ணப்பிக்கிறார்.

“இனியாம் உறாமை” என்று பன்மையிலும் “அடியேன் செய்யும் விண்ணப்பமே” என்று ஒருமையிலும் ப்ரயோகித்து, தாம் மட்டுமல்லாமல் தம்முடன் சேர்ந்து இவ்விருளில் துவள்கின்ற ஸம்ஸாரிகள் அனைவரும் உஜ்ஜீவிக்க வேண்டுமென்று அவர்களின் ப்ரதிநிதியாய் நின்று எம்பெருமானிடத்தில் அவன் நியமித்தருளினபடி விண்ணப்பிக்கிறார் கருணைக்கடலான காரிமாறன். 

அதடியொட்டி குறையா மறையின் தெளியாத நிலங்களை அனைவரும் அறிந்து தெளியும்படி நான்கு வேதங்களின் ஸாரமாக நான்கு திவ்ய ப்ரபந்தங்களை நமக்குத் தந்தருளினார். 

ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரத்தில் ஸ்வாமி தேசிகன் ஸாதிக்கிறார்:

த்ரமிடோபநிஷந்நிவேஶஶூந்யாந்‌

அபி லக்ஷ்மீரமணாய ரோசயிஷ்யந்‌ |

த்ருவமாவிஶதி ஸ்ம பாதுகாத்மா

ஶடகோப ஸ்வயமேவ மாநநீய: ॥   

ஸ்ரீபாதுகாஸஹஸ்ரம் ஸமாக்யாபத்ததி – 2

“எல்லாராலும் போற்றப்படுகின்ற ஸ்வாமி நம்மாழ்வார் அனைவரும் பெருமாளை அடைந்து உஜ்ஜீவிக்கவேண்டுமென்று திருவுள்ளங்கொண்டு திருவாய்மொழியைத் தந்தருளினார். இருப்பினும் பலர் அத்திருவாய்மொழியைக் கற்று உபாஸிப்பதில்லை. அப்படி கற்காதவர்களும் பெருமாளை அடைவதற்காக ஆழ்வார் தாமே பாதுகையாக அவதரித்து அனைவரின் ஸிரஸ்ஸிலும் ஸ்ரீசடாரியாக ஸாதிக்கப்பெற்று, அந்த  ஸம்பந்தம் மூலமாக திவ்ய தம்பதிகளின் அநுகிரஹத்திற்குப் பாங்காக அனைவரையும்  மாற்றியருளினார்.” என்று ஆழ்வாரின் அருளிச்செயல்களை அறியாதவர்களும் உய்ய வேண்டுமென்று அவர் ஸ்ரீசடாரியாகத் திருவவதரித்த வைபவத்தை நிர்தாரணம் பண்ணுகிறார் ஸ்வாமி தேசிகன்.

ஆழ்வாரின் அத்யந்த சிஷ்யரான ஸ்வாமி மதுரகவியாழ்வார் எழுந்தருளியிருந்த காலத்தில் எம்பெருமான் கண்ணனே இவ்வுலகில் எழுந்தருளியிருந்தான். இருப்பினும் அவனை நேரே சென்றடைந்து ஆச்ரயிக்காமல் ஓர் ஆசார்யன் மூலமாகத் தான் அடையவேண்டும் என்ற துணிவுகொண்டு தக்க ஆசார்யனுக்காகக் காத்துக்கொண்டிருந்தார். ஸ்வாமி நம்மாழ்வார் திருவவதரித்த பின் அவர் திருவடிகளில் ஈடுபட்டு அவர் திவ்ய ஸூக்திகளும் திருவடியுமே தமக்கு உபாயமாகக் கொண்டு அவருக்கு இடைவிடாது நித்யகைங்கர்யங்கள் செய்து ஆசார்ய ஸம்பந்தம் மூலமாகவே பக்தியும் ப்ரபத்தியும் ஸித்திக்கும் என்று நமக்குக் காட்டியருளினார். 

பயனன்றாகிலும் பாங்கலராகிலும்

செயல்நன்றாகத் திருத்திப் பணிகொள்வான்

குயில்நின்றார்ப்பொழில்சூழ் குருகூர்நம்பி

முயல்கின்றேனுன்றன் மொய்கழற்கன்பையே

கண்ணிநுண் சிறுத்தாம்பு – 10

“பிறர் திருந்துவதால் தமக்கொரு பயனில்லாமல் போனாலும் அவர்கள் திருந்துவதற்குப் பாங்காக இல்லாமல் போனாலும் தமது அநுஷ்டானத்தாலே நன்றாக திருத்தி அவர்களை அடிமை கொண்டு ஆட்கொள்வதற்காக குயில்கள் ஆரவாரம்செய்யும் சோலைகள் சூழப்பட்ட திருநகரியிலே எழுந்தருளியிருக்கிற ஆழ்வாரே! தேவரீருடைய சிறந்த திருவடிகளில் அன்பு உண்டாவதைக் குறித்தே அடியேன் முயற்சி செய்கின்றேன்.” என்று ஆழ்வாரின் பாதரவிந்தங்களையே உபாயமாகப் பற்றுகிறார். 

மதுரகவிகளின் இந்த ஆசார்ய பக்தியை ஸ்வாமி தேசிகன் அதிகார ஸங்க்ரஹம் 2ம் பாசுரத்தில் அறிவித்து ஸ்வாமி மதுரகவிகள் காட்டிய வழியே நமக்குச் சிறந்த வழி என்று ஸ்தாபிக்கிறார்.

இன்பத்தில்‌ இறைஞ்சுதலில்‌ இசையும்‌ பேற்றில்‌ 

இகழாத பல்லுறவில்‌ இராகமாற்றில்

தன்பற்றில்‌ வினை விலக்கில்‌ தகவோக்கத்தில்‌

தத்துவத்தை உணர்த்துதலில்‌ தன்மையாக்கில்‌

அன்பர்க்கே அவதரிக்கும்‌ ஆயன்‌ நிற்க

அருமறைகள்‌ தமிழ்‌ செய்தான்‌ தாளே கொண்டு 

துன்பற்ற மதுரகவி தோன்றக்‌ காட்டும்‌தொல்வழியே நல்வழிகள்‌ துணிவார்கட்கே.

அதிகார ஸங்க்ரஹம் 2

அன்பன் தன்னை அடைந்தவர்கட்கெல்லாம் அன்பனான குருகூர்ச் சடகோபன் ஸர்வலோக சரண்யனின் சரணாகதரக்ஷண வ்ரதத்தை முன்னிட்டுக்கொண்டு “சரணமாகும் தனதாள் அடைந்தார்க்கெல்லாம் மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்”(திருவாய்மொழி 9-10-5) என்றும் “வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே” (திருவாய்மொழி – 10-9-9)  என்றும் அறிவித்தார். அவ்வாழ்வாருக்கு அன்பரான மதுரகவிகள் காட்டிய வழியில் சென்று நம்மாழ்வார் ஸ்ரீஸூக்திகளை உபாஸித்து, இமையோர்தலைவனைச் சரணடைந்து, வைகுந்தம் சென்று சேர்வோமாக!

****ஆழ்வார் திருவடிகளே சரணம்****

எம்பெருமானுக்கு எப்படி, எதனைக் கொண்டு ஆராதிக்க வேண்டும்?

எம்பெருமானுக்குக் கைங்கர்யம் பண்ணவேண்டுமென்கிற அவா அநேகமான சேதனர்களிடத்தில் இருப்பினும் அவனை ஆராதிக்கப் புகுமிடத்தில் எந்தவொரு குறையுமில்லாமல் அவனை ஆராதிக்க வேண்டுமே என்கிற அவர்களின் எண்ணமானது கைங்கர்யத்திற்குத் தடையாய் இருக்கிறது.

அவன் அவாப்தஸமஸ்தகாமன், நாமோ நீசர்கள்; நீசமான உபகரணங்களைக் கொண்டு அவனை எவ்வாறு ஆச்ரயித்துத் தலைகட்டுவது?அப்படியே செய்தாலும் பரமபதநாதனுக்கு அது பாங்காயிருக்குமோ என்று ஐயங்கொண்டு அவனை விட்டுப் பலர் விலகப் பார்ப்பதுண்டு.

ஸ்வாமி நம்மாழ்வார் ஸாதிக்கிறார்:

பரிவதில் ஈசனைப் பாடி விரிவது மேவல்  உறுவீர்

பிரிவகையின்றி நன்னீர்தூய் புரிவதுவும் புகை பூவே 

திருவாய்மொழி 1-6-1

எம்பெருமான் சீலன். அவன் நம்மிடத்தில் கொண்ட அபாரமான தயையினால், ஆராதனைக்கெளியனாகி நாம் இட்டதுகொண்டு த்ருப்தியடைகிறான். அவனது திருவாராதனத்திற்குத் தீர்த்தம் ஒன்றே  போதுமானது. அந்த தீர்த்தமும் ஏலம் முதலான வாஸனாத்ருவ்யங்களோ, துளஸீ முதலான சுத்த வஸ்துக்களோ சேர்ந்ததாயிருக்க வேண்டுமென்பதுமில்லை; புஷ்பம் எதுவாகயிருப்பினும் குற்றமில்லை; ஸமர்ப்பிக்கும் முறை தவறாது ஸமர்ப்பிக்க வேண்டுமென்பதுமில்லை. இதற்கு மேலும் எதையாவது ஸமர்ப்பிக்க முடியுமென்னில் சாதாரண தூபம் ஸமர்ப்பியுங்கோள். எம்பெருமானுக்கு ஸமர்ப்பிக்கிறோம் என்கிற சுத்த பாவமும், அவனிடத்தில் பெருங்காதலும், பக்தியுமே ப்ரதானம். அவாப்தஸமஸ்தகாமன் திறத்திலே நாம் சில பொருள்களை ஸமர்பிப்பது நமது ஸ்வரூபம் நிறம்பெறுதற்கேயன்றி அவனை நிரப்புவதற்கன்று என்று அவனின் ஸ்வாராதத்வத்தை தலைக்கட்டுகிறார் ஸ்வாமி நம்மாழ்வார்.

தேனே மலரும் திருப்பாதம்!

அந்நாளில் த்ரிவிக்ரமனாய் உயர்ந்து மூவுலகையும் அளந்து தன் சர்வசக்தித்வத்தை நிர்தாராணம் பண்ணினான் பெருமான். அவ்வல்லமையைக் கண்டு மோஹித்த  ஆண்டாள் ஓங்கி உலகளந்த உத்தமன், அம்பர மூடறுந்தோங்கி உலகளந்த உம்பர் கோமான், அன்று இவ்வுலகம் அளந்தாய் என்று அவன் திருவடியின் மேன்மையை திருப்பாவையில் மீண்டும் மீண்டும் அநுபவிக்கிறாள். ஸ்வாமி நம்மாழ்வாரோஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்” என்று அடியவர்களை ஆட்கொண்டு ரக்ஷிக்க எம்பெருமான் உபாயமாக தன் திருவடியையே தந்தருளுகிறான் என்று அத்திருவடி தொழுதெழுகிறார். வானவர்களின் தலையை அலங்கரிக்கும் அத்திருப்பாதங்களை ஸ்பர்ஸித்துத் தாங்கும் பாதுகைகளின் பெருமையை லக்ஷக்கணக்கான ஸ்லோகங்களால் விவரித்தாலும் அதன் மஹிமையை முழுவதுமாகப் பாடித்  தலைக்கட்ட முடியாது என்று ஸ்வாமி தேசிகன் ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரத்தில் அருளுகிறார்.

சீதக்கடலுள் அமுதன்ன தேவகி

கோதைக் குழலாள் அசோதைக்குப் போத்தந்த

பேதைக் குழவி பிடித்துச் சுவைத்துண்ணும்

பாதக் கமலங்கள் காணீரே பவளவாயீர்! வந்து காணீரே

பெரியாழ்வார் திருமொழி 1-2-1

அப்படியிருக்க அவ்வைகுந்தக் குட்டனோ கோவலர் குட்டனாக நிகழ்த்திக் காட்டிய திவ்ய சேஷ்டிதங்கள் தான் எப்படிப்பட்டவை!

உன் திருப்பாதங்களை நீ சுவைத்துக் கொண்டிருப்பது ஆழ்வார்கள் “தேனே மலரும் திருப்பாதம்” என்று அவற்றை ஏற்றுவதாலா அல்லது அறிவொன்றுமில்லாத ஆயர்குலத்தில் தோன்றியதால் அக்குலத்திற்குத் தகுந்த செயல்களைச் செய்யவேண்டுமென்பதாலா அல்லது ப்ரளய காலத்திலே நீ உன் திருவயிற்றில் ஒளித்து வைத்த எல்லா வஸ்துக்களையும் உஜ்ஜீவிக்கவேண்டுமென்பதாலா இல்லை அவை நீ விழுங்கிய மண் கட்டிகளைக் கரைப்பதற்கான மருந்தா மாயோனே(நெய்யூண் மருந்தோ மாயோனே)?

விண்ணவரும் மண்ணவரும் விரும்பும் வெற்பு

 பரமபதத்திலே கைங்கர்யஸாம்ராஜ்யத்துக்கு அதிபதியாய் இருப்பினும் தன் பரத்வ ஸ்வரூபத்தை மறைத்துக் கொண்டு தன்னைச் சரணடையும் சேதனர்களின் மேல் கொண்ட பக்ஷபாதத்தினால் தயையே திருவுள்ளமாய், அவர்கள் பற்றுவதற்கு ஹேதுவாய் “ஸ்ரீவைகுண்ட விரக்தாய ஸ்வாமி புஷ்கரணீ தடே” என்றபடி ஸ்ரீவைகுந்தத்தில் இருந்து இ(ற)ரங்கி வந்து, ஸ்ரீநிவாஸனாக திருமலையில் நித்யவாஸம் செய்கிறான். அப்பெருமானின் பிரிவைப் பொறுக்க மாட்டாது நித்யரும் கூட தேஸோசிதமான தேஹங்களைப் பரிக்ரஹித்துக்கொண்டு திருமலையிலே வந்து அவனுக்கு நித்யகைங்கர்யங்கள் பண்ணுகின்றனர்.

கண்ணாவான் என்றும், மண்ணோர்விண்ணோர்க்கு,

தண்ணார் வேங்கட, விண்ணோர் வெற்பனே

திருவாய்மொழி 1-8-3

திருமலையானது மண்ணவர்க்கும் விண்ணவர்க்கும் பொதுவான தலமாகவும் அம்மலையிலே வீற்றிருக்கும் திருவேங்கடவன் இருதலையார்க்கும் பொதுவாய் நிற்கிறான் என்று ஸ்வாமி நம்மாழ்வார் அவனின் பரத்வத்தையும்  ஸௌலப்யத்தையும் மங்களாசாஸனம் பண்ணுகிறார். திருவேங்கடவன் எண்ணற்ற திருக்கல்யாண குணங்களை உடையவனாயிருப்பினும் அவனுடைய மற்ற குணங்களனைத்தும் தரம் பெறுவது அவன் தயையாலேயே என்பதனை “தயா சதகம்” என்னும் ஸ்தோத்ரத்தின் மூலம் ஸ்வாமி தேஶிகன் நிர்தாரணம் பண்ணுகிறார். மந்திபாய் வடவேங்கடமாமலை வானவர்கள் சந்தி செய்ய நின்றான்” என்று திருப்பாணாழ்வாரும் விண்ணவரும் மண்ணவரும் விரும்பும் வெற்பு என்று ஸ்வாமி தேஶிகனும் பாசுரமிட்டது இங்கு அனுசந்திக்கத்தக்கது.

கண்ணிநுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப்பண்ணிய பெருமாயன்

எம்பெருமானின் பரத்வத்தையயும் ஸ்வாமித்வத்தையும் திருவாய்மொழியில் அநுபவித்துக் கொண்டு வந்த ஸ்வாமி நம்மாழ்வார் ஆயர்குலத்துக்குச் சுலபனாயும் அவனை அறியாத கம்ஸ, துரியோதனாதிகளுக்கு அரியனாயும் திருவவதரித்த கண்ணபிரானின் மேன்மையையும் எளிமையையும் எண்ணி உள்ளம் உருகி கரைந்து எத்திறம்! எத்திறம் என்று பல மாதங்கள் மோஹித்துக்கிடந்தார். 

பத்துடை அடியவர்க்கு எளியவன், பிறர்களுக்கரிய 

வித்தகன் மலர்மகள் விரும்பும் நம் அரும்பெறலடிகள்

மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடையாப்புண்டு

எத்திறம்! உரலினொடு இணைந்திருந்தேங்கிய எளிவே

திருவாய்மொழி 1-3-1

வெண்ணெய் களவு செய்கிற தன்னை யசோதைப்பிராட்டி அடிக்கடி தாம்பினால் கட்டி விடுகிறாளென்று வீட்டிலுள்ள அனைத்து கயிறுகளையும் துண்டு துண்டாக அறுத்து வைத்தாலும் அவற்றை அவள் ஒன்றோடொன்று முடிபோட்டு ஒரு கயிறாக்கி அதுகொண்டு கண்ணபிரானைக் கட்ட முற்படுவள்; அப்படி கட்டும்போது தன் திருமேனிக்கு சுற்று போராமல் அக்கயிற்றினால் கட்ட முடியாதபடி எளிதில் தன்னைத் தப்பித்துக்கொள்ள வல்லவனாயினும் தனது ஸௌலப்யத்தை வெளியிடுவதற்கென்றே பரத்வநிலையைத் தவிர்த்து மநுஷ்ய ஸஜாதீயனாக ஒரு சுற்றுக்கும் போராத தாம்பு இரண்டு மூன்று சுற்றுக்குப் போரும்படி தன் பருத்த திருமேனியைச் சுருக்கி அமைத்துக் கொண்டு ‘கண்ணி நுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப்பண்ணிய பெருமாயன்” என்றபடி உரலோடு கட்டுண்டு இருப்பனாம். மேலும் ஆய்ச்சி அடிக்க தன்னுடைய ஸௌசீல்ய ஸௌலப்ய குணங்கள் நன்கு விளங்கப்பெற்று அவதார ப்ரயோஜநம் நிறைவேறப்பெற்றதை எண்ணி முகமலர்ந்திடுவனாம் கண்ணபிரான். 

பாயாதீஷத்பிரசலிதபதோ நாபகச்சன்ன திஷ்டன் |                   மித்யகோபஸ்ஸபதி நயனே மீலயன் விஷ்வகோப்தா ||

கோபால விம்ஸதி – 5

இடையன் வேடம் தரித்து வெண்ணெயைத் திருடி தன் தாயிடம் அஞ்சி நடுங்கும் கபட நாடகத்தை நடத்தும் இவனே தரணியனைத்தையும் ரக்ஷிப்பவன் என்று கொண்டாடுகிறார் ஸ்வாமி தேசிகன். “அகில புவந ரக்ஷா கோப வேஷஸ்ய விஷ்ணோ:”  என்றபடி.

இந்நின்ற நீர்மை இனியாம் உறாமல் உயிர் அளிப்பான் பெருமான்

“பயனன்றாகிலும் பாங்கலராகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்” என்ற ஸ்வாமி மதுரகவியாழ்வார் திருவாக்குப்படி தம் அருளிச்செயல்கள் மூலம் தீர்ந்த அடியவர்களைத் திருத்தி எம்பெருமானிடத்தில் பணிகொள்ள வைப்பதையே ஸ்வாமி நம்மாழ்வார் தன் திருவவதார வைபவத்தின் தலையாய கர்தவ்யமாகக் கொண்டார்.  ஸம்ஸார பந்தத்தில் கட்டுண்டு ஜீவன்கள் படும் அவஸ்த்தையானது ஆழ்வார் திருவுள்ளத்திற்க்கு எவ்வளவு அஸஹ்யமாய் இருக்கிறதென்பதை தன் முதல் ப்ரபந்தமான திருவிருத்தத்தின் முதல் பாசுரத்தின் மூலம் தமது ஞானக்கண்ணுக்கு இலக்கான எம்பெருமானிடம் “தேவரீரை அநுபவிக்கைக்கு விரோதியான தேஹசம்பந்தத்தைப் போக்கியருள வேணும்” என்று எல்லா ஜீவன்களின் மீது தாம் கொண்ட மிகுந்த அனுதாபத்தினால் அவர்கள் சார்பாக விண்ணப்பஞ்செய்கிறார்.

பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்குடம்பும்

இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை – உயிர் அளிப்பான்

எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய் இமையோர் தலைவா

மெய்நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே

திருவிருத்தம் – 1

 மோக்ஷத்திற்கு முக்கிய தடையாய் இருப்பது தேஹத்திற்கு ப்ரக்ருதியுடன் 

கூடிய ஸம்பந்தமும் அதடியாக உண்டாகும் விபரீத ஞானமும் என்று முன்

அடிகளில் சாதித்தார். சரணைடையும்  அஜ்ஜீவன்களுக்கு உயிரளித்து

அவர்களை கர்ம சம்பந்தத்திலிருந்து மீட்டெடுத்து உயர்ந்த மோக்ஷ பதவியைக்

கொடுக்கிறான் எம்பெருமான் என்று பின்னடிகளில் சாதித்தார். தேஹ

ஸம்பந்தம் மோக்ஷத்திற்கு தடையென்னில் பின் உயிரளித்து மீண்டும் தேஹ

ம்பந்தத்தை உண்டாக்குவது எப்படி உய்விப்பதாகும் என்ற ஐயம் உண்டாகும்?

இதற்கு ஸ்வாமி தேஶிகன் மிக ஆச்சர்யமாக பொருள்சாதிக்கிறார்.

தாஸபூதா: ஸ்வத: ஸர்வே. ஹ்யாத்மான: பரமாத்மன:”(ஸ்ரீ மந்த்ர ராஜபத ஸ்தோத்ரம்)

என்றபடி உலகில்  உள்ள அனைத்து ஜீவன்களும்

எம்பெருமானுடைய தாசர்கள். மற்றும் “ஈசன் அடங்கெழில் அஃதென்று

அடங்குக உள்ளே” (திருவாய்மொழி 1-2- 7) என்று அவனிடத்தில் அடங்கியிருப்பதே

சேதனர்களின் ஆத்ம ஸ்வரூபத்திற்கு லக்ஷணம். பல யுகங்களாக ஜீவன்

ஸம்ஸார பந்தத்தில் மூழ்கி தன்னுடைய உண்மை ஸ்வரூபத்தை மறந்து பின் தான்

முற்பிறவியில் செய்த ஏதோ ஒரு நற்கர்மத்தினால் ஒரு ஆச்சார்யனுடைய ஸம்பந்தம் ஏற்பட்டு தான் அவனடிக்கீழ் தாஸன் என்றும் பகவத்-பாகவத கைங்கர்யம் பண்ணுவதற்குப் பாங்காயிருப்பதுவே ஸ்ரீவைஷ்ணவ லக்ஷணம் என்றுணர்ந்து அவ்வாச்சார்யனின் கருணையினாலும் எம்பெருமானின் அஜ்ஞாத ஸுக்ருதத்தாலும் அவனிடத்தில் சரணாகதி பண்ணி மோக்ஷமடைகிறான். இவ்வாறு அசத்கல்பமாய்க்  கிடந்த ஜீவனின் குறைகளுக்கு  அவிஜ்ஞாதாவாய் இருந்து அவன் செய்யும் குற்றங்களைப் பொருட்படுத்தாது ஆச்ரித  உபகாரகனான எம்பெருமான் அந்த ஜீவனை கரைசேர்த்து உயர்ந்த மோக்ஷ பதவியைக் கொடுக்கிறான். இதுவே ஒரு ஜீவனுக்கு உயிரளிப்பதாகும் என்றும் அதுவரை அந்த ஜீவனானது ஒரு ஜடப்பொருள் போன்றதே என்றும் ஸ்வாமி தலைகட்டுகிறார்.