ஜீவர்களாகிய நாம் அநாதியான கர்மப்ரவாஹத்தாலும், ப்ரக்ருதி ஸம்பந்தத்தாலும் ஸம்ஸாரம் என்னும் கொடியதானதொரு பாலை நிலத்தில் கிடந்து உழல்கின்றோம். ப்ரக்ருதி ஸம்பந்தம் விரோதம் மட்டுமல்லாமல் அற்பமானது, “மின்னின் நிலையில, மன்னுயிர் ஆக்கைகள்” என்று அலற்றுகிறார் ஆழ்வார். ஸ்வாமி தேசிகனோ இந்த ஸம்பந்தத்தினால் துன்புற்றுழலும் சேதனர்களை “ஆவாரார் துணையென்று அலைநீர்க்கடலுள் அழுந்தும் நாவாய்போற் பிறவிக் கடலுள் நின்று துளங்குகின்றவர்” என்கிறார். அந்த ஸம்பந்தத்தை ஒழித்து, எம்பெருமானிடம் பிறப்பின்மை வேண்டி மோக்ஷம் அடையப் ப்ரார்த்திப்பதே சேதனர்களின் ஸ்வரூபத்திற்குப் பாங்கு. “பாலேபோல் சீரில் புழுத்தொழிந்தேன்,மேலால் பிறப்பின்மை பெற்றடிக்கீழ்க் குற்றேவலன்று மறப்பின்மை யான்வேண்டும் மாடு“ என்றும் “இந்நின்ற நீர்மை இனியாம் உறாமை” என்றும் பெருமாளிடத்தில் விண்ணப்பிக்கிறார் ஆழ்வார். “அடியோங்கள் அடிக்குடில் வீடுபெற்று உய்ந்தது காண்” என்று பட்டர் பிரானும் மற்ற ஆழ்வார்களும், ஆசார்யர்களும் தங்கள் ஸ்ரீஸூக்திகள் மூலம் இக்கருத்தை பலமுறை வெளியிட்டருளியுள்ளனர். திருமால் “தானே மறுபிறவி அறுத்தழியா வானில் வைக்கும்” கருணைக்கடல் என்று ஸாதிக்கிறார் ஸ்வாமி தேசிகன்.
அப்படியிருக்க மலையப்பன் மீது மட்டற்ற பக்தி கொண்ட மஹாவிவேகியான ஸ்வாமி குலசேகராழ்வாரோ திருவேங்கடமலையில் ஒரு அசேதன பொருளாகவோ, ஜங்கமப் பொருளாகவோ அல்லது தாவரமாகவோ இல்லை ஏதேனுமாகவோ ஓர் வாழ்ச்சி கிடைக்கப் பெற்றால் அதுவே போதுமானது, அதிலும் தேவர், மநுஷ்ய ஜாதியன்றி விவேகமில்லாதொரு திர்யக் ஜாதியாகப் பிறப்பதும் தமக்குப் பரமோத்தேச்யமாகும் என்கிறார். அத்திருமலை வாழ்ச்சிக்கு விரோதியாய் இருப்பது இம்மானிட உடற்பிறவி என்றிருந்தால் அப்படிப்பட்ட பிறவி எனக்கு ஒரு நாளும் வேண்டா, என்று பெருமாள் திருமொழி – ஊனேறு செல்வத்து பதிகத்தில் அருளுகிறார்.
இப்பதிகத்தில் மீனாகவும் குருகாகவும் பொற்குடமாகவும் செண்பகமாகவும் ஒவ்வொரு பிறவியைப் பெற விரும்பி ஒவ்வொரு பாசுரமிட்டார் ஆழ்வார். ஆனால் ஒவ்வொரு பிறப்பிலும் அவருக்கு ஒவ்வொரு அநுபபத்தி தோன்றிக் கொண்டேயிருந்தது. மேலும் அடியவனுக்கு அழகு தன் தலைவன் தன்னை எந்த நிலையில் வைத்தாலும் அதில் மகிழ்ந்திருந்து தலைவனுக்குத் தொண்டு செய்வதேயாம். அதனால் நீ என்னை எந்த நிலையில் வைத்தாலும் அதற்கிணங்க “எம்பெருமான் பொன்மலைமேல் ஏதேனு மாவேனே” என்று பதிக்கத்தைத் தலைக்கட்டுகிறார்.
வேண்டியதைத் தந்திட கலியுக கண்கண்ட தெய்வமான வேங்கடேசன் நின்றிருக்க பரம பாகவதரான ஸ்வாமி குலசேகராழ்வார் அவனிடத்தில் மோக்ஷத்தை வேண்டாமல் அவன் நித்யவாஸம் பண்ணும் திருமலையில் ஏதேனும் ஒரு பொருளாகவாவது பிறப்பு வேண்டுவது எதனால்?
நம் தூப்புல் வள்ளல் ஸாதிக்கிறார்:
ப்ராஜாபத்ய ப்ரப்ருதி விபவம் ப்ரேக்ஷ்ய பர்யாய து꞉க்கம்
ஜந்மாகாங்க்ஷந் வ்ருஷகிரிவநே ஜக்முஷாம் தஸ்துஷாம் வா |
ஆசாஸாநா꞉ கதிசந விபோஸ் த்வத் பரிஷ்வங்க தந்யை꞉
அங்கீகாரம் க்ஷணமபி தயே ஹார்த துங்கைரபாங்கை꞉ ||
ஸ்ரீ தயாசதகம் 42
தயாதேவியே! குலசேகராழ்வார் போன்ற பரம பக்தர்கள் சிலர் பிரமன், இந்திரன் முதலியவர்களின் ஐஸ்வர்யம் முதலிய அனைத்திலிருந்தும் பெறக்கூடியதான இன்பானது அல்பமானதே; மேலும் அவையனைத்தும் அளவு கடந்த துன்பமாகவே முடிகின்றன என்றனர். ஆதலால் அம்மஹான்களுக்கு அதுபோன்ற செல்வங்களில் சிறிதும் நாட்டமில்லை. அவர்கள் திருவேங்கடமலையில் உள்ள ஒரு வனத்தில் குருகு, மீன் முதலிய ஜங்கமப் பொருளாகவாவது, ஆறு-மரம் முதலிய தாவரப் பொருளாகவாவது பிறவியை ஆசைப்பட்டனர். இப்பிறவி பிரமன் மற்றும் இந்திரனின் செல்வத்தினும் மேம்பட்டதாக அவர்கள் கருதக் காரணம் திருமலையில் ஏதாவது ஒரு வஸ்துவாகப் பிறந்தால் ஸ்ரீநிவாஸனது கடாக்ஷமானது க்ஷணப்பொழுதேனும் தங்கள்மேல் விழப்பெறலாமல்லவோ? அந்தக் கடாக்ஷங்களில் தயாதேவியும் கூடுவதால் அது இன்னும் மேம்பட்டதாக ஆகுமல்லவோ! இதனைக் கருதியே அவர்கள் திருமலையில் ஏதேனும் ஒரு பிறவியைப் பெற விரும்பினார்கள் என்று அத்யாஸ்சர்யமாய் ஸமாதானம் ஸாதிக்கிறார் நம் ஸ்வாமி.
மேலும் எம்பெருமானின் ஸ்ரீநிவாஸ அவதாரமானது தரம் பெறுவது அவன் தயையாலேயே என்பதனை “தயா சதகம்” என்னும் ஸ்தோத்ரரத்னத்தின் மூலம் ஸ்வாமி தேஶிகன் நிர்தாரணம் பண்ணுகிறார். அப்பேற்பட்ட தயையின் உருவமே இந்த திருமலை என்று தலைக்கட்டி, நூறு ஸ்லோகங்கள் கொண்ட க்ரந்தத்தின் முதல் ஸ்லோகத்திலேயே அம்மலையை மங்களாஸாஸநம் செய்து அதனிடத்திலேயே பிரபத்தி பண்ணுகிறார் கவிதார்க்கிகஸிம்ஹம்.
ப்ரபத்யே தம் கிரிம் ப்ராய: ஸ்ரீநிவாஸாநுகம்பயா |
இக்ஷுஸாரஸ்ரவந்த்யேவ யந்மூர்த்யா ஷர்கராயிதம் ||
(ஸ்ரீ தயாசதகம் – 1)
என்று சொல்லி நாமும் திருமலை சென்று சேர்ந்து திருமலையாழ்வாரிடத்திலும் திருவேங்கடமுடையானிடத்திலும் சரணாகதி செய்து, ஸ்வாமி குலசேகரப் பெருமாள் அடியொற்றி எம்பெருமானின் பொன்மலைமேல் ஏதேனும் ஒரு வஸ்துவாக இருந்து அவனுகந்த கைங்கர்யங்களை அபேக்ஷிப்போமாக!
Leave a Reply