பொதுவாக எம்பெருமானின் இனிமைக்கு கரும்பையும் அதன் ரஸத்தையும் ஒரு த்ருஷ்டாந்தமாக இட்டுக் கூறுவது வழக்கம். “தொண்டர் தங்கள் சிந்தையுள்ளே முளைத்தெழுந்த தீங்கரும்பு” என்று கலியன் கரும்பை எம்பெருமானுக்கு உவமையாக்கியதும், ஸ்வாமி தேசிகன் தேஹளீசஸ்துதியில் திருக்கோவலூர் எம்பெருமானான நெடுமாலை பெண்ணை ஆற்றங்கரையில் விளைந்த கரும்பு என்றும் அவன் திவ்யமங்கள அநுபவம் கருப்பஞ்சாறு போன்றது என்று கொண்டாடியதும் இங்கே அநுஸந்திக்கத்தக்கது.
காஸாரபூர்வகவிமுக்யவிமர்த்தஜந்மா
பண்ணாதடேக்ஷூஸுபகஸ்ய ரஸோ பஹூஸ்தே |
த்வத்பாதபத்மமதுநி த்வதநந்யபோக்யே
நூநம் ஸமாச்ரயதி நூதநசர்க்கராத்வம் ||
தேஹளீசஸ்துதி-7
அப்படியிருக்க “பெரிய திருமொழி – மாற்றமுளவாகிலும்” பதிகத்தில் இவ்வாழ்வாரே எம்பெருமானை வேம்போடு உருவகமாக்கிக் கூறுவதேன்?
வேம்பின்புழு வேம்பன்றி உண்ணாது அடியேன்
நான் பின்னும் உன் சேவடியன்றி நயவேன்
தேம்பலிளந்திங்கள் சிறைவிடுத்து ஐவாய்ப்
பாம்பினணைப்பள்ளிக் கொண்டாய் பரஞ்சோதீ ||
பெரிய திருமொழி 11-8-7
“க்ஷயரோகத்தால் மெலிவுற்ற யுவாவான சந்திரனுக்கு க்ஷயரோகத்தைப் போக்கியருளின, ஐந்து முகங்களையுடைய, ஸர்பத்தின் உடலான படுக்கையில் ஸயனித்திருக்கும் ஸ்ரீரங்கநாதனே! ஸர்வேஸ்வரனாய் மிக்க ப்ரகாஸமானவனே! வேப்பமரத்திலே பிறந்திருக்கும் புழு கசப்பான வேம்பை விட்டு வேறொன்றை உண்ணுவதில்லை. அதுபோல அடியேன் உனக்கே தாஸனாய், உனது அழகிய திருவடிகளை விட்டு வேறொன்றை விரும்பவேமாட்டேன்.” என்கிறார்.
மேலே கருப்பஞ்சாற்றோடு உவமை கூறிவிட்டு அகிலஹேயப்ப்ரத்யநீகனை இப்பாசுரத்தில் கருப்பஞ்சாற்றிற்கு நேர் எதிர் தட்டில் உள்ள வேம்போடு உவமையாக்கிக் கூறுவது அவன் திருக்கல்யாண குணங்களுக்குப் பாங்காகுமோ?
ஆழ்வார், இப்பாசுரத்தில் தலைவனான எம்பெருமான் என்ன செய்தினும் அவன் அடியவனான சேதனனுக்கு அவனையன்றி வேறு புகலிடமில்லை என்று நாம் அவனிடங்கொண்ட அநந்யார்ஹ தாஸ்யத்வத்தையும் அநந்யகதித்வத்தையும் ஸ்தாபிக்கவே வேம்பை உவமையாக்குகிறார்.
மனைவிகள் அனைவரையும் ஒரே விதமாகப் பாராட்டாமலிருந்த சந்திரனுக்கு சாபத்தால் க்ஷய ரோகம் ஏற்பட அவன் திருவரங்கம் சென்று அரங்கனை சரணடைந்து அங்குள்ள சந்திரபுஷ்கர்னியில் ஸ்நானம் செய்ய, திருவரங்கன் அந்த ரோகம் போகவருளினான். ஆழ்வார் ஸாதிக்கிறார்: “நீ வேம்பாக உன்னை ஆக்கிக்கொண்டு அடியேனை பரீட்சிக்கலாம். அப்பொழுதும் அடியேன் வேறொரு பலனையோ அதனை அளிக்கவல்ல தேவதையையோ நாடமாட்டேன். தலைவன், இன்பம் தரும் இனிமையான செயல்களைச் செய்தாலும் அல்லது துன்பங்களே தரும் இனிமையற்ற செயல்களைச் செய்தாலும் அவன் மேல் எல்லையில்லா பதிவ்ரத்யம் கொண்ட தலைவியானவளுக்கு அவனையன்றி வேறு கதியில்லை. அதுபோல அடியேன் உனக்கு வேம்பாயிட்டேனே என்னில் நான் வேம்பில் ஜீவித்து அதன் சாற்றை உண்டு வாழும் வேப்பம்புழு ஆவேன். நீ கரும்பானால் கருப்பம்புழுவாவேன். எம்பெருமானே! நான் உன்னிடத்தில் அடிமை கொண்டிருப்பது நீ என்னிடத்தில் கரும்பு போல இனியவனாக இருப்பதினாலேயே மட்டும் அன்றி நீ மிக இனியவனாக இல்லாதிருப்பினும் உன்னையே அண்டியிருப்பேன். இதுவே தாஸனான அடியேனின் ஸ்வரூபத்திற்கு லக்ஷணம்” என்று தன் அநந்யார்ஹ தாஸ்யத்வத்தைத் தலைக்கட்டுகிறார்.
இயற்கையில் கரும்பாயிருக்கிற நீ என் திறத்திலே வேம்பாக ஆனாலும் தேவரீரை நான் விடமாட்டேனென்றது போலவே, இயற்கையில் உனக்கு தாஸனாயிருக்கிற நான் எந்த ஒரு நிலையிலும் உன்னைத் தவிர வேறொன்றை உபாயமாகக் கொள்ள மாட்டேன் என்பது இப்பாசுரத்தின் திரண்ட கருத்து. “நாராயணனே நமக்கே பறை தருவான்” என்று கோதா தேவி திருப்பாவையின் முதல் பாசுரத்திலேயே ஆகிஞ்சந்யம் மற்றும் அநந்யகதித்வம் இவற்றை ஸ்தாபித்தது இங்கே அநுஸந்திக்கத்தக்கது.
ஸ்வாமி தேசிகன், ந்யாஸ திலகத்தில், ப்ரபந்நர்களின் லக்ஷணங்களை ஸ்தாபித்துக் கொண்டு வருகையில், அவர்களுக்கு இந்த ஸம்ஸார ஸாகரத்தில் மேல் ஜன்மங்களில் வர இருக்கும் துக்க கர்மாக்களை எம்பெருமான் அழித்து விட்ட போதிலும், இந்த ஜன்மத்தில் இன்பத்துடன் கலந்து வரும் துன்பத்தை முற்றிலும் அவன் ஒழிக்காமல் இருக்கும் காரணத்தை மேலே ஆழ்வார் காட்டிய கருத்தைக் கொண்டு நிர்தாரணம் பண்ணுகிறார் :
சோகாஸ்பதாம்ச மதந꞉ ச்ரயதாம் பவாப்தௌ
ராகாஸ்பதாம்ச ஸஹஜம் ந ருணத்ஸி து꞉க்கம் |
நோ சேதமீ ஜகதி ரங்கதுரீண பூய꞉
க்ஷோதிஷ்ட போக ரஸிகாஸ் தவ ந ஸ்மரேயு: ||
ஸ்ரீ ந்யாஸ திலகம் – 14
“ஹே ரங்கநாதா! உன்னைச் சரணடைந்தவர்களுக்கு இந்த ஸம்ஸாரமாகிய கடலில் மறு பிறவியைத் தரும் கர்மங்களையெல்லாம் நீ ஒழித்துவிடுகின்றாய். இருப்பினும் இச்சரீரத்தில் ஆசையோடு ஸுகங்களை அநுபவிக்கும்போது சில துன்பங்களையும் கலந்து அநுபவிக்க நேரிடுவது இயற்கை. உன் ஸங்கல்பத்தால் அந்த துன்பங்களையும் நீ வராமல் செய்யலாம். இருப்பினும் நீ அவ்வாறு செய்வதில்லை. அதற்குக் காரணம் அவர்களை துன்பம் கலவாமல் இன்பங்களையே அநுபவிக்கச் செய்தால் அற்பமான அவ்வின்பங்களிலே மிக்க சுவை கொண்டு அதிலே மேன்மேலும் ஈடுபட்டு உன்னை அடியோடு மறந்துவிடுவர். அதற்காக துன்பங்களையும் கலந்து கொடுத்தால் உலக ஸுகங்களில் பற்று குறைந்து அவர்கள் உன்னை நினைக்கவும் இடமாகும் என்றுதானே துன்பங்களைத் தடுக்காமல் இருக்கின்றாய்!” என்று அத்யாஸ்சர்யமாய் ஸாதிக்கிறார் நம் கவி ஸிம்ஹம்.
வேம்பிற்கு தேஹத்தில் ஏற்படும் ரோகத்தையும் பித்தத்தையும் போக்கி அனுகூலம் செய்யும் குணம் உண்டு. ஸம்ஸாரத்தில் மூழ்கி அதிலுள்ள அற்பமான ஸுகங்களில் ஈடுபட்டு, பகவத்/பாகவத கைங்கர்யம் என்னும் உயர்ந்த புருஷார்த்தத்தில் சிறிதும் நாட்டம் இல்லாமல் எம்பெருமானைத் தவிர பிற பலன்கள் மீது மோகங்கொள்வதென்பது நம் மனத்தில் ஏற்படும் ரோகம். அதனைப் போக்க எம்பெருமான் வேப்பஞ்சாறாகி, ஸம்ஸாரத்தில் சில துன்பங்களை மருந்தாகக் கலந்து கொடுத்து, அந்த ரோகத்தைப் போக்கியருளி தன் திவ்யமங்கள ஸ்வரூபத்தைக் காட்டிக் கொடுத்து நம்மைத் தன் பக்கல் ஈர்த்துக்கொள்கிறான்.
மேலும், பாதுகை ஆராதனத்தின் மேன்மையை நிர்தாரணம் பண்ணுகையில் ஸ்வாமி தேசிகன் ஸாதிக்கிறார்:
நிஸ்தீர்ணது꞉க ஜலதேரநகஸ்ய தேவி!
த்வத்ஸம்ப்ரயுக்த ரகுநாத பதாந்வயேந |
ஸத்ய꞉ ஸநந்தனமுகைரபி துர்நிரீக்ஷா
ஸாம்ராஜ்யஸம்பத் அபரா பரதஸ்ய ஜஜ்ஞே ||
ஸ்ரீ பாதுகாஸஹஸ்ரம் – நிர்யாதநாபத்ததி – 27
“சக்ரவர்த்தித் திருமகனுக்கு இடைவிடாது கைங்கர்யங்கள் செய்து வந்து, பின் 14 வருடங்கள் அவனைப் பிரிந்து கைங்கர்யங்கள் தடைபெற்று எல்லையில்லா துக்கத்தில் மூழ்கியிருந்தார் பரதாழ்வான். அந்த துக்கத்தைப் போக்க அச்சமயத்தில் ஸ்ரீராம பாதுகைகளை இடைவிடாது ஆராதித்து வந்தார். இராவண வதத்திற்குப் பின்னர் ஸ்ரீராமனோடு மீண்டும் சேரப்பெற்று பாதுகைகளை அவனிடமே மீண்டும் ஸமர்ப்பித்து, கைங்கர்யங்கள் மீண்டும் கிடைக்கப்பெற்று, துக்கமென்னும் ஸாகரத்தைத் தாண்டினார் பரதன். மஹாயோகிகளாலும் கூட காண முடியாததான தேஜஸ்ஸு கிடைக்கப்பெற்று, எம்பெருமான் அடியார்களுள் பரதனுக்கு நிகரானவர் ஒருவருமே இல்லை என்னும் பெரும் பேற்றைப் பெற்றார்” என்றருளுகிறார். ஆக, எப்பேற்பட்ட துக்கமாக இருந்தாலும், அது யாராக இருந்தாலும் எம்பெருமானின் திருவடிகளில் சரணடைந்து, அவனுகந்த கைங்கர்யங்களைச் செய்து வந்தால் அந்த துக்கங்களிருந்து மீளலாம் என்று தலைக்கட்டுகிறார் நம் தூப்புல் வள்ளல்.
ஜீவர்களாகிய நாம் எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணனுக்கே தாஸர்கள். நம்மீது மிகுந்த பக்ஷபாதம் கொண்டு “என்ன வரம் தர” என்று நம்மைக் கேட்டபடி, நம்மிடையே அர்ச்சாரூபமாய் எண்ணற்ற பல க்ஷேத்ரங்களில் எழுந்தருளியிருந்து இன்பத்தையே நமக்குக் கொடுக்கின்றான். அவன் நமக்கு சில துன்பங்களைக் கலந்து கொடுப்பதும் இந்த ஸம்ஸாரமென்னும் பேரிருளிலிருந்து மீட்டு எல்லையில்லா ஆனந்தத்தின் இருப்பிடமான பரமபதத்தில் நம்மைக் கொண்டு சேர்க்கவே! ஆக, இன்பமோ அல்லது துன்பமோ, அவன் கொடுப்பதை ஏற்று, ஆழ்வார் ஆசார்யர்கள் காட்டியபடி அவன் திருவடியில் அண்டியிருப்பதே நம் ஜீவஸ்வருபத்திற்குப் பாங்காகும்.
Leave a Reply