திருவேங்கடவன் எண்ணற்ற திருக்கல்யாண குணங்களை உடையவனாயிருப்பினும் அவனுடைய மற்ற குணங்களனைத்தும் தரம் பெறுவது அவன் தயையாலேயே என்பதனை “தயா சதகம்” என்னும் ஸ்தோத்ரத்தின் மூலம் ஸ்வாமி தேஶிகன் நிர்தாரணம் பண்ணுகிறார். அப்பேற்பட்ட தயையே ஒரு மலை வடிவம் கொண்டுள்ளது என்று இவ்வாறு ரஸோக்தியாக அருளிச் செய்கிறார் நம் ஆசார்ய வள்ளல்:
ப்ரபத்யே தம் கிரிம் ப்ராய: ஸ்ரீநிவாஸாநுகம்பயா |
இக்ஷுஸாரஸ்ரவந்த்யேவ யந்மூர்த்யா ஷர்கராயிதம் ||
ஸ்ரீ தயாசதகம் – 1
அடியார்களிடத்தில் தங்கு தடையின்றி வெள்ளமிட்டு ஓடும் திருவேங்கடமுடையானின் தயையானது ஒரு கரும்பின் சாறு போன்றுள்ளது. அது அனுபவிக்க பரம போக்கியமாய் இருக்கின்றது. ஸ்ரீநிவாஸனது கருணை வெள்ளமான கரும்பின் சாறு தானே ஒரு ஆறாய்ப் பெருகி, கனமாகி சர்க்கரையாகி உறைந்து கற்கண்டாக கனமாகி இன்னும் அனைவரும் அனுபவிக்க ஏற்றதாய் உள்ளது. இந்தக் கருணைதான் திருமலை வடிவம். ஸ்ரீநிவாஸனது தயை ஆற்று வெள்ளம்போல் தடையற்று அடியார்களின் மீது பெருகி அவர்கள் பாபங்களைப் போக்கி உய்விக்கிறது. இத்தகைய பெருமைகளை உடைய மலையப்பனின் தயை அசைக்க முடியாத ஒரு மாமலையாக நிற்கின்றது. இத்தகைய கருணையே வடிவான திருமலையைச் சரணமடைகின்றேன். என்று ஆழ்வார் அடியொட்டி ஸ்வாமி தேசிகன் மலையப்பனைப் பற்றாமல் மலையைப் பற்றுவது நன்கு சுவைக்கத்தக்கது.
மேலும் ஸ்வாமி தேசிகன் ஸாதிக்கிறார் :
கண்ணன் அடியிணை எமக்குக் காட்டும் வெற்பு
கடுவினையர் இருவினையும் கடியும் வெற்பு
திண்ணம் இது வீடென்னத் திகழும் வெற்பு
தெளிந்த பெருந்தீர்த்தங்கள் செறிந்த வெற்பு
புண்ணியத்தின் புகல் இதெனப் புகழும் வெற்பு
பொன்னுலகில் போகம் எல்லாம் புணர்க்கும் வெற்பு
விண்ணவரும் மண்ணவரும் விரும்பும் வெற்பு
வேங்கடவெற்பு என விளங்கும் வேத வெற்பே.
அதிகாரஸங்கிரஹம் – 43
எம்பெருமானுடைய திருவடிகள் இரண்டையும் நமக்குக் காட்டித் தரும் மலை; எத்தைகைய கொடிய பாபத்தையுடையவர்களின் இரண்டு கர்மங்களையும் ஒழிக்கவல்ல மலை; இதுவே பரமபதமென்று சொல்லும்படியான பெருமையைப் பெற்ற மலை; பல புண்ய தீர்த்தங்கள் நிறைந்த மலை; புண்ணியத்தின் புகலிடமாகத் திகழும் மலை; ஸ்ரீவைகுண்டத்தில் அடையக்கூடிய பகவதநுபவம் அனைத்தையும் அளிக்கக்கூடிய மலை; நித்யஸூரிகளுக்கும் பூலோகத்தில் உள்ள பாகவதர்களுக்கும் பொதுவாய் நிற்கும் மலை; இப்பெருமைகள் அனைத்தும் உடைய மலை ஸ்ரீநிவாஸன் நித்யவாஸம் செய்யும், திருவேங்கடமென்று ப்ரகாசிக்கின்ற, வேதத்தில் போற்றப்பெற்ற திருமலையேயாகும் என்று திருவேங்கடமலையைப் போற்றுகிறார். இப்பாசுரத்தில் ஸ்வாமி தேசிகன் ஆழ்வார்களின் ஈரச்சொற்களையொட்டி திருமலையை மங்களாசாசனம் பண்ணுவதை சில வரிகளின் மூலமாக சற்றே அனுபவிப்போம்.
கடுவினையர் இருவினையும் கடியும் வெற்பு
பாபங்களானவை பூர்வாகங்களென்றும் உத்தராகங்களென்னும் இருவகைப்படும். எம்பெருமானைப் பற்றுதற்கு முன்பு புத்திபூர்வமாகப் பண்ணும் பாபங்கள் பூர்வாங்களாம். பிறகு ப்ரகிருதி பாரவச்யத்தாலே ப்ராமாதிகமாக நேரும் பாபங்கள் உத்தராகங்களாம். இருவினை என்று ஸ்வாமி தேசிகன் இங்கு காட்டுவது ஆழ்வாரின் திருவாய்மொழிப் பாசுரத்தை(3-3-6) அடியொற்றிய இரண்டு வினைகளையே.
கண்ணன் அடியிணை எமக்குக் காட்டும் வெற்பு
“ஆறெனக்கு! நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்” என்று எம்பெருமானின் திருப்பாதங்களே நமக்கு உபாயம் என்று காட்டினார் ஆழ்வார். ஸ்வாமி தேசிகனோவென்னில் அத்திருத்தாள்களை நமக்குக் காட்டித்தரும் மலையே திருமலை என்று தலைக்கட்டி அம்மலையே அடியார்களுக்கு உபாய-உபேயங்களாய் நிற்பதாக ஸ்தாபிக்கிறார்.
விண்ணவரும் மண்ணவரும் விரும்பும் வெற்பு
திருமலையானது மண்ணவர்க்கும் விண்ணவர்க்கும் பொதுவான தலமாகவும் அம்மலையிலே வீற்றிருக்கும் திருவேங்கடவன் இருதலையார்க்கும் பொதுவாய் நிற்கிறான் என்றும் அவன் பரத்வ-ஸௌலப்யங்களை ஒன்றுசேர மங்களாசாஸனம் பண்ணுகிறார் நம் ஸ்வாமி. “மந்திபாய் வடவேங்கடமாமலை வானவர்கள் சந்தி செய்ய நின்றான்” என்று ஸ்வாமி திருப்பாணாழ்வாரும் “கண்ணாவானென்றும், மண்ணோர்விண்ணோர்க்கு” என்று ஸ்வாமி நம்மாழ்வாரும் பாசுரமிட்டது இங்கு அனுசந்திக்கத்தக்கது.
திருமலையின் பெருமையையும் திருவேங்கடத்தானின் தயையையும் பேசித் தலைக்கட்ட முடியாது. அப்பெருமைகளை உடையவனின் திருமார்பிலே நித்யவாஸம் பண்ணுகிற பெரியபிராட்டியானவள் “ஒரு கணப்பொழுதும் பிரிந்திருக்கமாட்டேன்” என்று சொல்லிக்கொண்டே இருக்கிறாள். ஆழ்வார்களும் நம் தூப்புல் குலமணியும் காட்டியது போல எம்பெருமானைத் தவிர வேறொரு புகலில்லாத நாம் அவன் உகந்து நிற்கும் திருமலை சென்று சேர்ந்து அவன் திருவடிவாரத்திலே ஏதேனுமாக அந்வயிப்போம்!
ஸ்வாமி தேசிகன் திருவடிகளே சரணம்.
Leave a Reply