Design a site like this with WordPress.com
Get started

வினை தீர்க்கும் திருவேங்கட மாமலை – 2

எம்பெருமான் திருமலையில் ஏன் எழுந்தருளினான் என்று முதற் பகுதியில் பார்த்தோம்.

இவ்வாறு அவனுகந்த, அவனுக்குப் பரமப்ராப்யமான திருமலைதான் நமக்கும் பரம ப்ராப்யம்; ஆதலால் அனைவரும் திருவேங்கட மாமலையைச் சென்றடைந்து அம்மலையையே உபாயமாகப் பற்றுங்கோள் என்று ஸாதிக்கிறார் நம் குருகூர்ச் சடகோபன்.    

குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்

அன்று ஞாலம் அளந்த பிரான் பரன்

சென்றுசேர் திருவேங்கட மாமலை

ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே.

திருவாய்மொழி 3-3-8

கிருஷ்ணாவதாரத்தில் கோவர்த்தன மலையைக் குடையாகத் தாங்கி நின்று குளிர்ந்த பெருமழையை தடுத்தான் கண்ணன். அவனே முன்பொரு காலத்தில் திருவிக்ரமனாய் மூவுலகையும் அளந்து பெற்றான். மூவுலகினை அளந்தும் கானகமெல்லாம் அலைந்தும் வாடிய அத்திருவடிகள் சென்று, சேர்ந்து, நின்றவிடமான திருமலையொன்றை மாத்திரமே ஆச்ரயித்தால் நமது வினைகள் யாவும் தொலைந்திடும். வேண்டிய வரங்களைத் தந்திட திருவேங்கடவன் நின்றிருக்க திருமலையாழ்வாரே போதும் என்றருளிகிறார் ஆழ்வார். இவ்வாழ்வாரே:

வேங்கடங்கள் மெய் மேல்வினை முற்றவும்
தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார்
வேங்கடத்து உறைவார்க்கு நமவென்னலாம் கடமை
அது சுமந்தார்க்கட்கே.

திருவாய்மொழி 3-3-6

என்று திருமலையப்பனுக்கு நித்ய கைங்கர்யங்கள் செய்யும் பரம பாகவதர்களை ஏற்றிப் பேசி திருவேங்கடவனின் அபராதஸஹத்வத்தைத் தலைக்கட்டுகிறார்.

இவ்விரு பாசுரங்களிலும் ஆழ்வார் திருமலையானது அடியார்களின் வினைகளைத் தீர்க்கவல்லது என்று காட்டுகிறார். வினைகள் என்று இங்கு எதனைக் கூறிற்று? சாஸ்த்ரங்கள் பாபங்களை பூர்வாகங்களென்றும் உத்தராகங்களென்றும் இருவகைப்படுத்தி, எம்பெருமானைப் பற்றுதற்கு முன்பு புத்திபூர்வமாகப் பண்ணும் பாபங்கள் பூர்வாங்கள்; பிறகு ப்ரகிருதி ஸம்பந்தத்தாலே நேரும் பாபங்கள் உத்தராகங்கள் என்றும் அறிவிக்கின்றன.

அங்கண் இரண்டும் கொண்டெங்கள் மேல் நோக்குதியேல் எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம் பாவாய்” என்றபடி எம்பெருமானின் செந்தாமரைக் கண்கள் அடியார்களை வசீகரம் செய்வது மட்டுமன்றி அவன் திருக்கண் நோக்கு ஒன்றே போதுமானது; அது சேதனர்களின் அநாதியான பாபங்களை ஒழிக்கவல்லது என்றாள் கோதா தேவி. ஸூர்யனை ஒத்த அவனின் ஒரு திருக்கண்ணானது தன் உஷ்ணத்தாலே சேதனர்கள் பாபத்தை அழிக்கும். சந்திரனை ஒத்த அவன் மற்றுமொரு திருக்கண்ணானது அச்சேதனர்களுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும். அதனாலே “கண்ணா! அங்கண் இரண்டும் கொண்டு எங்களை நோக்கி எங்களின் சாபத்தைப் போக்கி ஹிதத்தை அளிப்பாயாக” என்று நம்மை முன்னிட்டுக்கொண்டு அவ்வாயர்குலக்கொழுந்திடம் விண்ணப்பஞ்செய்கிறாள்.

திருவேங்கடமுடையானின் திவ்ய மங்கள ஸ்வரூபத்திலிருந்து பெருகும் ஒளியானது பரத்வத்தைத் திரியாகவும் வாத்ஸல்யத்தை நெய்யாகவும் கொண்டு ஏற்றிய தீபத்திலிருந்து பெருகும் கிரணங்கள் போன்றவை. ஸூர்ய கிரணங்களைக் காட்டிலும் உஷ்ணம் கொண்ட அவை சேதனர்களின் இருவினைகளையும் ஒழித்து விடும். அதே நேரத்தில் பசுமையான சோலைகள்சூழ் தண்திருவேங்கட மாமலையானது, சென்று சேரும் அடியார்களுக்கு ஹிதத்தை அளிக்க வல்லது.

மலையப்பன் மீது மட்டற்ற பக்தி கொண்ட மஹாவிவேகியான ஸ்வாமி குலசேகராழ்வார் திருவேங்கடமலையில் உள்ள ஒரு காட்டில் குருகு மீன் முதலிய ஜங்கமப் பொருளாகவாவது அல்லது  ஆறு மரம் முதலிய தாவரப் பொருளாகவாவது பிறவியைப் பெற விரும்பினார். அப்பிறவியை பிரமன் மற்றும் இந்திரன் முதலியவர்களின் செல்வங்களைப் பெறுவதைக் காட்டிலும் மேம்பட்டதாக உணர்ந்தார்.  மீனாகவும் குருகாகவும் பொற்குடமாகவும் செண்பகமாகவும் ஒவ்வொரு பிறவியைப் பெற விரும்பி பாசுரமிட்ட ஆழ்வாருக்கு ஒவ்வொரு பிறப்பிலும் ஒவ்வொரு அநுபபத்தி தோன்றிக் கொண்டேயிருந்தது.  கடைசியாக ஒரு பிறவியையும் தாமாக வேண்டிக் கொள்ள விரும்பாதவராய் திருமலைமேல் “ஏதேனுமாவேனே” என்று அம்மலையைக் கொண்டாடுகிறார்.

உம்பர் உலகாண்டு ஒரு குடைக்கீழ் உருப்பசி தன்

அம் பொற் கலை அல்குல் பெற்றாலும்  ஆதரியேன்

செம் பவள வாயான் திருவேங்கடமென்னும்

எம்பெருமான் பொன்மலைமேல் ஏதேனும் ஆவேனே.

பெருமாள் திருமொழி 4-10

“மேலுலகங்களையெல்லாம் ஒரு கொற்றக் குடையின் நிழலிலே அரசாண்டு ஊர்வசியினுடைய அழகிய பீதாம்பரம்  அணிந்த அல்குலை அடையப் பெறினும் அதனை விரும்பமாட்டேன். சிவந்த பவழம் போன்ற திருவாயையுடையனான எனது அப்பனுடைய திருவேங்கடம்  என்ற பெயரையுடைய அழகிய திருமலையின் மேல் ஏதேனுமொரு பதார்த்தமாகப் பிறக்கக் கடவேன்.” என்கிறார். திருமலையில் ஏதாவது ஒரு பொருளாகப் பிறந்தால் ஸ்ரீநிவாஸனது கடாக்ஷமானது எப்பொழுதாயினும் க்ஷணப்பொழுதேனும் தம்மீது விழப்பெறலாம் என்பது ஆழ்வாரின் திருவுள்ளம்.

திருமலையாழ்வாரை ஸ்வாமி தேசிகன் எவ்வாறு கொண்டாடுகிறார் என்று அடுத்த பகுதியில் பார்க்கலாம்.Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Recent Posts

அம்ருதரஞ்சனி அம்ருதாஸ்வாதினி அர்ச்சாவதாரம் ஆராதனை இராமானுஜ நூற்றந்தாதி இராமாயணம் இளையபெருமாள் கண்ணிநுண் சிறுத்தாம்பு காவேரி கைங்கர்யம் சரணாகதி தீபிகா திருமலை திருவாய்மொழி திருவிருத்தம் திருவேங்கடவன் திவ்யப்ரபந்தம் தேசிகஸ்தோத்ரம் தேவநாயக பஞ்சாசத் தேவப்பெருமாள் நம்பையல் ந்யாஸதசகம் ந்ருஸிம்ஹன் ராமாயணம் வரதராஜஸ்தவம் ஸ்ரீ தேஹளீச ஸ்துதி ஸ்ரீபாதுகாஸஹஸ்ரம் ஸ்ரீமத் பாகவதம் ஸ்ரீ யதிராஜஸப்ததி ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவம்

%d bloggers like this: