கேட்கப்படுவது எதுவோ அதுவே ஶ்ருதி. அபௌருஷேயங்களான வேதத்தைச் ஶ்ருதி எனவும் கூறுவர். இன்றளவும் வேதத்தை எழுதி வைத்துப் படிக்காமல், வாயால் சொல்லி காதால் கேட்டறிந்து ஶ்ரவணம் செய்தே தலைமுறை தலைமுறையாக அநுஸந்தித்து வருகிறோம். கடலுக்குள்ளே முத்துக்கள், பவளங்கள் மற்றும் ரத்னங்கள் போன்ற எண்ணற்ற விலைமதிப்பில்லாத செல்வங்கள் ஒளிந்திருக்கின்றன. அதுபோல பிராட்டியுடன் கூடிய எம்பெருமான் என்னும் திருக்கல்யாணகுணங்களின் கடலுள் மறைகள் மறைந்திருக்கின்றன. அம்மறையின் காரணமாகவும் காரியமாகவும் இருக்கிறான் பெருமான். அதனாலேயே அவனுக்கு ஶ்ருதிஸாகரன் என்ற திருநாமம் வழங்கப்படுகின்றது.
தாம் விசேஷமாகப் பிரகாஸிக்கும் இடங்களை அர்ஜுனனுக்குச் உபதேஸித்துக்கொண்டு வரும் போது “வேதானாம் ஸாமவேதோஸ்மி– வேதங்களுக்குள் நான் ஸாமவேதமாக இருக்கிறேன்” என்றவிக்கிறான் கீதாசார்யன். திருப்பாற்கடலில் நித்ய முக்தர்கள் புடைசூழ தம் தேவிமார்களுடன் அரவணையில் பள்ளிகொண்டு “ஹா வு ஹா வு ஹா வு” என்று ஸதா சர்வகாலமும் ஸாம கானத்தைக் கேட்டருளி பரமாநந்த ஸ்வரூபியாய் திகழ்கிறான். அப்பேற்பட்ட பெருமைகளை உடைய ஸாம வேதத்திலிருந்து கானமும், சங்கீத சாஸ்த்ரமும் தோன்றியது. அதன் அடிப்படையில் நாதம் உருவானது. இவையனைத்திற்கும் பிரமாணமாய் உள்ள ச்ரிய:பதி தன் விபவ அவதாரங்களின் போது அவன் திருவாயிலிருந்து பிரதானமாய் எழுந்த ஒலிகளின் சுநாதங்களையும் அவற்றின் மூலம் அவன் மேன்மையையும், ரக்ஷகத்வத்தையும் அவன் கண்டையின் அவதாரமான நம் தூப்புல் வள்ளலின் கவிதை ரஸங்கள் கொண்டு அநுபவிப்போம்.
உலகை ரக்ஷிக்கும் ஸ்ரீ வராஹப் பெருமானின் “குர்குரம்”
கோபாயேதநிசம் ஜகந்தி குஹநாபோத்ரீ பவித்ரீக்ருத –
ப்ரஹ்மாண்ட꞉ ப்ரளயோர்மிகோஷகுருபிர்கோணாரவைர்குர்குரை꞉|
யத்தம்ஷ்ட்ராங்குரகோடிகாடகடநாநிஷ்கம்பநித்யஸ்திதி꞉
ப்ரஹ்மஸ்தம்பமஸௌதஸௌ பகவதீமுஸ்தேவ விச்வம்பரா ||
ஸ்ரீ தசாவதார ஸ்தோத்ரம் – 4
“ப்ரளய காலத்தில் கடலுள் மூழ்கிய பூமியை மீட்க ஒரு பெரிய பன்றி வடிவு கொண்டு அவதரித்தான் எம்பெருமான். அப்பொழுது அவன் திருமூக்கில் இருந்து எழுந்த “குர்குர்” என்ற ஒலியானது பிரளய காலத்தில் கடல் அலைகள் மோதும்பொழுது எழும்பும் ஒலியைப் போல் மிகுந்திருந்தன. அவ்வொலிகள் ப்ரஹ்மாண்டங்கள் முழுதும் பரவி அவற்றை பரிசுத்தமாக்கின. இவ்வொலிகளுடன், வராஹப்பெருமான் தன் கோரைப்பல்லின் நுனியில் பூமியைத் தரித்து எடுத்து வருகிறான். அப்பூமி ஒரு பன்றியின் கோரைப்பல்லில் ஒட்டியிருக்கும் கிழங்குபோல காட்சியளிக்கின்றது. வராஹப்பெருமானின் கோரைப்பல்லை இறுகப் பற்றியிருக்கும் பூமிதேவி சிறிதும் அசையாமல் நிலைத்திருக்கிறாள். பெருமைகள் பொருந்திய இந்தப் பூமிதேவி கோரைக்கிழங்கு போல் நின்று பிரமன் முதல் துரும்பு வரை உள்ள அனைத்து சராசரங்களும் உற்பத்தியாகக் காரணமாக இருக்கின்றாள். இந்த வராஹப்பெருமானின் திருமூக்கின் ஒலிகள் உலகங்கள் அனைத்தையும் ரக்ஷிக்க வேண்டும்.” என்று ஸ்வாமி தேஶிகன் தலைக்கட்டுகிறார். வராஹ அவதார வைபவத்தை இவ்வளவு கவிநயத்துடன் வர்ணநம் செய்ய வேறொரு ஆசார்யன் நம்மிடத்தில் இல்லை.
மயக்கும் மாதவனின் வேணுகானம்
மஹஸே மஹிதாய மௌளிநா
விநதேநாஞ்ஜலிமஞ்ஜநத்விஷே |
கலயாமி விமுக்தவல்லவீ –
வலயாபாஷிதமஞ்ஜுவேணவே ||
ஜயதி லளிதவ்ருத்திம் சிக்ஷிதோ வல்லவீநாம்
சிதிலவலயசிஞ்ஜாசீதளைர்ஹஸ்ததாளை꞉ |
அகிலபுவநரக்ஷாகோபவேஷஸ்ய விஷ்ணோ꞉
அதரமணிஸுதாயாமம்சவான் வம்சநால꞉ ||
ஸ்ரீ கோபால விம்ஶதி 15-16
“கண்ணனும் இடைப்பெண்களும் ராஸக்க்ரீடையில் ஈடுபடுகின்றனர். அழகிய குழலைத் தன் திருவதரத்தில் வைத்து இனிய ஓசையை எழுப்புகின்றான் கண்ணன். அப்பொழுது அழகிய இடைப்பெண்கள் தங்கள் கைகளால் குழலோசைக்கு ஏற்றவாறு தாளம் போடுகின்றனர். இடைப்பெண்கள் தங்கள் கைவளையல்களை இறுக்கமின்றி தரித்திருக்கின்றனர். ஆதலால் வளையல்களில் இருந்து வரும் ஒலி கை போடும் தாள ஒலியோடு சேர்ந்து மிக இனியதாகின்றது. இவர்கள் போடும் தாளம் புல்லாங்குழலுக்கு அபிநய சாஸ்த்ரத்தில் உள்ள “லளிதம்” என்னும் அபிநய முறையைக் கற்பிக்கின்றன.அனைத்துலகையும் காக்கத் தானே எம்பெருமான் கோவலருள் கோவலனாய் அவதரித்திருக்கின்றான். குழலூதும் கண்ணனின் செவ்வாயின் அமுதத்தில் கோபியரைப் போல தானும் பங்குகொள்ளும் திருக்குழல் மிகப் பெருமை பெற்று விளங்குகின்றது.” ஆயர் குலச் சிறுவனாய் அவதரித்து தன் ஸௌலப்ய-ஸௌசீல்யங்களைக் காட்டி அவனிடத்தில் மயங்கச் செய்து நம்மை அடிமை செய்து ஆட்கொள்ளும் அவன் திருவிளையாடல்கள் தான் எத்துணை! கண்ணனின் வேணு கானத்தைக் கொண்டாடாத ஆழ்வார்கள் இல்லை.இருப்பினும் ஸ்வாமி தேசிகனின் இவ்வர்ணநம் கோபியரின் வளையல் ஒலி கண்ணன் குழலோசையுடன் இரண்டறக் கலந்து ஆனந்தத்தை அளிப்பது போல பேரானந்தத்தை நமக்கு அளிக்கிறது.
மூன்று வேதங்களின் ஸாரமாக உள்ள ஸ்ரீ ஹயக்ரீவனின் ஹலஹலம்
ஸ்வத꞉ ஸித்தம் சுத்தஸ்படிகமணிபூப்ருத்ப்ரதிபடம்
ஸுதாஸத்ரீசீபிர்த்யுதிபிரவதாதத்ரிபுவநம் |
அநந்தைஸ்த்ரய்யந்தைரநுவிஹிதஹேஷாஹலஹலம்
ஹதாசேஷாவத்யம் ஹயவதனமீடீமஹி மஹ꞉ ||
ஸமாஹார꞉ ஸாம்நாம் ப்ரதிபத₃ம்ருசாம் தாம யஜுஷாம்
லய꞉ ப்ரத்யூஹாநாம் லஹரிவிததிர்போதஜலதே꞉ |
கதாதர்பக்ஷுப்யத்கதககுலகோலாஹலபவம்
ஹரத்வந்தர்த்வாந்தம் ஹயவதநஹேஷாஹலஹல꞉ ||
ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரம் 2-3
ஸ்ரீ ஹயக்ரீவனே தமக்கு ஆசார்யனாய் எழுந்தருளி தம் திருவுள்ளத்தில் எழுதியருளிய விஷயங்கள் அனைத்தையும் அனைவரும் அறிந்து உஜ்ஜீவிப்பதற்காக ஓலையில் எழுதியதாக ஸ்வாமி தேஶிகன் ஸாதிக்கிறார். அப்பேற்பட்ட பெருமைகளை உடைய பெருமானின் ஹல-ஹல நாதம் மூன்று வேதங்களின் ஸாரம் என்று இங்கே தலைகட்டுகிறரர்: “அடியார்களை உய்விக்க எம்பெருமான் தாமாகவே ஸ்ரீ ஹயக்ரீவனாக அவதரித்தான். அப்பெருமானின் திருமேனி தூய படிக மணிகளாலாகிய ஒரு மலைபோல் விளங்குகின்றது. அந்த எம்பெருமானின் அமுதம் போன்ற திருமேனியிலிருந்து வீசும் வெண்மையொளியானது மூவுலகையும் வெண்மை நிறமாக்குகிறது. அவன் குதிரையுருவுக்கு ஏற்றவாறு கனைக்கும் பொழுது எழும்பும் “ஹல ஹல “ என்னும் ஒலியில் எல்லையற்ற வேதாந்தங்களின் அர்த்தங்கள் அடங்கியுள்ளன. இவ்வொலியை கேட்பவர்களுக்கு வேதாந்த அர்த்தங்கள் நன்கு விளங்குமாறு செய்கின்றான் இப்பெருமான். அடியார்க்கு வரும் எல்லாத் தீங்குகளையும் ஒழிக்கின்ற, தேஜோமயனாய் நிற்கும் ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமானை நாம் ஸேவிப்போம். ஸ்ரீ ஹயக்ரீவனுடைய “ஹல-ஹல” என்னும் கனைப்பொலி ஸாமவேதத்திலுள்ள எல்லா கிளைகளையும் தொகுத்து ஒன்றுகூடிய வடிவம் போலுள்ளது. அவ்வொலி ருக்வேத மந்திரங்களுக்கு அர்த்தத்தைக் கூறுவது போல் விளங்குகின்றது. யஜுர் வேத மந்திரங்களின் பொருள்கள் அனைத்தையும் தன்னுள் அடங்கப்பெற்றது. கல்வி கற்க உண்டாகும் தடைகள் அனைத்தையும் ஒழித்து ஞானமென்னும் கடலின் அலைவரிசையாய் நிற்கிறது. இப்படி மூன்று வேதங்களின் ஸாரமாக இருந்து கல்வித் தடைகளை ஒழித்து ஞானச்சுடரை ஏற்றும் வல்லமையை உடையது. குயுக்திகளைக் கொண்டு வாதம் புரிவதில் செருக்குக்கொண்ட வேற்று மதத்தினரின் ஆரவாரத்தில் பலர் மயங்குவதுண்டு. அவர்களின் அஜ்ஞானமென்னும் இருளை ஸ்ரீ ஹயக்ரீவனின் “ஹல-ஹல” ஒலி முற்றிலும் ஒழித்து அருள் புரிய வேண்டும்.”
எம்பெருமான் பாதுகைகளின் நாதம்
எம்பெருமானின் விபவ அவதாரத்தின் போது அவன் திருவாயிலிருந்து பல திவ்ய ஒலிகளை எழுப்பி தன் அடியார்களை ரக்ஷித்தான். ஸம்ஸாரத்தில் உழன்று அல்லல்படும் நம் போன்ற ஜீவாத்மாக்களை வழிப்படுத்தி வானேற்ற அவனே பல அர்ச்சாவதார மூர்த்தியாக ஆங்காங்கே வீற்றிருக்கிறான். திருவரங்கனாக எழுந்தருளி பாதுகைகளைச் சாற்றிக்கொண்டு சஞ்சாரம் செய்யும் போது எழும் நாதங்கள் நம்மைப் போன்றவர்களையும் ரக்ஷிக்கக் கூடியவையே என்று ஸ்தாபிக்கிறார் நம் கவி ஸிம்ஹம்.
மதுவைரிபதாம்புஜம் பஜந்தீ
மணிபாதாவநி! மஞ்ஜுசிஞ்ஜிதேந |
படஸீவ முஹு꞉ ஸ்வயம் ப்ரஜாநாம்
அபரோபஜ்ஞம் அரிஷ்டசாந்தி மந்த்ரம் ||
ச்ருதிபி꞉ பரமம் பதம் முராரே꞉
அநிதங்காரம் அநேவம் இத்யுபாத்தம் |
இதம் இத்தமி இதி ப்ரவீஷி நூநம்
மணிபாதாவநி ! மஞ்ஜுபி꞉ ப்ரணாதை꞉||
ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம் – நாத பத்ததி – 7-8
“ஏ கல்லிழைத்த பாதுகையே! உன்னைச் சாற்றிக்கொண்டு பெருமாள் எழுந்தருளும்போது எழும் உன்னுடைய சப்தத்தைப் பார்த்தால் லோகத்தில் ஜீவன்கள் படும் எல்லையில்லா துன்பத்தை நீக்குவதற்காக நீ மிகவும் தயை கொண்டு தானாகவே ஒரு புதிய மந்த்ரத்தைச் சொல்லுவது போல இருக்கின்றது. பெருமாளுடைய ஸ்வரூபத்தையும் நித்யவிபூதியின் ஸ்வரூபத்தையும் அதன் ஸங்கதிகளையும் அறிய முடியாதென்று வேதங்கள் சொல்ல, அப்படிப்பட்ட விஷயங்களை உன் இனிமையான சப்தங்கள் மூலமாக சுலபமாக அறியலாம்.” என்று நிர்தாரணம் பண்ணுகிறார் ஸ்வாமி தேசிகன்.
“எங்கு, எப்பொழுதெல்லாம் தர்மம் வீழ்ந்து அதர்மம் தலை தூக்குகிறதோ அங்கெல்லாம் தர்மத்தை நிலை நாட்ட நான் யுகந்தோறும் அவதரிப்பேன்” என்பது எம்பெருமானின் திருவாக்கு. அவ்வாறே எம்பெருமான் பலவிதமான ஸ்வரூபங்களில் திருவவதரித்து யுகந்தோறும் சிஷ்ட பரிபாலன துஷ்ட நிக்ரஹங்களைத் தன் விபவ அவதாரங்கள் மூலம் நிகழ்த்திக்காட்டித் தர்மத்தை ஸ்தாபித்தான்.
வேதே ஸஞ்ஜாத கேதே முநிஜந வசநே ப்ராப்தநித்யாவமாநே
ஸங்கீர்ணே ஸர்வவர்ணே ஸதி ததநுகுணே நிஷ்ப்ரமாணே புராணே |
மாயாவாதே ஸமோதே கலிகலுஷ வசாச்சூந்யவாதேಽவிவாதே
தர்மத்ராணாய யோಽபூத் ஸ ஜயதி பகவான் விஷ்ணு கண்டாவதார꞉
ஸ்ரீ தேஶிக மங்களம் – 16
அதேபோல வேதங்கள் கலங்கி துன்புற்றிருந்த வேளையில், வ்யாஸ முனிவரின் வாக்யங்களான ப்ரம்ம சூத்ரம் அவமானத்தை அடைந்திருந்த நேரத்தில், கலியின் பலத்தால் பல விதமான மதங்கள் புற்றீசல் போல் கிளம்பி பராசர மஹரிஷியின் புராணங்கள் வலிமையிழந்து போக, மாயா மற்றும் சூன்ய வாதங்கள் தலைதூக்கியிருந்த போது, நம் வைதீக தர்மத்தைக் காக்கவும், சரணாகதி மார்கத்தை ஸ்தாபிக்கவும் மஹா விஷ்ணுவான ஸ்ரீமந் நாராயணனின் திருமணியின் அம்சமாக அவதரித்தவர் நம் ஆசார்ய வள்ளல் ஸ்ரீ வேதாந்த தேஶிகன். இவரும் தன் திருவவதார வைபவம் மூலம் அடியார்களாகிய நம்மை சிக்ஷித்தும்(சிஷ்ட பரிபாலனம்) வாதியர்களின் வாழ்வறுத்தும்(துஷ்ட நிக்ரஹம்) ஸத்ஸம்ப்ரதாய தர்மத்தை ஸ்தாபித்தார்.
அன்றிவ்வுலகினை ஆக்கி, அரும் பொருள் நூல் விரித்து
நின்று தன் நீள் புகழ் வேங்கட மாமலை மேவி பின்னும்
வென்றிப் புகழ் திருவேங்கடநாதன் எனும் குருவாய்
நின்று நிகழ்ந்து மண்மேல் நின்ற நோய்கள் தவிர்த்தனனே ||
பிள்ளையந்தாதி – 5
என்று ஸ்வாமி தேஶிகன் திருவவதார வைபவத்தின் மூலமாகவும் அவரருளிய ஸ்ரீஸூக்திகள் மூலமாகவும் நமக்குச் செய்த பேருபகாரத்தை அவரின் திருக்குமாரரான ஸ்ரீ நயினாசார்யார் காட்டுகிறார்.
திருக்கோவில்களிலும் நம் க்ருஹங்களிலும் நாம் பெருமாளுக்குச் செய்யும் நித்யபடி திருவாராதனம் கண்டநாதம் இல்லாமல் பூர்த்தியாகாது. அதேபோல ச்ரிய:பதியின் ஸ்வரூப ரூப குண விஷேஷனங்களையும் ப்ரபத்தி மார்க்கத்தையும் கண்டாவதாரமான திருவேங்கடநாதனின் ஸ்ரீ ஸூக்திகள் இல்லாமல் நாம் முழுவதுமாக அறிந்து கொள்ள முடியாது.