ஸம்ஸார பந்தத்தில் கட்டுண்டு ஜீவன்கள் படும் அவஸ்த்தையானது கண்டு இமையோர் தலைவனுக்குப் பொறுக்கமுடியவில்லை. அவர்களைத் துன்பத்திலிருந்து உய்விக்க இராமனாகவும் கண்ணனாகவும் அவர்கள் மத்தியிலேயே அவதரித்து, அவர்களைத் திருத்திப் பணிகொள்ளப் பார்த்தான். இருப்பினும் அவர்கள் திருந்தவில்லை. பின்பு விஷ்வக்ஸேநரிடம், “நான் லீலாவிபூதியிலுள்ள உயிர்களை உஜ்ஜீவிப்பதற்காகப் பல வகையான யோனிகளில் அவதரித்து அவர்களுடன் கலந்து பரிமாறி, அவர்களை நல்வழிப் படுத்த முயன்றும் அவர்களுடைய அஜ்ஞானம் நீங்க வழியில்லை. கர்ம வாஸனையால் ஸம்ஸாரமென்னும் இருளில் இருந்துகொண்டு என்னை நினைக்காமலும் மோக்ஷத்திற்க்காக என்னை அணுகாமலும் இருக்கின்றனர். ஆகவே நீர் பூவுலகில் அவதரித்து, ஸ்ரீஸூக்திகளை அருளிச்செய்து, மெய்நின்ற ஞானத்தை ஊட்டி, அவர்களின் அழுக்குடம்புகளைத் தொலைக்கும்படி செய்து எமக்கு ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்யும்படி மாற்றியருளும்!” என்று நியமித்தருளினான். அதன்படி எம்பெருமானால் மயர்வற மதிநலம் அருளப்பெற்று, விஷ்வக்ஸேநர், ஆழ்வார்களுள் ப்ரதானமானவராகவும், ப்ரபந்நஜன கூடஸ்தருமாய், ஓர் வைகாசி விசாகத்தில் ஸ்வாமி நம்மாழ்வாராக இப்புவியில் அவதரித்து நான்கு வேதங்களின் ஸாரமாக நான்கு திவ்ய ப்ரபந்தங்களைத் தந்தருளினார். தம் ஸ்ரீஸூக்திகள் மூலம் தீர்ந்த அடியவர்களைத் திருத்தி எம்பெருமானிடத்தில் பணிகொள்ள வைப்பதையே ஆழ்வார் தன் திருவவதார வைபவத்தின் தலையாய கர்தவ்யமாகக் கொண்டார்.

ஆழ்வார் மூலமாக எம்பெருமான் நமக்கு செய்யும் இப்பேருபகாரத்தை ஸ்வாமி தேசிகன் “அம்ருதாஸ்வாதினி”ல் கொண்டாடுகிறார்:
அந்தமிலாப் பேரின்பம் அருந்த ஏற்கும்
அடியோமை அறிவுடனே என்றும் காத்து
முந்தை வினை நிரை வழியில் ஒழுகாது எம்மை
முன்னிலையாம் தேசிகர் தம் முன்னே சேர்த்து
மந்திரமும் மந்திரத்தின் வழியும் காட்டி
வழிப் படுத்தி வானேற்றி அடிமை கொள்ளத்
தந்தையென நின்ற தனித் திருமால் தாளில்
தலை வைத்தோம் சடகோபன் அருளினாலே
அம்ருதாஸ்வாதினி – 28
“எல்லையில்லா ஆனந்தத்தை அளிக்கும் மோக்ஷமென்னும் ஸாதனத்திற்குத் தகுதியாயுள்ள நம்மைக் காத்து, ஸ்திரமான தர்ம பூத ஞானத்தைக் கொடுத்து எம்பெருமான் நம்மை ரஷித்தருளுகிறான். மேலும் அநாதியான கர்ம ஸம்பந்தத்தில் நம்மை அழுத்தாமல் நம்மைக் கரை சேர்ப்பதற்குப் ப்ரதானமான ஸ்தானத்தில் நிற்கின்ற ஆசார்யர்களிடம் ஒரு ஸம்பந்தத்தை உண்டு பண்ணி, திருமந்திரம் முதலிய மந்திரத்தையும் அந்த மந்திரத்தில் சொல்லப்படும் ப்ரபத்தி என்னும் உபாயத்தையும் அவ்வாசார்யன் மூலமாக நமக்கு உபதேஸித்தருளி அவ்வுபாயத்தை அனுஷ்டிக்கும்படி ஓர் தெளிவை ஏற்படுத்தி, நம்மை பரம பதத்தில் கொண்டு சேர்க்கிறான். பின்பு அங்கே நாம் செய்யும் கைங்கர்யங்களை ஏற்றுக் கொள்கிறான். இப்படி பலவிதமான மஹா உபகாரங்கள் செய்ய முற்படும் நிகரற்ற எம்பெருமான் நமக்குத் தந்தை என்னும் ஸ்தானத்தில் நிற்கின்றான். அப்பெருமானின் திருவடிகளில் நம்மாழ்வாருடைய அனுகிரஹத்தாலே தலை வணங்கப் பெற்றோம்.” என்று ஸாதிக்கிறார்.
ஸம்ஸார பந்தத்தில் கட்டுண்டு ஜீவன்கள் படும் அவஸ்த்தையானது ஆழ்வார் திருவுள்ளத்திற்க்கு எவ்வளவு அஸஹ்யமாய் இருக்கிறதென்பதை தம் முதல் ப்ரபந்தமான திருவிருத்தத்தின் முதல் பாசுரத்தின் மூலம் தமது ஞானக் கண்ணுக்கு இலக்கான எம்பெருமானிடம் “தேவரீரை அநுபவிக்கைக்கு விரோதியான தேஹஸம்பந்தத்தைப் போக்கியருள வேணும்” என்று எல்லா ஜீவன்களின் மீதும் தாம் கொண்ட மிகுந்த அனுதாபத்தினால் அவர்கள் சார்பாக இமையோர் தலைவனான காஞ்சி தேவப்பெருமாளிடம் விண்ணப்பஞ்செய்கிறார்.
பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்குடம்பும்
இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை – உயிர் அளிப்பான்
எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய் இமையோர் தலைவா
மெய்நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே
திருவிருத்தம் 1
“எல்லாப் பிராணிகளையும் ரக்ஷித்தருள்வதற்காக பலவகைப்பட்ட பிறப்புகளையுடையனாய் திருவவதரித்தவனே! தேவாதி தேவனே! பலபல ஊழிகளாய் ஸம்ஸார பந்தத்தில் கட்டுண்டமையால் உண்டாகும் மோக்ஷத்திற்கு விரோதமான ஞானமும் (அத்யந்த அல்பஸாரங்கள்), அதடியாக அஹங்கார மமகாரங்கள் கொண்டு செய்யப்படும் தீய நடத்தையும், ரஜஸ் மற்றும் தாமஸ குணங்கள் நிறைந்த, ஸத்வ குணம் சிறிதேனும் இல்லாத அசுத்தங்களோடு கூடின சரீரமும் (ஆகிய இவற்றோடு கூடி) இதுபோன்ற ப்ரகாரத்தை இனிமேல் நாங்கள் அடையாதபடி அடியனாகிய நான் சொல்லும் உண்மையான விஜ்ஞாபகத்தை நின்று தேவரீர் கேட்டருள வேணும்.” என்று விண்ணப்பிக்கிறார்.

“இனியாம் உறாமை” என்று பன்மையிலும் “அடியேன் செய்யும் விண்ணப்பமே” என்று ஒருமையிலும் ப்ரயோகித்து, தாம் மட்டுமல்லாமல் தம்முடன் சேர்ந்து இவ்விருளில் துவள்கின்ற ஸம்ஸாரிகள் அனைவரும் உஜ்ஜீவிக்க வேண்டுமென்று அவர்களின் ப்ரதிநிதியாய் நின்று எம்பெருமானிடத்தில் அவன் நியமித்தருளினபடி விண்ணப்பிக்கிறார் கருணைக்கடலான காரிமாறன்.
அதடியொட்டி குறையா மறையின் தெளியாத நிலங்களை அனைவரும் அறிந்து தெளியும்படி நான்கு வேதங்களின் ஸாரமாக நான்கு திவ்ய ப்ரபந்தங்களை நமக்குத் தந்தருளினார்.
ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரத்தில் ஸ்வாமி தேசிகன் ஸாதிக்கிறார்:
த்ரமிடோபநிஷந்நிவேஶஶூந்யாந்
அபி லக்ஷ்மீரமணாய ரோசயிஷ்யந் |
த்ருவமாவிஶதி ஸ்ம பாதுகாத்மா
ஶடகோப ஸ்வயமேவ மாநநீய: ॥
ஸ்ரீபாதுகாஸஹஸ்ரம் ஸமாக்யாபத்ததி – 2

“எல்லாராலும் போற்றப்படுகின்ற ஸ்வாமி நம்மாழ்வார் அனைவரும் பெருமாளை அடைந்து உஜ்ஜீவிக்கவேண்டுமென்று திருவுள்ளங்கொண்டு திருவாய்மொழியைத் தந்தருளினார். இருப்பினும் பலர் அத்திருவாய்மொழியைக் கற்று உபாஸிப்பதில்லை. அப்படி கற்காதவர்களும் பெருமாளை அடைவதற்காக ஆழ்வார் தாமே பாதுகையாக அவதரித்து அனைவரின் ஸிரஸ்ஸிலும் ஸ்ரீசடாரியாக ஸாதிக்கப்பெற்று, அந்த ஸம்பந்தம் மூலமாக திவ்ய தம்பதிகளின் அநுகிரஹத்திற்குப் பாங்காக அனைவரையும் மாற்றியருளினார்.” என்று ஆழ்வாரின் அருளிச்செயல்களை அறியாதவர்களும் உய்ய வேண்டுமென்று அவர் ஸ்ரீசடாரியாகத் திருவவதரித்த வைபவத்தை நிர்தாரணம் பண்ணுகிறார் ஸ்வாமி தேசிகன்.
ஆழ்வாரின் அத்யந்த சிஷ்யரான ஸ்வாமி மதுரகவியாழ்வார் எழுந்தருளியிருந்த காலத்தில் எம்பெருமான் கண்ணனே இவ்வுலகில் எழுந்தருளியிருந்தான். இருப்பினும் அவனை நேரே சென்றடைந்து ஆச்ரயிக்காமல் ஓர் ஆசார்யன் மூலமாகத் தான் அடையவேண்டும் என்ற துணிவுகொண்டு தக்க ஆசார்யனுக்காகக் காத்துக்கொண்டிருந்தார். ஸ்வாமி நம்மாழ்வார் திருவவதரித்த பின் அவர் திருவடிகளில் ஈடுபட்டு அவர் திவ்ய ஸூக்திகளும் திருவடியுமே தமக்கு உபாயமாகக் கொண்டு அவருக்கு இடைவிடாது நித்யகைங்கர்யங்கள் செய்து ஆசார்ய ஸம்பந்தம் மூலமாகவே பக்தியும் ப்ரபத்தியும் ஸித்திக்கும் என்று நமக்குக் காட்டியருளினார்.
பயனன்றாகிலும் பாங்கலராகிலும்
செயல்நன்றாகத் திருத்திப் பணிகொள்வான்
குயில்நின்றார்ப்பொழில்சூழ் குருகூர்நம்பி
முயல்கின்றேனுன்றன் மொய்கழற்கன்பையே
கண்ணிநுண் சிறுத்தாம்பு – 10
“பிறர் திருந்துவதால் தமக்கொரு பயனில்லாமல் போனாலும் அவர்கள் திருந்துவதற்குப் பாங்காக இல்லாமல் போனாலும் தமது அநுஷ்டானத்தாலே நன்றாக திருத்தி அவர்களை அடிமை கொண்டு ஆட்கொள்வதற்காக குயில்கள் ஆரவாரம்செய்யும் சோலைகள் சூழப்பட்ட திருநகரியிலே எழுந்தருளியிருக்கிற ஆழ்வாரே! தேவரீருடைய சிறந்த திருவடிகளில் அன்பு உண்டாவதைக் குறித்தே அடியேன் முயற்சி செய்கின்றேன்.” என்று ஆழ்வாரின் பாதரவிந்தங்களையே உபாயமாகப் பற்றுகிறார்.
மதுரகவிகளின் இந்த ஆசார்ய பக்தியை ஸ்வாமி தேசிகன் அதிகார ஸங்க்ரஹம் 2ம் பாசுரத்தில் அறிவித்து ஸ்வாமி மதுரகவிகள் காட்டிய வழியே நமக்குச் சிறந்த வழி என்று ஸ்தாபிக்கிறார்.
இன்பத்தில் இறைஞ்சுதலில் இசையும் பேற்றில்
இகழாத பல்லுறவில் இராகமாற்றில்
தன்பற்றில் வினை விலக்கில் தகவோக்கத்தில்
தத்துவத்தை உணர்த்துதலில் தன்மையாக்கில்
அன்பர்க்கே அவதரிக்கும் ஆயன் நிற்க
அருமறைகள் தமிழ் செய்தான் தாளே கொண்டு
துன்பற்ற மதுரகவி தோன்றக் காட்டும்தொல்வழியே நல்வழிகள் துணிவார்கட்கே.
அதிகார ஸங்க்ரஹம் 2
அன்பன் தன்னை அடைந்தவர்கட்கெல்லாம் அன்பனான குருகூர்ச் சடகோபன் ஸர்வலோக சரண்யனின் சரணாகதரக்ஷண வ்ரதத்தை முன்னிட்டுக்கொண்டு “சரணமாகும் தனதாள் அடைந்தார்க்கெல்லாம் மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்”(திருவாய்மொழி 9-10-5) என்றும் “வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே” (திருவாய்மொழி – 10-9-9) என்றும் அறிவித்தார். அவ்வாழ்வாருக்கு அன்பரான மதுரகவிகள் காட்டிய வழியில் சென்று நம்மாழ்வார் ஸ்ரீஸூக்திகளை உபாஸித்து, இமையோர்தலைவனைச் சரணடைந்து, வைகுந்தம் சென்று சேர்வோமாக!
****ஆழ்வார் திருவடிகளே சரணம்****
Leave a Reply