திருமங்கையாழ்வார் அருளிய பெரிய திருமொழி 10-8 மாற்றமுளவாகிலும், 7வது பாசுரம்:
வேம்பின்புழு வேம்பன்றி உண்ணாது அடியேன்
நான் பின்னும் உன் சேவடியன்றி நயவேன்
தேம்பலிளந்திங்கள் சிறைவிடுத்து ஐவாய்ப்
பாம்பினணைப்பள்ளிக் கொண்டாய் பரஞ்சோதீ
பொருளுறை:
“க்ஷயரோகத்தால் மெலிவுற்ற யுவாவான சந்திரனுக்கு க்ஷயரோகத்தைப் போக்கியருளின, ஐந்து முகங்களையுடைய, ஸர்பத்தின் உடலான படுக்கையில் ஸயனித்திருக்கும் ஸ்ரீரங்கநாதனே! ஸர்வேஸ்வரனாய் மிக்க ப்ரகாஸமானவனே! வேப்பமரத்திலே பிறந்திருக்கும் புழு கசப்பான வேம்பை விட்டு வேறொன்றை உண்ணுவதில்லை. அதுபோல அடியேன் உனக்கே தாஸனாய், உனது அழகிய திருவடிகளை விட்டு வேறொன்றை விரும்பவேமாட்டேன்.”
இப்பாசுரத்தின் உட்கருத்தை இனி ஸேவிப்போம்.
பொதுவாக எம்பெருமானின் இனிமைக்கு கரும்பையும் அதன் ரஸத்தையும் ஒரு த்ருஷ்டாந்தமாக இட்டுக் கூறுவது வழக்கம். “தொண்டர் தங்கள் சிந்தையுள்ளே முளைத்தெழுந்த தீங்கரும்பு” என்று இவ்வாழ்வாரே கரும்பை எம்பெருமானுக்கு உவமையாக்கியதும், ஸ்வாமி தேசிகன் தேஹளீசஸ்துதியில் திருக்கோவலூர் எம்பெருமானான நெடுமாலை பெண்ணை ஆற்றங்கரையில் விளைந்த கரும்பு என்றும் அவன் திவ்யமங்கள அநுபவம் கருப்பஞ்சாறு போன்றது என்று கொண்டாடியதும் இங்கே அநுஸந்திக்கத்தக்கது.
காஸாரபூர்வகவிமுக்யவிமர்த்தஜந்மா
பண்ணாதடேக்ஷூஸுபகஸ்ய ரஸோ பஹூஸ்தே
த்வத்பாதபத்மமதுநி த்வதநந்யபோக்யே
நூநம் ஸமாச்ரயதி நூதநசர்க்கராத்வம்
தேஹளீசஸ்துதி-7
ஆனால் அகிலஹேயப்ப்ரத்யநீகனை இப்பாசுரத்தில் கருப்பஞ்சாற்றிற்கு நேர் எதிர் தட்டில் உள்ள வேம்போடு உவமையாக்கிக் கூறுவது அவன் திருக்கல்யாண குணங்களுக்குப் பாங்காகுமோ?
ஆழ்வார், இப்பாசுரத்தில் தலைவனான எம்பெருமான் என்ன செய்தினும் அவன் அடியவனான சேதனனுக்கு அவனையன்றி வேறு புகலிடமில்லை என்று நாம் அவனிடங்கொண்ட அநந்யார்ஹ தாஸ்யத்வத்தை ஸ்தாபிக்கவே வேம்பை உவமையாக்குகிறார்.
மனைவிகள் அனைவரையும் ஒரே விதமாகப் பாராட்டாமலிருந்த சந்திரனுக்கு சாபத்தால் க்ஷய ரோகம் ஏற்பட அவன் திருவரங்கம் சென்று அரங்கனை சரணடைந்து அங்குள்ள சந்திரபுஷ்கர்னியில் ஸ்நானம் செய்ய, திருவரங்கன் அந்த ரோகம் போகவருளினான். எம்பெருமானைத் தவிர பிற பலன்கள் மீது மோகங்கொள்வதென்பது நம் மனத்தில் ஏற்படும் ரோகம். வேம்பிற்கு தேஹத்தில் ஏற்படும் ரோகத்தையும் பித்தத்தையும் போக்கி அனுகூலம் செய்யும் குணம் உண்டு. அதுபோல நம் மனத்தில் ஏற்பட்ட ரோகத்திற்கு எம்பெருமான் வேப்பஞ்சாறாகி அந்த ரோகத்தைப் போக்கியருளி தன் திவ்யமங்கள ஸ்வரூபத்தைக் காட்டிக் கொடுத்து நம்மைத் தன் பக்கல் ஈர்த்துக்கொள்கிறான்.
ஆழ்வார் ஸாதிக்கிறார்: “நீ வேம்பாக உன்னை ஆக்கிக்கொண்டு அடியேனை பரீட்சிக்கலாம். அப்பொழுதும் அடியேன் வேறொரு பலனையோ அதனை அளிக்கவல்ல தேவதையையோ நாடமாட்டேன். தலைவன் இனியன செய்தாலும் செய்யாதிருந்தாலும் அவன் மேல் எல்லையில்லா பதிவ்ரத்யம் கொண்ட தலைவியானவளுக்கு அவனையன்றி வேறு கதியில்லாதது போல அடியேன் உனக்கு வேம்பாயிட்டேனே என்னில் நான் வேம்பில் ஜீவித்து அதன் சாற்றை உண்டு வாழும் வேப்பம்புழு ஆவேன். நீ கரும்பானால் கருப்பம்புழுவாவேன். எம்பெருமானே! நான் உன்னிடத்தில் அடிமை கொண்டிருப்பது நீ கரும்பு போல இனியவனாக இருப்பதினாலேயே மட்டும் அன்றி நீ மிக இன்னாதவனாயிருப்பினும் உன்னையே விரும்பியிருப்பேன். இதுவே தாஸனான அடியேனின் ஸ்வரூபத்திற்கு லக்ஷணம்” என்று தலைக்கட்டுகிறார்.
இயற்கையில் கரும்பாயிருக்கிற நீ என் திறத்திலே வேம்பாக ஆனாலும் தேவரீரை நான் விடமாட்டேனென்றது போலவே, இயற்கையில் உனக்கு தாஸனாயிருக்கிற நான் அந்த தாஸ்யத்வம் மாறப் பெற்றாலும் உன்னைத் தவிர வேறொன்றை உபாயமாகக் கொள்ள மாட்டேன் என்பது இப்பாசுரத்தின் திரண்ட கருத்து.
திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்!
Arumaiana vilakkam. Amrutha swadhini yil Desikan “Ninnarulam Gadhi yendru Matrondrillen” engira pasuram idhaye vilakugirathu. Acharyan thiruvadigale charanam.
LikeLiked by 1 person