பஞ்சவடியில் பர்ணசாலை அமைக்கும்பொழுது, எம்பெருமான் ஸ்ரீராமன் கட்டளையிடுகிறான்:

ரமதே யத்ர வைதேஹீ த்வமஹம் சைவ லக்ஷ்மண |
தாத்ருசோ த்ருஷ்யதாம் தேச: ஸந்நிக்ருஷ்டஜலாசய: ||
ஆரண்யகாண்டம் 15-4
வநராமண்யகம் யத்ர ஜலராமண்யகம் ததா |
ஸந்நிக்ருஷ்டம் ச யத்ர ஸ்யாத்ஸமித்புஷ்பகுசோதகம் ||
ஆரண்யகாண்டம் 15-5
“லக்ஷ்மணா! நீர்நிலை அருகில் இருக்கக் கூடியதும், எந்த இடத்தில் சீதை மகிழ்ச்சியாக இருப்பாளோ, அதேபோல் நீயும் நானும் உகப்புடன் இருப்போமோ, அப்படிப்பட்டதான ஓர் இடத்தைத் தேடிக் கண்டுபிடி. அந்த இடம் மரங்கள் அடர்ந்து அழகாக இருக்க வேண்டும் நீர்வளம் உள்ளதாக இருக்க வேண்டும். அருகிலேயே சமித்து, மலர்கள், தர்ப்பை, நல்ல தீர்த்தம் கிடைக்கும்படியாக இருக்க வேண்டும்.” என்றான்.
அதற்கு லக்ஷ்மணன் பதிலளிக்கிறான்:
பரவாநஸ்மி காகுத்ஸ்த த்வயி வர்ஷசதம் ஸ்திதே |
ஸ்வயம் து ருசிரே தேசே க்ரியதாமிதி மாம் வத ||
ஆரண்யகாண்டம் 15-7
“இராமா! நான் காலமெல்லாம் தங்கள் அடிமையாக இருப்பவன். அதனால் உனக்குப் பிடித்தமான இடத்தைத் தேர்ந்த்தெடு என்று தாங்கள் கூறுவது முறையல்ல. எந்த இடத்தில் தங்கள் மனம் ஈடுபடுகின்றதோ அதைச் சுட்டிக்காட்டி, இங்கே பர்ணசாலையைக் கட்டு என்று எனக்கு ஆணையிடுங்கள்” என்று விண்ணப்பித்து தான் ஸ்வதந்த்ரன் அல்லன் என்றும் அவ்வாறு ஸ்வதந்த்ரமாக செய்யும் கைங்கர்யம் நிறம் பெறாது என்றும் ஸ்தாபித்து, மேலும்,
பவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா கிரிஸாநுஷு ரம்ஸ்யதே |
அஹம் ஸர்வம் கரிஷ்யாமி ஜாக்ரதஸ் ஸ்வபதஸ்சதே ||
அயோத்யாகாண்டம் 31-25
“நீர் வைதேஹியுடன் கூட மலைத்தாழ்வரைகளில் விளையாடுவீர்; அடியேன் நீர் விழித்துக் கொண்டிருக்கும்போதும் தூங்கும்போதும் உமக்கு எல்லா அடிமைகளையும் செய்வேன்.” என்று தன் சேஷத்வத்தை திருக்கைத்தொட்டு வெளிப்படுத்தினார் இளையபெருமாள்.
Leave a Reply