அவதீர்ய சதுர்விதம் புமர்த்தம்பவதர்த்தே விநியுக்த ஜீவித: ஸந் | லபதே பவத: பலாநி ஜந்து:நிகிலாந் யத்ர நிதர்ஸநம் ஜடாயு: ||
Month: Oct 2020
தேனே மலரும் திருப்பாதம்!
அந்நாளில் த்ரிவிக்ரமனாய் உயர்ந்து மூவுலகையும் அளந்து தன் சர்வசக்தித்வத்தை நிர்தாராணம் பண்ணினான் பெருமான். அவ்வல்லமையைக் கண்டு மோஹித்த ஆண்டாள் ஓங்கி உலகளந்த உத்தமன், அம்பர மூடறுந்தோங்கி உலகளந்த உம்பர் கோமான், அன்று இவ்வுலகம் அளந்தாய் என்று அவன் திருவடியின் மேன்மையை திருப்பாவையில் மீண்டும் மீண்டும் அநுபவிக்கிறாள். ஸ்வாமி நம்மாழ்வாரோ “ஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்” என்று அடியவர்களை ஆட்கொண்டு ரக்ஷிக்க எம்பெருமான் உபாயமாக தன் திருவடியையே தந்தருளுகிறான் என்று அத்திருவடி தொழுதெழுகிறார். வானவர்களின் தலையை அலங்கரிக்கும் அத்திருப்பாதங்களை ஸ்பர்ஸித்துத் தாங்கும் பாதுகைகளின் பெருமையை லக்ஷக்கணக்கான ஸ்லோகங்களால் விவரித்தாலும் அதன் மஹிமையை முழுவதுமாகப் பாடித் தலைக்கட்ட முடியாது என்று ஸ்வாமி தேசிகன் ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரத்தில் அருளுகிறார்.
சீதக்கடலுள் அமுதன்ன தேவகி
கோதைக் குழலாள் அசோதைக்குப் போத்தந்த
பேதைக் குழவி பிடித்துச் சுவைத்துண்ணும்
பாதக் கமலங்கள் காணீரே பவளவாயீர்! வந்து காணீரே
பெரியாழ்வார் திருமொழி 1-2-1
அப்படியிருக்க அவ்வைகுந்தக் குட்டனோ கோவலர் குட்டனாக நிகழ்த்திக் காட்டிய திவ்ய சேஷ்டிதங்கள் தான் எப்படிப்பட்டவை!
உன் திருப்பாதங்களை நீ சுவைத்துக் கொண்டிருப்பது ஆழ்வார்கள் “தேனே மலரும் திருப்பாதம்” என்று அவற்றை ஏற்றுவதாலா அல்லது அறிவொன்றுமில்லாத ஆயர்குலத்தில் தோன்றியதால் அக்குலத்திற்குத் தகுந்த செயல்களைச் செய்யவேண்டுமென்பதாலா அல்லது ப்ரளய காலத்திலே நீ உன் திருவயிற்றில் ஒளித்து வைத்த எல்லா வஸ்துக்களையும் உஜ்ஜீவிக்கவேண்டுமென்பதாலா இல்லை அவை நீ விழுங்கிய மண் கட்டிகளைக் கரைப்பதற்கான மருந்தா மாயோனே(நெய்யூண் மருந்தோ மாயோனே)?
விண்ணவரும் மண்ணவரும் விரும்பும் வெற்பு
பரமபதத்திலே கைங்கர்யஸாம்ராஜ்யத்துக்கு அதிபதியாய் இருப்பினும் தன் பரத்வ ஸ்வரூபத்தை மறைத்துக் கொண்டு தன்னைச் சரணடையும் சேதனர்களின் மேல் கொண்ட பக்ஷபாதத்தினால் தயையே திருவுள்ளமாய், அவர்கள் பற்றுவதற்கு ஹேதுவாய் “ஸ்ரீவைகுண்ட விரக்தாய ஸ்வாமி புஷ்கரணீ தடே” என்றபடி ஸ்ரீவைகுந்தத்தில் இருந்து இ(ற)ரங்கி வந்து, ஸ்ரீநிவாஸனாக திருமலையில் நித்யவாஸம் செய்கிறான். அப்பெருமானின் பிரிவைப் பொறுக்க மாட்டாது நித்யரும் கூட தேஸோசிதமான தேஹங்களைப் பரிக்ரஹித்துக்கொண்டு திருமலையிலே வந்து அவனுக்கு நித்யகைங்கர்யங்கள் பண்ணுகின்றனர்.
கண்ணாவான் என்றும், மண்ணோர்விண்ணோர்க்கு,
தண்ணார் வேங்கட, விண்ணோர் வெற்பனே
திருவாய்மொழி 1-8-3
திருமலையானது மண்ணவர்க்கும் விண்ணவர்க்கும் பொதுவான தலமாகவும் அம்மலையிலே வீற்றிருக்கும் திருவேங்கடவன் இருதலையார்க்கும் பொதுவாய் நிற்கிறான் என்று ஸ்வாமி நம்மாழ்வார் அவனின் பரத்வத்தையும் ஸௌலப்யத்தையும் மங்களாசாஸனம் பண்ணுகிறார். திருவேங்கடவன் எண்ணற்ற திருக்கல்யாண குணங்களை உடையவனாயிருப்பினும் அவனுடைய மற்ற குணங்களனைத்தும் தரம் பெறுவது அவன் தயையாலேயே என்பதனை “தயா சதகம்” என்னும் ஸ்தோத்ரத்தின் மூலம் ஸ்வாமி தேஶிகன் நிர்தாரணம் பண்ணுகிறார். “மந்திபாய் வடவேங்கடமாமலை வானவர்கள் சந்தி செய்ய நின்றான்” என்று திருப்பாணாழ்வாரும் விண்ணவரும் மண்ணவரும் விரும்பும் வெற்பு என்று ஸ்வாமி தேஶிகனும் பாசுரமிட்டது இங்கு அனுசந்திக்கத்தக்கது.