எம்பெருமானின் பரத்வத்தையயும் ஸ்வாமித்வத்தையும் திருவாய்மொழியில் அநுபவித்துக் கொண்டு வந்த ஸ்வாமி நம்மாழ்வார் ஆயர்குலத்துக்குச் சுலபனாயும் அவனை அறியாத கம்ஸ, துரியோதனாதிகளுக்கு அரியனாயும் திருவவதரித்த கண்ணபிரானின் மேன்மையையும் எளிமையையும் எண்ணி உள்ளம் உருகி கரைந்து எத்திறம்! எத்திறம் என்று பல மாதங்கள் மோஹித்துக்கிடந்தார்.
பத்துடை அடியவர்க்கு எளியவன், பிறர்களுக்கரிய
வித்தகன் மலர்மகள் விரும்பும் நம் அரும்பெறலடிகள்
மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடையாப்புண்டு
எத்திறம்! உரலினொடு இணைந்திருந்தேங்கிய எளிவே
திருவாய்மொழி 1-3-1
வெண்ணெய் களவு செய்கிற தன்னை யசோதைப்பிராட்டி அடிக்கடி தாம்பினால் கட்டி விடுகிறாளென்று வீட்டிலுள்ள அனைத்து கயிறுகளையும் துண்டு துண்டாக அறுத்து வைத்தாலும் அவற்றை அவள் ஒன்றோடொன்று முடிபோட்டு ஒரு கயிறாக்கி அதுகொண்டு கண்ணபிரானைக் கட்ட முற்படுவள்; அப்படி கட்டும்போது தன் திருமேனிக்கு சுற்று போராமல் அக்கயிற்றினால் கட்ட முடியாதபடி எளிதில் தன்னைத் தப்பித்துக்கொள்ள வல்லவனாயினும் தனது ஸௌலப்யத்தை வெளியிடுவதற்கென்றே பரத்வநிலையைத் தவிர்த்து மநுஷ்ய ஸஜாதீயனாக ஒரு சுற்றுக்கும் போராத தாம்பு இரண்டு மூன்று சுற்றுக்குப் போரும்படி தன் பருத்த திருமேனியைச் சுருக்கி அமைத்துக் கொண்டு ‘கண்ணி நுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப்பண்ணிய பெருமாயன்” என்றபடி உரலோடு கட்டுண்டு இருப்பனாம். மேலும் ஆய்ச்சி அடிக்க தன்னுடைய ஸௌசீல்ய ஸௌலப்ய குணங்கள் நன்கு விளங்கப்பெற்று அவதார ப்ரயோஜநம் நிறைவேறப்பெற்றதை எண்ணி முகமலர்ந்திடுவனாம் கண்ணபிரான்.
பாயாதீஷத்பிரசலிதபதோ நாபகச்சன்ன திஷ்டன் | மித்யகோபஸ்ஸபதி நயனே மீலயன் விஷ்வகோப்தா ||
கோபால விம்ஸதி – 5
இடையன் வேடம் தரித்து வெண்ணெயைத் திருடி தன் தாயிடம் அஞ்சி நடுங்கும் கபட நாடகத்தை நடத்தும் இவனே தரணியனைத்தையும் ரக்ஷிப்பவன் என்று கொண்டாடுகிறார் ஸ்வாமி தேசிகன். “அகில புவந ரக்ஷா கோப வேஷஸ்ய விஷ்ணோ:” என்றபடி.